சனிக்கிழமை காலைப் பொழுதுகளைப் பலரும் குடும்பத்துடன் களிக்கும் வேளையில், கடந்த பத்து ஆண்டுகளாக அந்நேரத்தை உட்குரோவ் வட்டாரச் சிறார்களுக்காக அர்ப்பணித்து வருகிறார் திரு ராமநாதன் துரைசாமி, 54.
முழு நேரமாக உற்பத்தித் துறையில் தர உறுதிப்பாட்டு மேலாளராகப் பணிபுரியும் இவர், வார இறுதிகளில் ஐந்து வயதிலிருந்து 12 வயது வரையிலான பிள்ளைகளுக்குத் தொண்டூழியக் காற்பந்துப் பயிற்றுவிப்பாளராகச் செயல்படுகிறார்.
இவர் உட்குரோவ் சமூக விளையாட்டுக் கட்டமைப்பிற்கும் இந்திய நடவடிக்கைகள் செயற்குழுவிற்கும் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
பயிற்றுவிப்பாளர் பயணம்
தாம் காற்பந்துப் பயிற்றுவிப்பாளரானது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு என்றார் திரு ராமநாதன்.
“சிறு வயதிலும் பதின்ம வயதிலும் நிறைய காற்பந்து விளையாடினேன். ஆனால், இரு கால்களிலும் ‘ஏசிஎல்’ (ACL) தசைநார் கிழிந்த பின்னர் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
“அதன் பின்னர், ஒரு சில ஆண்டுகள் வேலையில் கவனம் செலுத்தினேன். ஒரு நாள் உட்லண்ட்ஸ் விளையாட்டுத் திடலில் நீண்டநாள் நண்பர்களுடன் காற்பந்து விளையாடுகையில், எனக்குப் பயிற்றுவிப்பாளராகும் ஆர்வம் உள்ளதா என அவர்கள் வினவினர்.
“எனக்கும் மீண்டும் காற்பந்துடன் இணையும் ஆர்வம் இருந்தது. அவ்வாரத்தில் இருந்தே சிறுவர்களுக்குப் பயிற்சியளிக்கத் தொடங்கினேன். அன்று தொடங்கிய பயணம் இன்றுவரை தொடர்கிறது,” என்று திரு ராமநாதன் கூறினார்.
சிறுவர்களுக்குத் தேவையான திறன்களைக் கற்பித்தல்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கு இணங்க, சிறு வயதிலேயே சிறாருக்குத் தேவையான விளையாட்டு, இயக்கத் திறன்களைக் கற்பிக்க முனைகிறார் திரு ராமநாதன்.
தொடர்புடைய செய்திகள்
“சிறுவர்களுக்குச் சிறு வயதிலேயே விரைவுத் திறனையும் இயக்கத் திறனையும் புகட்டுவது அவசியம். காற்பந்துவழி கற்கும் திறன்கள் அவர்களுக்கு மற்ற விளையாட்டுகளிலும் வாழ்விலும்கூடப் பெரிதும் உதவலாம்,” எனறு அவர் சொன்னார்.
தமது மாணவர்கள் பலர் இன்று தேசிய அளவில் சூக்பால் (Tchoukball), ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் போட்டியிடுவதாக அவர் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார்.
கற்றல்வழி வாழ்க்கைப் பாடங்கள்
இந்தச் சேவை தமக்குப் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளதாகத் திரு ராமநாதன் உணர்கிறார்.
“நான் பொதுவாக அனைத்து வேலைகளும் வேகமாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். ஆனால், சிறுவர்களுக்குப் பயிற்சியளிக்கும்போது அது முடியாத செயல் என்று முதல் சில ஆண்டுகளிலேயே புரிந்துகொண்டேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“அவர்களது கவன நேரம் மிகவும் குறைவாக இருக்கும். அப்போதுதான் பொறுமை எவ்வளவு முக்கியம் என்பது எனக்குப் புரிந்தது,” என்றார் திரு ராமநாதன்.
சமூக நல்லிணக்கமும் காற்பந்து வளர்ச்சியும்
இத்தகைய அடித்தளக் காற்பந்துப் பயிற்சிகள் சமூக நல்லிணக்கத்திற்கு மிகவும் முக்கியமெனத் திரு ராமநாதன் கருதுகிறார்.
“சமூக நல்லிணக்கத்திற்கு விளையாட்டு ஒரு சிறந்த கருவி. இத்தகைய அடித்தளப் பயிற்சிகளில் சிறுவர்கள் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டவர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அப்போது, இயற்கையாகவே அவர்களுக்குப் பல இன நண்பர்கள் கிடைக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
மேலும், சிங்கப்பூர்க் காற்பந்தின் வளர்ச்சிக்கும் அடித்தளக் காற்பந்து முக்கியம் என அவர் நம்புகிறார்.
“நிறைய சிறுவர்கள் அடித்தளக் காற்பந்து விளையாடத் தொடங்கினால், இயல்பாகவே அவர்களின் விளையாட்டுத் தரம் உயரத் தொடங்கும். இதனால், எதிர்காலத்தில் தேசிய அளவிலும் காற்பந்துத் தரம் உயரும்,” என்று அவர் சுட்டினார்.
குடும்ப ஆதரவு
சவால்மிகு சேவையாக இருந்தாலும் ஆர்வத்துடனும் துடிப்புடனும் திரு ராமநாதன் காற்பந்துப் பயிற்றுவிப்பில் ஈடுபட அவரது குடும்பம் பெருந்துணையாக இருந்து வருகிறது.
“என் பிள்ளைகள் அனைவரும் வளர்ந்துவிட்டனர். அதுமட்டுமின்றி, சிறு வயதிலிருந்தே நான் ஈடுபடும் சமூக நடவடிக்கைகளுக்கு அவர்களை அழைத்துச் செல்வது வழக்கம். அதனால், நான் வீட்டில் அதிகம் இல்லாததை அவர்கள் புரிந்துகொள்கின்றனர்,” என்றார் அவர்.
“என் மனைவிக்கும் நான் நிச்சயம் நன்றிகூற வேண்டும்; என் சமூக ஈடுபாட்டைப் புரிந்து நடந்துகொள்வார். ஆனால், வீட்டு வேலைகளை நேரத்துடன் செய்துவிட வேண்டும். இல்லையேல், பிரச்சினை வெடித்துவிடும்,” என்று சிரித்தவாறே சொன்னார்.
விளையாட்டுவழி அனுபவக் கல்வி
பிள்ளைகளை ஓடியாடி விளையாட அனுமதிக்கும்படி பெற்றோருக்கு அறிவுறுத்துகிறார் திரு ராமநாதன்.
“இன்று சிறுவர்கள் பலர் சிறு பூச்சிகளைப் பார்த்தாலே அஞ்சி ஒதுங்குகின்றனர். ஏட்டுக்கல்வி ஒருபுறம் இருக்க, வெளியில் விளையாட்டுவழி கற்கும் அனுபவக் கல்வியும் திறன்களும் மிகவும் முக்கியம்,” என்று அவர் கூறினார்.
இந்தச் சேவையில் தம்மால் முடிந்தவரை தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதே திரு ராமநாதனின் விருப்பம்.

