முதல் அழகுராணி போட்டியிலேயே மாபெரும் மகுடம்

முதல் அழகுராணி போட்டியிலேயே மாபெரும் மகுடம்

3 mins read
6284efc7-ab48-4a73-a817-7c0c7fa225c8
இவ்வாண்டின் ‘மிஸ் வோர்ல்டு சிங்கப்பூர்’ அழகி ஐஸ்வர்யா நிக்கோல், 23. - படம்: ஐஸ்வர்யா நிக்கோல்

சிறுவயதிலிருந்தே உயரம் அதிகமாக இருந்ததால் உற்றார் உறவினர் அனைவரும் ஐஸ்வர்யா நிக்கோலை அழகுராணிப் போட்டிகளில் கலந்துகொள்ளும்படி ஊக்குவித்தனர்.

பல்லாண்டுகளாக ஒத்திவைத்துவந்த முயற்சியை இவ்வாண்டு செய்து முடிக்க எண்ணிய அவர் கலந்துகொண்ட முதல் போட்டி ‘மிஸ் வோர்ல்டு சிங்கப்பூர்’.

முதல் போட்டியிலேயே வெற்றிக்கனியை எட்டிப் பறித்துள்ளார் 23 வயதான ஐஸ்வர்யா.

நெருங்கியவர்களின் ஆதரவு பக்கபலமாக இருந்தாலும், போட்டியில் தமக்காகவே கலந்துகொண்டதாக அவர் கூறினார்.

“கடந்த ஏழு ஆண்டுகளாகத் துணைப்பாட ஆசிரியராக மாணவர்கள் பலருக்குக் கற்பித்து வருகிறேன். பெரும்பாலான வேளைகளில் வாரத்தில் ஏழு நாள்களும் வகுப்புகள் இருக்கும்,” என்றார் அவர்.

“அவ்வாறு செய்து வந்த நிலையில், எனக்காக நான் செலவிடும் நேரமும் கவனமும் குறைவதை உணர்ந்தேன். அந்நிலையை இவ்வாண்டு மாற்ற வேண்டுமென்று எடுத்த முடிவுகளில் இந்தப் போட்டியும் ஒன்று,” என்று அவர் கூறினார்.

‘மாடலிங்’ துறையிலும் அழகுராணிப் போட்டிகளிலும் எவ்வித முன்னனுபவமும் இல்லாத அவருக்குக் கடினமான நெடும்பயணம் காத்திருந்தது அப்போது தெரியவில்லை.

தொடக்கத்தில் மற்ற போட்டியாளர்களைக் கண்டு அச்சம் கொண்டதாக அவர் கூறினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“என்னுடன் போட்டியிட்ட பலர் அழகுராணிப் போட்டிகளுக்காக பல ஆண்டுகள் பயிற்சி செய்து தங்களைத் தயார்செய்துகொண்டவர்கள்.

“அவர்களுக்குத் தெரிந்த பல உத்திகளும் நுணுக்கங்களும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், அவற்றைக் கற்றுக்கொள்ள அயராது உழைத்தேன். அதன் பலனாகப் போட்டியை வென்றதில் மட்டற்ற மகிழ்ச்சி,” என்றார் அவர்.

மெய்யான அழகு

அழகுராணிப் போட்டிகளில் வெளித்தோற்றம், ஆடைகள் ஆகியவற்றைவிட ஒருவரின் குணாதிசயங்களும் நம்பிக்கையுமே முக்கியமென அப்போட்டியின்வழி ஐஸ்வர்யா உணர்ந்துகொண்டார்.

உதவி தேவைப்படுவோருக்கு உதவும் மனமும் பரிவுமே அழகுராணிகளுக்கு மிகவும் முக்கியமென அவர் நம்புகிறார்.

அந்த நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டே போட்டியில் அவரது சமூக விழிப்புணர்வுப் பிரசாரம் உருவானது.

தமது பாட்டியின் இறுதிக்காலத்தில் அவருடன் கூடுதல் நேரம் செலவிடாமல் போனதில் ஐஸ்வர்யாவுக்கு மிகப்பெரிய வருத்தம்.

“சிறு வயது முதல், நான் என் பாட்டியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன். ஆனால், 2020லிருந்து அவர் இறந்த 2022 வரை வேலைப்பளு காரணமாக அவருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை,” என்றார் அவர்.

