மண்டாய் தகனச்சாலை, அஸ்திமாடத்தில் மூத்த நிர்வாகியாகப் பணிபுரிந்து வரும் 44 வயது தமிழ்ச்செல்வன் திவதாஸ் பணிமூலம் தனித்துவமான வகையில் சமூகத்திற்கு சேவை செய்கிறார்.
பலரும் செய்யத் தயங்கும் இறுதிச் சடங்குப் பணியை மேற்கொள்ளும் அவர், குடும்பங்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய தருணங்களில் கைகொடுத்து உதவுகிறார்.
இறுதிச் சடங்கு குறித்து கவலைப்படாமல், தங்கள் அன்புக்குரியவர்களுக்கு விடை கொடுப்பதில் கவனம் செலுத்த குடும்பத்தினருக்கு அவர் உதவுகிறார்.
வசதி மேலாண்மை அதிகாரியாக இருக்கும் தமிழ்ச்செல்வன், மண்டாய் தகனச்சாலையின் அஸ்திமாடப் பகுதி சீராக இயங்கும் வகையில் அத்தியாவசிய அமைப்புகளைப் பராமரிக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார்.
இயந்திர, மின் அமைப்புகள், குழாய் வேலைகள், சுகாதார வசதிகள், பொது கட்டடப் பராமரிப்பு ஆகியவற்றுக்கான ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து பணியாற்றுவது அவருடைய பணியில் அடங்கும்.
குடும்ப உறுப்பினர்களின் துயரமான தருணத்தில், சேவைகள் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது தமிழ்ச்செல்வனின் பணி.
முன்னர் வசதிகள் துறை, மின்தூக்கி தொழில்நுட்பராகப் பணிபுரிந்த தமிழ்ச்செல்வன் தேசிய சுற்றுப்புற ஆணையத்தில் மவுன்ட் வெர்னன் அஸ்திக் காப்பகத்தின் இடமாற்ற திட்டத்தில் பணிபுரியத் தொடங்கினார்.
அந்தத் திட்டம் முடிவுற்ற பிறகு மண்டாய் தகனச்சாலை, அஸ்திமாடத்தில் வேலை செய்ய அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“முதலில் நான் வெட்டியானாக வேலை செய்யப் போகிறேனோ என்று அதிர்ந்து போனேன். பணியைப் பற்றிக் கேள்விப்பட்டதும் என் சேவை மனப்பான்மையை அதில் வெளிப்படுத்த முடிவெடுத்தேன்,” என்று சொன்னார் தமிழ்ச்செல்வன்.
தமிழ்செல்வனின் நாள், கட்டடக் குறைபாடுகளையோ அல்லது பராமரிப்புத் தேவைகளையோ கண்டறிவதற்காக வழக்கமான பரிசோதனைகளுடன் தொடங்குகிறது.
“தகன அறைகளைப் பராமரிக்கவும், பயன்பாட்டு அமைப்புகளை நிர்வகிக்கவும், தகன நடவடிக்கைகளில் பணியாற்றும் சக ஊழியர்களுடன் அணுக்கமாகப் பணியாற்றுகிறேன். எந்தவொரு உபகரணக் கோளாறும் துயரத்திலுள்ள குடும்பங்களுக்குத் தடையாக அமைந்துவிடக்கூடாது என்பதால் இது ஒருமித்த கவனம் தேவைப்படும் நுணுக்கமான பணியாகும்,” என்று விளக்கினார் தமிழ்ச்செல்வன்.
தனது வேலை பலரும் அறியாத ஒன்று என்ற தமிழ்ச்செல்வன், பணியிடம் அமைதியாக இருந்தாலும் அதில் பல உணர்வுகள் நிறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மண்டாய் தகனச்சாலை, அஸ்திமாடத்தில் வேலை செய்யும் தேசிய சுற்றுப்புற ஆணையத்தைச் சேர்ந்த ஒவ்வோர் ஊழியரும் அன்புக்குரியவர்களுக்கு இறுதி விடை கொடுக்கும்போது தடங்கலற்ற சேவையை உறுதிப்படுத்த கடப்பாடு கொண்டுள்ளதாகத் தமிழ்ச்செல்வன் சொன்னார்.
“ஒவ்வொருநாளும் இழப்பின் யதார்த்தம் சூழ்ந்திருப்பதால் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அன்பையும் அக்கறையையும் காட்டுவதன் முக்கியத்துவத்தை அலட்சியம் செய்யக்கூடாது என்பதை என் பணி கற்றுக் கொடுத்துள்ளது,” என்றார் தமிழ்ச்செல்வன்.

