சவால்களைச் சமாளிக்க ஒன்றிணைந்து செயல்படும் இந்திய முஸ்லிம் இளையர்கள்: ஃபைஷால் இப்ராஹிம்

2 mins read
116e3ad6-3500-4e32-be98-f4c9f1189a35
இந்திய முஸ்லிம் இளையர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம்.  - படம்: கீர்த்திகா ரவீந்திரன் 

இளையர்கள் நாளைய தலைவர்கள் மட்டுமல்லர், மாற்றத்தை வழிநடத்துபவர்கள் என்றும் குறிப்பாக, இந்திய முஸ்லிம் இளையர் சமூகம் தனிப்பட்ட சவால்களைக் கையாண்டாலும் மிக ஒன்றிணைந்த சமூகமாகத் திகழ்கிறது என்றும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் கூறியுள்ளார்.

“இன்றைய இளையர்கள் வேறோர் உலகச் சூழலில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். நிச்சயமற்ற சவால்களைச் சமாளிக்க அரசாங்கம் தொடர்ந்து உதவும்.

“அதில் இந்திய முஸ்லிம் இளையர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரையும் அரசாங்கம் உள்ளடக்கும்,” என்று அமைச்சர் முஹம்மது ஃபைஷால் தெரிவித்தார்.

சிங்கப்பூர் இஸ்லாமிய நடுவத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) நடைபெற்ற இந்திய முஸ்லிம் இளையர் மாநாட்டில்  உரையாற்றும் போது அவ்வாறு அமைச்சர் ஃபைஷால் கூறினார்.

மாநாட்டில் அமைச்சர் ஃபைஷாலுடன் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக், கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் இருவரும் கலந்துகொண்டனர்.

கிட்டத்தட்ட 150 இந்திய முஸ்லிம் இளையர்கள், சமூக உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இந்திய முஸ்லிம் சமூக வழிகாட்டுதல் குழு ((IMCSC), இந்திய முஸ்லிம் இளையர்கள் அமைப்பு (IMYouth), சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத் தெற்கு மாவட்ட அலுவலகம் இணைந்து மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தன.

“சமய நம்பிக்கை ஒருபுறமும் மொழி, பண்பாடு மறுபுறமும் இந்திய முஸ்லிம் அடையாளத்தின் இரட்டைத்தன்மைக்குத் தனித்துவம் சேர்க்கிறது,” என்றார் முயிஸ் மன்ற உறுப்பினரும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஃபிர்தௌஸ் டி’குரூஸ்.

இந்திய முஸ்லிம் இளையர்கள் எதிர்நோக்கும் மனநலம் குறித்த சவால்கள், மணவாழ்க்கை, நிதி நிர்வாக வழிமுறைகள், இந்திய முஸ்லிம் அடையாளம் போன்ற சில முக்கியச் சவால்களைப் பற்றிக் கருத்துரைக்கும் பல்வேறு கலந்துரையாடல்களில் இளையர்கள் பங்கேற்றனர்.

குறிப்பாக, திருமணம் என்ற தலைப்பையொட்டி இந்திய முஸ்லிம் இளையர்களின் எதிர்பார்ப்புகள், அடையக்கூடிய நன்மைகள், சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவின் பங்கு போன்றவை குறித்த ஆழமான கேள்விகளை இளையர்கள் எழுப்பினர்.

பிற்பகலில், நாடாளுமன்ற உறுப்பினர் சையது ஹருண் அல்ஹப்ஷி முன்னிலையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெற்ற ‘எம்கியுப்’ மலாய்/ முஸ்லிம் இளையர் விழா 2025ல் மலாய்/ முஸ்லிம் இளையர் மேம்பாட்டை வலுப்படுத்த ஒரு பணிக்குழு அறிமுகம் காணும் என்று அமைச்சர் ஃபைஷால் குறிப்பிட்டிருந்தார்.

“தேசிய ‘எஸ்ஜி’ இளையர் திட்டத்தை ஆதரிக்கும் வகையில் இதுபோன்ற முயற்சி இளையர்களை ஒன்றிணைக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

பல்வேறு சவால்களுக்கான தீர்வுகள் நிச்சயமாக ஒரே நாளில் கிடைத்துவிடாது என்றார் டாக்டர் ஹமீது ரசாக்.

“இருப்பினும் இத்தகைய முன்முயற்சி மாற்றம், தீர்வுகள், தக்க பகுத்தறிவு போன்றவற்றுக்கு வழிவகுக்கும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்