வழிகாட்டிய தாத்தாவின் பாதையில் பேரன்

வழிகாட்டிய தாத்தாவின் பாதையில் பேரன்

2 mins read
cc95b512-16b8-40ec-b40a-21066196b3c6
மறைந்த தாத்தா டி. பாலசுந்தரம் (சுவற்றில் உள்ள படம்) தொடங்கிய ‘யூடூகேன்’ பயிற்சிக்கூடத்தை 24 வயது ரூபன் (வலது) தொடர்ந்து நடத்தி வருகிறார். ரூபனுடன் பயிற்சிசெய்யும் தேசிய குத்துச்சண்டை வீரரான முகமது ஹனுருடீன் ( இடது). - படம்: சுந்தர நடராஜ்

கோபத்தை அடக்கி ஆளத் தெரிந்தவர் நல்ல வீரர்.

தாத்தாவின் குத்துச் சண்டை வகுப்புகளில் 23 வயது குத்துச்சண்டைப் பயிற்றுவிப்பாளர் ரூபன் கற்ற முக்கியப் பாடம் அது.

தாத்தா தங்கவேலு பாலசுந்தரத்தின் நினைவைப் போற்றும் விதமாக அவர் நடத்திய குத்துச்சண்டைப் பயிற்சிக் கூடத்தை நடத்திவருகிறார் ரூபன்.

‘கோச் பாலா’ எனப் பரவலாக அறியப்பட்ட குத்துச்சண்டைப் பயிற்றுவிப்பாளர் பாலசுந்தரம், சிங்கப்பூரில் பல ஆண்டுகாலம் பயிற்றுவிப்பாளராகச் செயல்பட்டவர்.

சிங்கப்பூர் ஆயுதப்படையின் மின்னற்படை வீரராக இருந்து பின்னர் குத்துச்சண்டை கற்பிப்பதில் கவனம் செலுத்திய அவர், தேசிய குத்துச்சண்டை அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

பாலா மாணவர் தேசிய வீரர்

‘யூடூகேன்’ (U2cann) குத்துச்சண்டைப் பயிற்சிக்கூடத்தை 2002ஆம் ஆண்டு திறந்த பாலா, தமது கடைசிக் காலம் வரையில் மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

‘யூடூகேன்’ல் இணைப் பயிற்றுவிப்பாளராகச் செயல்படும் தேசிய குத்துச்சண்டை வீரரான முகமது ஹனுருடீன் 13 வயதில் திரு பாலாவின் வகுப்புகளில் சேர்ந்தார். இளவயதில் திசை தெரியாது திணறிய தமக்கு திரு பாலாவின் வழிகாட்டுதல் திருப்புமுனையாக அமைந்ததாக ஹனுருடீன் கூறினார்.

குத்துச்சண்டையில் நாட்டம் அதிகரிக்க, ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு அவர் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“திரு பாலா எனக்குப் பயிற்றுவிப்பாளராக மட்டுமன்றி, தந்தையைப்போல வாழ்விலும் வழிகாட்டினார். வெளிநாட்டுப் பயிற்சிகளின்போது அவர் உடன் வந்து ஊக்கம் கொடுத்தார்,” என்றார் 33 வயது ஹனுருடீன்.

“பயிற்றுவிப்பாளர் திரு பாலாவின் கண்டிப்பும் மாணவர்கள் மீது அவர் காட்டிய பாசாங்கில்லாப் பாசமும் அவரைச் சிறந்த வழிகாட்டியாகத் திகழச்செய்தது.

“முயற்சியைக் கை விடுபவனே தோல்வியைத் தழுவுவான்,” என்பது திரு பாலாவின் கூற்று. ஒழுக்கம், விடாமுயற்சி, நாட்டம் என்ற பண்புகளுக்குத் திரு பாலா எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் என்று ஹனுருடீன் குறிப்பிட்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திரு பாலா 2022ஆம் ஆண்டு தமது 67வது வயதில் காலமானார்.

இறுதிமூச்சை விடும்வரையில் பலதரப்பட்ட மாணவர்களைத் தமது பயிற்சிக் குழுவில் சேர்க்க அவர் முற்பட்டார். பாலினம், வயது போன்ற எந்தப் பாகுபாட்டையும் அவர் பார்க்கவில்லை என்பதை அவரது மாணவர்கள் நினைவுகூர்ந்தனர்.

தாத்தா வழியில் ரூபன்

தாத்தாவின் பெயரும் மரபும் அவருடனேயே மறைந்துவிடக்கூடாது என்பதில் பாலாவின் பேரனான 24 வயது ரூபன் உறுதிகொண்டுள்ளார்.

“தாத்தா காலமாகும் முன், ‘யூடூகேன்’ பயிற்சிக்கூடத்தை நான் தொடர்ந்து நடத்த வேண்டும் என விரும்பினார். சிக்கலான சூழ்நிலையினால் என்னால் உடனடியாக அப்பொறுப்பை ஏற்க முடியவில்லை. எனினும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பயிற்சிக்கூடத்தை வழிநடத்துகிறேன்,” என்றார் ரூபன்.

எட்டு வயதில் தாத்தாவிடம் முதன்முதலில் குத்துச்சண்டை கற்றுக்கொண்டபோது, அந்த விளையாட்டில் ரூபனுக்கு அதிக நாட்டம் இருக்கவில்லை.

காலப்போக்கில் ரூபனுக்குக் குத்துச்சண்டை பிடித்துவிட்டது. தாத்தாவிடம் பயிற்சி பெற்றதால் ஆர்வம் ஏற்பட்டதாகவும் ரூபன் கூறினார்.

“தாத்தாவின் பாதையில் செல்ல விரும்புகிறேன். சிங்கப்பூருக்காகப் போட்டியிட சிறந்த வீரர்கள் பலரை தாத்தா உருவாக்கியுள்ளார், நானும் அதையே செய்ய விரும்புகிறேன்,” என்றார் ரூபன்.

மாணவர்களை வீரர்களாக உருவாக்குவதுடன், அவர்களது முழுமையான வளர்ச்சியில் தாத்தா காட்டிய ஈடுபாட்டை ரூபனும் காட்ட விரும்புகிறார்.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுபயிற்சிமரபு