தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெருக்கடியைச் சமாளிக்க ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு பேருதவி

2 mins read
59b8ce7b-2fb6-4f9c-96c2-f8f1b41a3960
மனநலிவு நோயால் பாதிக்கப்பட்ட 36 வயது மகன் ரவீன் பிள்ளையுடன் 74 வயது வீரம்மா. - படம்: சேஷன் வீரப்பன்

ஜூலை தொடக்கத்தில் கிடைத்த ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் பேருதவியாக இருப்பதாக வீரம்மா பழனியாண்டி சிவலிங்கா, 74, தெரிவித்தார். 

ஈரச்சந்தை, பேரங்காடி, உணவங்காடி நிலையத்தில் அந்தப் பற்றுச்சீட்டுகளை இவர் பயன்படுத்துகிறார். 

குறிப்பாக, உணவுப் பொருள்கள் வாங்குவதற்கு இது பேருதவி. பணம் மிச்சமாகிறது என்று மரின் பரேட்டில் வாடகை வீட்டில் வசிக்கும் திருவாட்டி வீரம்மா கூறினார்.

ஒற்றைப் பெற்றோரான திருவாட்டி வீரம்மா, மனநலிவு (Down Syndrome) கொண்ட தம் 36 வயது மூத்த மகனைப் பார்த்துக்கொள்கிறார். அவருக்கு 34 வயது இளைய வயது மகனும் உள்ளார். மகனைப் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழலால் வீரம்மாவுக்கு வருமானம் இல்லை. 

பொருள், சேவை வரிச் செலவைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவ நிரந்தர ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தை அரசாங்கம் 2012ல் அறிமுகம் செய்தது.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் இந்தத் திட்டத்தின் வழியாக 850 வெள்ளி ரொக்கத்தைப் பெறவுள்ளனர்.

அத்துடன், கிட்டத்தட்ட 690,000 மூத்தவர்கள் தங்கள் மெடிசேவ் கணக்குகளில் 450 வெள்ளி வரையிலான தொகையைப் பெறுவர். 

கடந்த ஆண்டின் அதிபர் சவால் விருதின் பயனாளர்களில் ஒருவரான திருவாட்டி வீரம்மா, தாம் சமாளித்துவரும் கடும் நெருக்கடியைப் பற்றித் தொலைக்காட்சியில் பகிர்ந்தார். 

வேதனைகளை வெட்ட வெளிச்சமாக்கிய பிறகு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எனப் பலர் முன்வந்து உதவியதாகக் கூறினார்.

“நான் பார்த்தவரையில் மக்கள் பொதுவாக நல்லவர்கள், அன்புள்ளம் கொண்டவர்கள் என உணர்ந்துள்ளேன். ஆறுதல் அளிக்கும், தைரியமூட்டும் வார்த்தைகளை என்னிடம் கூறும்போது நான் இதமடைகிறேன்,” என்று அவர் கூறினார்.

நெருக்கடிகளை உணர்வோர்க்கு மனப்பதற்றம் அடிக்கடி ஏற்படுவதால் ஒவ்வொரு மனிதரும் தன்னைத் தேற்றிக்கொள்ளப் பழகவேண்டும் என்று திருவாட்டி வீரம்மா கூறினார்.

சோர்வு அளவுக்கு அதிகமாகச் சூழும்போது சிந்தை தெளிவற்றுப்போகிறது. அந்நேரத்தில் நிலைகுலையாமல் நிதானம் காத்தோமானால் தீர்வு தோன்றுவதற்கு வழி தென்படும் என்று திருவாட்டி வீரம்மா கூறினார்.

“என் சிந்தனைகள் என்னைப் பதற்றமடையத் தூண்டும்போது நான் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு சற்று நேரம் என் யோசனைகளை இலகுவாக்குவேன். ஏதேனும் தண்ணீர் அல்லது தேநீர் குடித்து அமர்வேன். தொலைக்காட்சி பார்ப்பேன். நான் மகிழ்ச்சியுடன் இருப்பதாக எனக்கு நானே கூறிக்கொள்வேன்,” என்று அவர் கூறினார்.

இந்த உற்சாக மனநிலை மற்றவர்களுக்கு உதவத் தூண்டுவதாக திருவாட்டி வீரம்மா கூறினார். ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகளைப் பற்றிய விழிப்புணர்வைத் தமக்கு அருகில் உள்ளவர்கள், குறிப்பாக மூத்த குடிமக்களிடம் தெரிவிப்பதாகக் கூறினார்.

“உதவி இல்லாமல், தகவல்கள் தெரியாமல் தத்தளித்த உணர்வு எனக்கு நன்கு தெரியும். எனவே நானும் இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பற்றி இயன்றவரை பலருக்குத் தெரிவிக்கிறேன்,”  என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்