தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரபுடைமையைக் கட்டிகாக்க உதவித் திட்டம் அவசியம்

3 mins read
00ec07b2-d7fa-4bc4-ba42-551b7c2f7790
கோமள விலாஸ். - படம்: தமிழ்முரசு

சிங்கப்பூரில் இந்தியப் பாரம்பரியத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் முக்கிய இடங்களில் ஒன்று லிட்டில் இந்தியா.

இந்திய மரபுடைமையைக் கண்முன் நிறுத்தும் பல வணிகங்களை லிட்டில் இந்தியாவில் எங்கும் காணலாம். சில வணி[Ϟ]கங்கள் காலத்தின் மாற்றங்களை எதிர்கொண்டபோதும், உறுதியாக நிற்கின்றன.

இந்தியர்களின் பழைய கதைகளைச் சொல்லும் மரபுடைமை வணிகங்களை தொடர்ந்து உயிருடன் வைத்திருக்க தேசிய மரபுடைமைக் கழகம் அண்மையில் ‘சிங்கப்பூர் மரபு தொழில் திட்டம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அந்தத் திட்டம் இப்போதைய சூழலுக்கு அவசியமானது என்று லிட்டில் இந்தியாவின் மரபுடைமை வணிகங்கள் பரவலாகக் கருதுகின்றன.

கைகொடுக்கும் உதவித் திட்டம் 

ஜப்பானியர்களின் ஆட்சிக் காலத்தைப் பார்த்து வளர்ந்த வணிகங்களைச் சிங்கப்பூரில் இப்போது பார்ப்பது கொஞ்சம் அரிது. எஞ்சிய சில வணிகங்களில் இன்றும் இயங்கிக்கொண்டிருப்பது சிராங்கூன் சாலையில் உள்ள சி சுப்பிரமணியம் மளி[Ϟ]கைக்கடை.

முருகேசன் சுப்பிரமணியம்.
முருகேசன் சுப்பிரமணியம். - படம்: அனுஷா செல்வமணி

கிட்டத்தட்ட 80 ஆண்டுகால மரபு கொண்ட இக்கடை சிராங்கூன் சாலைக்கு இடமாறிய பின்னர் ஏறத்தாழ 34 ஆண்டுகளாக செயல்படுகிறது.

அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்பு நல்ல செய்தி என்றார் சி சுப்பிரமணியம் மளிகைக் கடையின் உரிமையாளர் முரு[Ϟ]கேசன் சுப்பிரமணியம், 61.

சகோதரர்கள் இணைந்து நடத்திவரும் கடையை எதிர்காலத்தில் தன் மகன் எடுத்து நடத்த வாய்ப்புகள் இருந்தாலும் அதற்கு ஓரளவுதான் சாத்தியம் உள்ளதாக முருகேசன் சொன்னார்.

“இப்போது இரண்டு, மூன்று தலைமுறையினரைக் கொண்ட வணிகங்களைப் பெரிதாகக் காண முடிவதில்லை. இது போன்ற திட்டம் இருந்தால்தான் அடுத்து என்ன செய்யலாம் என்று எங்களால் திட்டமிட முடியும்,” என்று முருகேசன் கூறினார்.

வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்தாலும் போட்டித்தன்மை அதிகம் என்றார் அவர்.

திரு. முருகேசனைப் போல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வேறு சில வணிகங்களை நடத்தி வருபவர்களும் திட்டத்தை ஆதரிக்கின்றனர்.

சிராங்கூன் சாலையில் கிட்டத்தட்ட 78 ஆண்டுகளாகக் கோலோச்சி வரும் உணவகம் கோமள விலாஸ்.

அதன் உரிமையாளர் திரு. ராஜகுமார் திட்டம் பற்றி அறிவிப்பதற்கு முன்பே தொழிலை மேம்படுத்துவது குறித்து யோசிக்க தொடங்கியதாகச் சொன்னார்.

அண்மை காலமாகப் போட்டித்தன்மையால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெரிதும் சரிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தேசிய மரபுடைமைக் கழகத்தின் திட்டம் மூலம் வணிகம் நிலைத்திருக்க முடியும் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

திட்டத்திற்கு முன்மொழிய விருப்பம் தெரிவித்த மற்றொருவர் அணிமணி பொற்சாலை நகைக்கடையின் இயக்குநர் சுப்பையா ராமு, 59.