பாட்டியின் மறைவால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, தமது சமூக விழிப்புணர்வுப் பிரசாரத்தைப் பராமரிப்பு இல்லங்களை மையமாகக் கொண்டு வடிவமைத்தார்.

பராமரிப்பு நட்புப் பயிற்சியில் ஈடுபட்டு, தனக்கு அணுக்கமானவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து, அவர்களையும் அம்முயற்சியில் ஈடுபட ஊக்குவித்தார்.

முதியோர், உதவி தேவைப்படுவோர் அனைவருக்கும் உதவும் முயற்சிகளிலும் ஐஸ்வர்யா ஈடுபட்டு வருகிறார்.

கடந்து வந்த பாதை

தற்போது தன்னம்பிக்கையுடன் வலம் வந்தாலும், ஐஸ்வர்யாவின் பயணம் முன்னர் மன உளைச்சல் நிறைந்ததாகவே இருந்தது.

பெரனாக்கான் தந்தைக்கும் தமிழ்பேசும் தாய்க்கும் பிறந்த ஐஸ்வர்யா முதல் முறையாகப் போட்டியிட்ட அழகுராணி போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.
பெரனாக்கான் தந்தைக்கும் தமிழ்பேசும் தாய்க்கும் பிறந்த ஐஸ்வர்யா முதல் முறையாகப் போட்டியிட்ட அழகுராணி போட்டியில் வெற்றிபெற்றுள்ளார். - படம்: ஐஸ்வர்யா நிக்கோல்

பெரனாக்கான் தந்தைக்கும் தமிழ்ப் பேசும் தாய்க்கும் ஒற்றை மகளான ஐஸ்வர்யா, சிறுவயதில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

பள்ளியில் பல வேளைகளில் அடையாளச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“நான் சற்று மாநிறமாக இருப்பதால் பள்ளியில் சீன வகுப்புக்குச் செல்லும்போது சக மாணவர்கள் என்னைப் புதுமையாகப் பார்ப்பார்கள்.”

“பின்னாளில், பெரும்பாலானோரால் என் அடையாளத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், சிறு வயதில் பலரும் என்னை வேறுபடுத்திப் பார்த்தது வருத்தமளித்தது,” என்று அவர் சொன்னார்.

மற்றொரு பரிமாணம்

அழகுராணி, துணைப்பாட ஆசிரியர் ஆகியவை மட்டுமன்றி ஐஸ்வர்யாவுக்குத் தொழில்முனைவர் என்ற மற்றொரு பரிமாணமும் உள்ளது.

‘ஸ்பீடீ’ஸ் டூடுல்ஸ்’ என்ற விரைவு ஓவியக் கலை நிறுவனத்தையும் சிறிய ஊடகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொழில் பங்காளிகளுடன் இணைந்து இவர் வழிநடத்தி வருகிறார்.

நிகழ்ச்சிகளில் நிழற்படங்களுக்கு மாறாகக் கையால் வரையப்பட்ட ஓவியங்களை வழங்குகிறது ‘ஸ்பீடீ’ஸ் டூடுல்ஸ்’ நிறுவனம்.

அந்நிறுவனத்தில் இளைய ஓவியர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று ஐஸ்வர்யா குறிப்பிட்டார்.

அடுத்தகட்ட இலக்குகள்

தேசிய அளவிலான ‘மிஸ் வோர்ல்டு’ போட்டியை வென்றுள்ள ஐஸ்வர்யா ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியிலிருந்து செப்டம்பர் ஐந்தாம் தேதிவரை வியட்னாமில் நடக்கவுள்ள அனைத்துலகப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துப் போட்டியிடவுள்ளார்.

இதுவரை தனியாகவோ, நண்பர்களுடனோ பயணங்கள் சென்றிராத தமக்கு அது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்குமென அவர் கூறினார்.

“போட்டியில் எனது 100 விழுக்காட்டுப் பங்களிப்பை வழங்க உழைக்க வேண்டும் என்பது மட்டுமே தற்போது மனத்தில் உள்ளது. வெற்றி தோல்வியைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்,” என்ற ஐஸ்வர்யா, தமது குறிக்கோளில் கருத்தாக இருக்கிறார் .

குறிப்புச் சொற்கள்