இதர பாடங்களை ஒப்பிடுகையில் தாய்மொழிப் பாடத்தில் சிறந்த தேர்ச்சி காண்பது எளிதாக இருந்த காலம் ஒன்று இருந்தது.
ஆனால், தற்போது அந்தக் காலம் மலையேறிவிட்டது. தாய்மொழிக்கே துணைப்பாட வகுப்புகளை நாடவேண்டிய நிலை. தமிழ் துணைப்பாட வகுப்புகளை நாடும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் எண்ணிக்கை கூடியுள்ளதைக் காண முடிகிறது.
ஜெய் தமிழ் கற்றல் மையம் 18 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 18 ஆண்டுகளில் துணைப்பாட வகுப்புகளை நாடிவரும் மாணவர்களின் எண்ணிக்கை 90 விழுக்காடு அதிகரித்துள்ளதாக நிறுவனர் முருகேசன் சவிதாதேவி, 53, தெரிவித்தார்.
வீட்டில் தமிழ்மொழிப் புழக்கம் குறைந்து வருவதால் தமிழ்மொழிக்கு துணைப்பாட வகுப்புகளின் தேவை இருப்பதாகச் சொன்ன சவிதாதேவி, பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதும் பிள்ளைகள் துணைப்பாட வகுப்புக்குச் செல்ல ஒரு காரணம் என்றார்.
சர்கம் தமிழ் துணைப்பாட நிலையத்தில் ஆங்கில மொழியை ஒரு கருவியாகப் பயன்படுத்தி தமிழ்மொழி கற்பிக்கப்படுகிறது. அப்போதுதான் மாணவர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்பது அந்த உத்தியின் நோக்கம்.
“பெற்றோர் தமிழில் பேசாமல் இருந்தாலும் அவர்களின் பிள்ளைகள் உடனடியாக சிறந்த மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்க்கின்றனர்,” என்றார் அந்த நிலையத்தின் நிறுவனர் சரோஜினி தேவி கனகலிங்கம், 67.
தனது துணைப்பாட வகுப்புக்கு மாணவர்களின் சேர்க்கை மும்மடங்கு கூடியுள்ளதாகப் பகிர்ந்துகொண்ட அவர், மாணவர்கள் எத்தனை துணைப்பாட வகுப்புகள் சென்றாலும் பெற்றோர்கள் தமிழில் பேசவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மொழி ஆர்வம் அதிகரிக்க துணைப்பாட வகுப்பு
தமிழ்மொழி மீதான ஆர்வத்தைக் கூட்டவும் வீட்டில் தமிழ்மொழியில் அதிகம் பேசாததாலும் அஷ்டலக்ஷ்மி தினகரன், 39, தனது இரு மகன்களையும் தமிழ்த் துணைப்பாட வகுப்புக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அஷ்டலக்ஷ்மியின் மகன்கள் இருவரும் தொடக்கநிலை ஒன்று, நான்காம் வகுப்புகளில் பயில்கின்றனர். தனது இளைய மகனைவிட மூத்த மகன் தமிழ்மொழியில் பேசவும் எழுதவும் தடுமாறுவதாக அவர் சொன்னார்.
“சிங்கப்பூரின் பாலர் பள்ளிகள் அத்தனையிலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுவதில்லை. அதனால் இளம் வயதிலேயே மொழி ஆர்வத்தை அதிகரிக்க முடியாமல் போகிறது. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகளின் கல்விக்கு நேரம் ஒதுக்கவும் முடிவதில்லை,” என்றார் அஷ்டலக்ஷ்மி.
மூத்த மகன் தமிழ்ப் பாடத்தைப் பற்றிப் பேசினாலே வெறுப்படைவதாகக் கூறிய அஷ்டலக்ஷ்மி, அவர் தமிழில் நன்றாகப் பேசினாலே போதும் என விரும்புகிறார்.
மேலும் தமிழ் பாடத்திட்டம் கடினமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், பள்ளிகளில் மொழி எளிய முறையில் கற்பிக்கப்படலாம் என்று குறிப்பிட்டார்.
தமிழ்த் துணைப்பாட ஆசிரியர் ஜெயச்சந்திரன், 35, பெற்றோர் பலர் குழு வகுப்புகளை விரும்பாமல் தனிப்பட்ட துணைப்பாட வகுப்பை விரும்புவதாகக் கூறினார்.
வீட்டில் தமிழ்மொழிப் புழக்கம் குறைந்து வருவதைச் சுட்டிய அவர், பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையும் பெற்றோர் தமிழ்த் துணைப்பாட வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கான ஒரு காரணமாகக் கருதுகிறார்.