அணிமணி பொற்சாலை.
அணிமணி பொற்சாலை. - படம்: அனுஷா செல்வமணி

கிட்டத்தட்ட 77 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இக்கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.

“இதுபோன்ற மரபுடைமைத் திட்டத்தில் சேரும்போது வாடிக்கையாளர்கள் இன்னும் நம்பிக்கையுடன் கடையை நாடிவருவர்,” என்றார் திரு ராமு.

தொழில் ரீதியாக இதர நகைக்கடைகள் குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த கடைகளுடன் போட்டி போடுவது இயல்புதான் என்றபோதும் பாரம்பரியத் தொழில்களுக்குத் திட்டம் தனி அங்கீகாரம் அளிக்கும் என்று திரு ராமு கருதுகிறார்.

பாரம்பரிய வர்த்தகமாக இருந்தாலும் திட்டம் மூலம் கடையை நவீனமயமானதாக வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்றவாறு மாற்றியமைக்க திரு ராமு விரும்புகிறார்.

நிதிதான் முக்கியம்

திட்டத்தில் கடையை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் நிதியாதரவும் முக்கியம் என்று வணிகங்கள் குறிப்பிட்டன.

டன்லப் சாலையில் அமைந்துள்ள வாசு வளையல் கடையின் தற்போதைய உரிமையாளர் கோவிந்தசாமி பக்கிரிசாமி, 71, தனக்குப் பிறகு இந்தத் தொழிலை தொடர யாரும் இல்லை என வருந்துகிறார். உயரும் வாடகையும் மற்றொரு கவலை என்றார் அவர்.

“இத்திட்டத்திற்கு முன்மொழிந்தாலும் அது எனக்குப் பயனளிக்காது. வாடகையும் கட்டுப்படியாகும் வகையில் இல்லை,” என்றார் அவர்.

பொதுமக்களின் பார்வையில் 

லிட்டில் இந்தியாவின் மரபுடைமை வணிகங்களை உயிருடன் வைத்திருக்க உதவும் வாடிக்கையாளர் சிலர் தங்களுக்குப் பிடித்த சில மரபுடைமை வணிகத்தை முன்மொழிய விரும்புகின்றனர்.

“என்னை பொறுத்தவரை நான் பத்தர் கடைகளைத் திட்டத்துக்கு முன்மொழிவேன். நவீனமடைந்து வரும் இந்தச் சூழலில் யாரும் பெரிதாக பத்தர் கடைகளுக்குச் செல்வதில்லை. அது நம் பாரம்பரியத்தில் பின்னிப்பிணைந்துள்ள ஒன்று,” என்றார் திருமதி ரத்தினம், 56.

“மரபுடைமை என்றால் எனக்கு முதலில் தோன்றுவது செல்வி ஸ்டோர்ஸ். அவர்கள் பல காலமாக ஆலை நடத்தி வருகிறார்கள். தரமான தூள் வகைகளை நாம் அவர்களிடம் தான் வாங்குகிறோம். இவர்களை முன்மொழிந்து அத்திட்டத்தில் அவர்கள் சேர்ந்தால் நன்றாக இருக்கும்,” என்று திருவாட்டி காளியம்மாள், 75, கூறினார்.

திட்டத்தில் என்ன உதவி காத்திருக்கிறது

பாரம்பரிய வணிகங்கள் தங்களையே திட்டத்திற்கு முன்மொழியலாம். பொதுமக்களும் நமது மரபுடைமை சார்ந்த வணிகங்களைத் திட்டத்துக்கு நியமனம் செய்யலாம்.

தகுதிபெறும் தொழில்கள் தேசிய மரபுடைமைக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படும்போது அவர்களுக்கு தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு போவதற்கான ஆதரவு கிடைக்கும்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.nhb.gov.sg/What-We-Do/Our-Work/Sector-Development/SG-Heritage-Business-Scheme நாடலாம்.

குறிப்புச் சொற்கள்