சிங்கப்பூரர்கள் நன்கு அறிந்த சில அச்சமூட்டும் கதாபாத்திரங்களுக்கு ஒரு புதுமையான வடிவம் கொடுத்து, ‘ஹாலோவீன் ஹாரர் நைட்ஸ்’ 14வது ஆண்டாக யுனிவர்சல் ஸ்டூடியோசுக்குத் திரும்பியுள்ளது.
செப்டம்பர் 25 முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை யுனிவர்சல் ஸ்டூடியோசில் பொதுமக்களுக்குத் திகிலூட்ட பல அங்கங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
பழைய பொருள்களைச் சேகரிக்கும் ‘காராங்குனி’ கதாபாத்திரத்தையொட்டி பொதுமக்கள் ஒரு கிடங்குபோல உருவாக்கப்பட்ட பேய் வீட்டைச் சுற்றிப்பார்க்கலாம். இந்தப் பேய் வீட்டை அமைப்பதற்கு கிட்டத்தட்ட 1,125 பொருள்கள் பயன்படுத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
‘ஆன் ஏர்’ அங்கம் இவ்வாண்டு மூன்றாவது முறையாக இடம்பெறுகிறது. இதில் பொதுமக்கள் கைவிடப்பட்ட ஓர் ஒளிபரப்புக் கூடத்துக்குள் நுழைவார்கள். சிங்கப்பூரின் பழங்கதைகள் முடிவில்லாமல் மீண்டும் மீண்டும் பயங்கரமாக அரங்கேறும்.
மாயக் குரல் கலைஞர் சார்லியும் அவரது பொம்மை ஜூனியரும் மற்றொரு பேய் வீட்டைக் கைப்பற்றுகிறார்கள். இதில் பலவகை பயங்கரமான பொம்மைகளைக் கண்டு அச்சப்படலாம்.
கடைசியாக, பார்வையாளர்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில், நவீன உயிர்ப்பொறியியல், ரோபோட்டிக்ஸ் மையத்தில் மற்றொரு பேய்வீடு அமைக்கப்பட்டுள்ளது.
‘ரேவ்யார்ட்’ அங்கத்தில் இசையோடு பயமுறுத்தும் நடிகர்களின் ஆரவாரத்திற்கேற்ப நடனமாடுவதன்மூலம் அச்சத்திலிருந்து விடுபட முயலலாம்.
பயங்கரமான ‘பொன்டியானாக்’ கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ‘பொன்டி-ஆனா’ சின்னமும் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஜப்பானின் திகில் சின்னமான ஹாமிகுமாவும் நடனமாடுவதை மக்கள் கண்டு மகிழலாம்.
‘கிளப் பான்டெமோனியம்’ என்ற மேடை நிகழ்ச்சியுடன் இரவு நிறைவடைகிறது. அதில் ஏழு பாவங்களும் பிரமிக்க வைக்கும் ஆடல், பாடல் அம்சங்கள் மூலம் காட்சிப்படுத்தப்படுகின்றன. நிகழ்ச்சியில் 14 மீட்டர் உயரத்தில் சாகசக் காட்சி ஒன்றும் இடம்பெறுகிறது.
கூட்டம் குறைவாக உள்ள நாள்களில் நுழைவுச்சீட்டுக் கட்டணம் $68. கூட்டம் அதிகமாக உள்ள நாள்களில் கட்டணம் $78.
கூடுதல் விவரங்களுக்கு www.rwsentosa.com/halloween-horror-nights-14 என்ற இணையத்தளத்தை நாடலாம்.
