மரக்கட்டை, நெகிழி, எஃகு ஆகியவற்றால் செய்யப்பட்ட வெவ்வேறு தப்லாக்களை வரிசையாக அடுக்கி வைத்திருப்பார் கோவின் டான். அவர் வைத்திருக்கும் ஒவ்வொரு தப்லா கருவியும் இந்தியாவிற்குச் சென்று அவர் அதை வாங்கி வந்ததன் நினைவுகளைச் சுமந்து நிற்கிறது.
சீன இனத்தைச் சேர்ந்த கோவின், வட இந்தியப் பாரம்பரிய இசைக்கருவியான தப்லாவை 12 வயது முதல் வாசித்து வருகிறார்.
தொடக்கத்தில் தப்லா வாசிப்பில் விருப்பமில்லாவிட்டாலும், தந்தையின் கட்டாயத்தினால் சிதார், பியானோ, கித்தார் எனப் பல்வேறு இந்திய இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார் 34 வயது கோவின் டான்.
இந்திய இசைக்கலைஞர்களிடம் முறைப்படி சிதார் கற்ற இவரது தந்தை கென்னி டான், மகனுக்குக் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்து இசையுலகில் அவரை ஈடுபடுத்தினார்.
ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்றும் மற்ற இசைக்கருவிகளில் கிடைக்காத மனநிறைவும் வெற்றியும் தப்லாவில் இவருக்குக் கிடைத்தன. 2006ஆம் ஆண்டு தேசிய அளவிலான இந்திய இசைப் போட்டியில் வென்று, தன் 14வது வயதில் அவ்விருதைப் பெற்ற முதல் இந்தியரல்லாதவர் என்ற பெருமையை கோவின் பெற்றார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழ் முரசிடம் பேசிய கோவின், “எனக்குப் பெரிய திறமை இருப்பதாக நான் நினைக்கவில்லை. கடின உழைப்பு மட்டுமே இதற்குக் காரணம்,” என்றார் .
பள்ளி, பயிற்சி, இரவு உணவு, மீண்டும் பயிற்சி, உறக்கம் என ராணுவக் கட்டுப்பாட்டுடனேயே அவரது இல்லம் இயங்கியது. அவ்வகையில், “விரும்பிச் செய்யும் வேலையை நேசிக்க வேண்டும்,” என்ற தந்தையின் அறிவுரை இன்றும் அவரது இசைப் பயணத்திற்கு உரமூட்டி வருகிறது.
ஒரு சீனச் சிறுவன் தப்லா வாசிப்பது பலரிடத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவது இயல்புதான். இருப்பினும், கோவினுக்குத் தனது இசைப் பயணத்தில் இன எல்லைகள் ஒருபோதும் தடையாகத் தோன்றவில்லை.
பள்ளியில் ‘ராதா கோவிந்த தாஸ்’ என்ற இவரது முழுப் பெயரை அழைத்த ஆசிரியர், கையை உயர்த்தியது ஒரு சீனச் சிறுவன் என்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த சம்பவத்தைக் கோவின் நினைவுகூர்கிறார்.
பின்னணிக்கு மாறுபட்டதாகத் தோன்றும் ஒரு துறையை ஒருவர் தேர்ந்தெடுக்கும்போது, மக்கள் அவர்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்து விடுவதைச் சுட்டிக்காட்டிய கோவின், “இசை அனைவருக்கும் பொதுவானது; அது எப்போதும் அப்படித்தான் இருக்க வேண்டும்” என்றார்.
தப்லாவிற்கு சுருதி சேர்ப்பது குறித்துப் பேசிய கோவின், “தப்லா என்பது சுருதி கூட்டி வாசிக்கப்படும் கருவி. சுருதி சேர்க்கும்போது உடனடியாகச் சரியான நாதம் வராது. ஒட்டுமொத்தத் தப்லாவும் ஒரே சுருதியில் இணையும் வரை தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்,” என்றார்.
பல்லினக் கலாசாரத்தைப் போற்றும் நம் நாட்டிற்குப் பொருந்தும் வகையில், “இறுதியில் நாம் எங்குச் சென்றடைய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்,” என்று கோவின் குறிப்பிட்டார்.
செய்தி: ரீமா டுடெகுலா
தமிழாக்கம்: விஷ்ருதா நந்தகுமார்


