கலைஞர்களை ஒன்றிணைக்கும் பிரம்மாண்ட விழா

கலைஞர்களை ஒன்றிணைக்கும் பிரம்மாண்ட விழா

2 mins read
8de5a24b-50dc-4e2e-a1ce-a130afd339da
‘எர்த் அண்ட் ஸ்ட்ரிங்ஸ்’ (Earth and Strings) நிகழ்ச்சி முற்றிலும் மொழிகளைக் கடந்து அனைத்து இனத்தவரும் ரசிக்கும் வண்ணம் இசைக் கருவிகளை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. - படம்: முதிதா ஆர்ட்ஸ்

சிங்கப்பூரின் கலைத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவும் உள்ளூர்க் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரவும் வாய்ப்பளிக்கும் நோக்கில் ‘முதிதா ஆர்ட்ஸ்’ அமைப்பு, முதிதா கலை விழா 2026க்கு ஏற்பாடு செய்துள்ளது.

2025ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, தன் முதல் நிகழ்ச்சியாக இந்தக் கலை விழாவை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.

ஜூலை 24 முதல் 26 வரை மூன்று நாள்களுக்கு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் பிஜிபி மண்டபத்தில் இவ்விழா நடைபெறவுள்ளது. மொத்தம் 7 அமர்வுகளாகப் பல்வேறு தனித்துவமான கலை நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறுகின்றன.

உள்ளூர்க் கலைஞர்களுக்கு அரிய மேடை

தனித்தனியாகச் செயல்படும் கலைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்குச் சிறந்த மேடையை அமைத்துக் கொடுப்பது இந்தக் கலை விழாவின் முக்கிய நோக்கமாகும்.

விழாவில் பங்கேற்கும் கலைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உள்ளூர்க் கலைஞர்கள். இவர்களுடன் இணைந்து இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்களும் நிகழ்ச்சி படைக்கவுள்ளனர்.

இந்தியச் சமூகத்திற்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த சிங்கப்பூர் மக்களுக்கும் நமது பாரம்பரியக் கலைகளின் சிறப்பை எடுத்துரைக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடனம், இசைக் கருவிகள், வாய்ப்பாட்டு எனப் பலதரப்பட்ட கலை வடிவங்கள் விழாவில் இடம்பெறுவதால், அனைத்து வகையான ரசிகர்களையும் அது ஈர்க்கும் எனக் கருதப்படுகிறது.

இவ்விழாவில் ஆங்கிலம், தமிழ், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளிலும் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

‘முதிதா ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் (நின்றிருப்போரில் இடமிருந்து) வி.கிருஷ்ணன், உத்தம் கிருபளானி, என்.சுப்பிரமணியம், (அமர்ந்திருப்போரில் இடமிருந்து) சௌந்தர்யா சுகுமார், பிரியலதா அருண்.
‘முதிதா ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் (நின்றிருப்போரில் இடமிருந்து) வி.கிருஷ்ணன், உத்தம் கிருபளானி, என்.சுப்பிரமணியம், (அமர்ந்திருப்போரில் இடமிருந்து) சௌந்தர்யா சுகுமார், பிரியலதா அருண். - படம்: முதிதா ஆர்ட்ஸ்

தனித்துவம் வாய்ந்த 7 நிகழ்ச்சிகள்

இவ்விழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு தனித்துவமான கூறுகளைக் கொண்டுள்ளது.

தொடக்க நிகழ்ச்சியான ‘எர்த் அண்ட் ஸ்ட்ரிங்ஸ்’ (Earth and Strings), கடம் மற்றும் முகச்சங்கு போன்ற அரிய கருவிகளை முதன்மைப்படுத்தி, முற்றிலும் பெண்களின் படைப்பாக அமையவுள்ளது.

இளையர்களைக் கவரும் வகையில் ‘சமகாமா’ (SamaGama), ‘சீசன்ஸ் விதின்’ (Seasons Within) ஆகிய நிகழ்ச்சிகள் ஒரு மணி நேர நிகழ்ச்சிகளாகப் படைக்கப்படவுள்ளன.
இளையர்களைக் கவரும் வகையில் ‘சமகாமா’ (SamaGama), ‘சீசன்ஸ் விதின்’ (Seasons Within) ஆகிய நிகழ்ச்சிகள் ஒரு மணி நேர நிகழ்ச்சிகளாகப் படைக்கப்படவுள்ளன. - படம்: முதிதா ஆர்ட்ஸ்

சமூகத்தின் ஈடுபாட்டையும் பொதுமக்களின் பங்களிப்பையும் ஊக்குவிக்க ‘வாட் சே யூ?’ (What Say You?) என்ற இலவசச் சமூக ஈடுபாட்டு நிகழ்ச்சிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

“பாரம்பரியக் கலைகளைக் காக்கும் பொறுப்பு அனைவருக்குமானது. எனவே, இது போன்ற கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு பங்களிப்பது அவசியம்,” என்றார் ‘முதிதா ஆர்ட்ஸ்’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சௌந்தர்யா சுகுமார், 73.

ஒவ்வோர் அமர்வுக்கும் தனித்தனியாக 30 முதல் 50 வெள்ளி வரையிலான விலையில் நுழைவுச்சீட்டுகள் கிடைக்கின்றன.

ஏழு கலை நிகழ்ச்சிகளையும் காண விரும்புவோருக்கு 125 வெள்ளிக்கு ‘சீசன் டிக்கெட்’ சலுகையும் வழங்கப்படுகிறது.

நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளவும் நிகழ்ச்சிகள் குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் mudithaarts.com.sg/Events என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்