கற்றல் இனிமையாக வேண்டும்
பள்ளியில் நடத்தப்படும் தமிழ்ப் பாடங்களைவிட தமிழ்த் துணைப்பாட வகுப்பிற்கு தனது மகன் அதிக ஆர்வம் காட்டுவதாகச் சொன்னார் நித்யா சுபாஷ், 40.
பாலர் பள்ளியில் படித்தபோது தனது மகன் தமிழ்மொழியை விரும்பிக் கற்றதாக கூறிய அவர், தற்போது தொடக்கப்பள்ளியில் அவ்வாறு இல்லை என வருந்தினார்.
தொடக்கநிலை இரண்டாம் வகுப்பு படித்தபோது தமது மகனை தமிழ்த் துணைப்பாட வகுப்புக்கு அனுப்பத் தொடங்கினார் அவர். தன்னால் தமிழில் நன்றாகப் பேச முடிந்தாலும் வீட்டில் மொழிப் புழக்கம் குறைவு என்றார் நித்யா.
வீட்டிலும் இல்லப் பணிப்பெண் வேறு இனத்தவர் என்பதால் மகன் தமிழில் பேசுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக நித்யா கருதுகிறார்.
“தமிழ்மொழியை ஆர்வத்துடன் கற்க நான் மகனுக்கு எளிதான புத்தகங்களைப் படிக்க வைப்பேன்,” என்று கூறினார் நித்யா.
பல பெற்றோர் தங்களின் பிள்ளைகளைத் தமிழ் துணைப்பாட வகுப்பிற்கு அனுப்ப தொடங்கியுள்ளதை கவனித்த நித்யா, பாடத்திட்டமும் கடினமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதனால் பெற்றோரால் வீட்டில் பிள்ளைகளுக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தரவும் சிரமம் என்று கூறிய அவர், துணைப்பாட நிலையங்களை நாடவேண்டிய கட்டாயம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
பள்ளியில் அதிக ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று கூறிய நித்யா, மாணவர்கள் தமிழ்மொழி மீது ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள ஆசிரியர்கள் முயற்சிக எடுக்க வேண்டுமென்றார்.
தனியார் துணைப்பாட ஆசிரியரான ரேணுகா நரனிசாமி, 30, பெற்றோர் பலர் தமிழ்மொழியில் பேசாமல் இருந்தாலும் துணைப்பாட வகுப்பிற்கு பிள்ளை சென்ற சிறிய காலத்திலேயே தமிழ்மொழியில் சிறப்பாகத் தேர்ச்சி காண வேண்டுமென்ற எதிர்பார்ப்பு வைத்துள்ளதாகச் சொன்னார்.
பெற்றோர் அவர்களின் தேவைகளுக்கேற்ப துணைப்பாட ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதாகக் குறிப்பிட்ட ரேணுகா, சில பெற்றோர் தமிழ்மொழிக்கே, கட்டுரைக்கு ஒரு துணைப்பாட வகுப்பு, வாசிப்புக்கு ஒரு துணைப்பாட வகுப்பு என பல்வேறு வகுப்புகளை நாடுவதாகக் கூறினார்.
நன்யாங் அகாடெமிக்ஸ் துணைப்பாட நிலையம் அதன் இணையத்தளத்தில் வெளியிட்ட தகவலின்படி, சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஆங்கிலம் பேசப்படுவதால் மாணவர்கள் தமிழ்மொழிமீது ஆர்வர் காட்டுவதில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
தாய்மொழித் தேர்ச்சி வீட்டில் இருந்தே தொடங்குவதால் தமிழ் மொழிக்கு உகந்த சூழலை வழங்காத வீடுகளில் குழந்தைகள் தமிழ் மீது ஆர்வம் இல்லாமல் உள்ளனர்.
தாய்மொழி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதால் தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பாகச் செய்யத் துணைப்பாட வகுப்புகளுக்கான தேவை அதிகரித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
தமிழ்கியூப் கற்றல் நிலையத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான ஏ டி பிள்ளை, 58, பலரின் வீட்டில் தமிழ்மொழி புழக்கம் குறைவாக இருப்பதுவே பிள்ளைகள் தமிழ்த் துணைப்பாட வகுப்பை நாடிச் செல்ல வழியமைப்பதாகச் சொன்னார்.
“பிள்ளைகள் தாய்மொழியில் பேச முடியாமல் இருந்து விடுவார்கள் என்ற அச்சம், வீட்டில் தமிழ் பேசுவதில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது போன்றவற்றை நான் தமிழ் துணைப்பாட வகுப்புகளுக்கு வரும் பிள்ளைகளிடம் கண்டுள்ளேன்,” என்றார் அவர்.

