சிறப்புத் தொழுகைகளுடன் களைகட்டிய நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

சிறப்புத் தொழுகைகளுடன் களைகட்டிய நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

3 mins read
03bc3533-f284-4557-bf71-3dfcf4cbe676
ஈகைத் திருநாள் கொண்டாட்டச் சிறப்புத் தொழுகைக்காக பென்கூலன் பள்ளிவாசலில் திரண்டோர். - படம்: பென்கூலன் பள்ளிவாசல்

அன்பு, சகோதரத்துவம், கருணை என வாழ்வில் பல்வேறு நற்கூறுகளைப் பறைசாற்றும் விதமாக அமைந்த நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் தீவெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களில் களைகட்டின.

பென்கூலன் பள்ளிவாசலில் சனிக்கிழமை (மார்ச் 21) காலை 6.30 மணிக்கு ‘ஃபஜ்ர்’ தொழுகை, அதனைத் தொடர்ந்து இறைவனின் புகழ்பாடும் ‘தக்பீர்’அங்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து பெருநாள் தொழுகை நடைபெற்றது.

கிட்டத்தட்ட 800 பேர் தொழுகையில் பங்கேற்று, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

“நமது பள்ளிவாசல் இமாம் அரபியில் ஓதி, பின்னர் அதற்குரிய தமிழ் விளக்கங்களையும் அளித்தார். நற்குணங்களைக் கொண்டிருத்தல், தவற்றுக்கு வருந்துதல், அனைவரையும் அரவணைத்தல் எனப் பலவற்றைக் கடைப்பிடிக்க வலியுறுத்தினார்,” என்றார் பென்கூலன் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி மு.யூ. முஹம்மது ரஃபீக்.

‘இறைவன் மிகப்பெரியவன்’ எனும் கூற்றைத் தொடர்ந்து ஓதி இறைப்புகழ் பாடும் ‘தக்பீர்’ அங்கத்தில் பங்கேற்றோர்.
‘இறைவன் மிகப்பெரியவன்’ எனும் கூற்றைத் தொடர்ந்து ஓதி இறைப்புகழ் பாடும் ‘தக்பீர்’ அங்கத்தில் பங்கேற்றோர். - படம்: பென்கூலன் பள்ளிவாசல்

தொடர்ந்து, சிங்கப்பூரின் பல்லினச் சமூக ஒன்றிணைவைப் போற்றும் வண்ணம், வீட்டில் சமைத்த உணவை அண்டை வீட்டாருடன் பகிர்ந்துண்ணும் வழக்கமும் பலருக்கு உள்ளதை அவர் சுட்டினார்.

“சொந்தபந்தங்களையும் நண்பர்களையும் இணைக்கும் நாள் இது,” என்று கூறிய இஷாக் ராவுத்தர், “பல்வேறு காரணங்களினால் தொடர்பு விட்டுப்போன உறவுகளையும் சந்தித்து வாழ்த்துகள் பறிமாறிச் சேர்ந்துகொள்ள இந்த நாள் வழிவகுக்கிறது,” என்றார் அவர்.

மேலும், எல்லாக் குடும்பங்களிலும் இப்பண்டிகை நாளில் பெரியவர்களைச் சந்திப்பது, ஒன்றாக உணவருந்துவது ஆகிய பழக்கங்கள் இருப்பதாகவும் இந்தத் தலைமுறைக்கு அது தேவை என்றும் அவர் சொன்னார்.

சிறு வயதிலிருந்து இப்பள்ளிவாசலுக்கு வரும் தொழில்நுட்பத்துறை ஊழியர் முஸ்தாக் அகமது, 47, “ இளம் பிள்ளைகள் நாம் செய்வதைக் கவனித்துக் கடைப்பிடிக்கிறார்கள். எனவே கட்டுப்பாடுகளைக் கற்றுத்தரும் உயரிய நோக்கத்தை அவர்களுக்குக் கற்றுத்தருவதைக் கடமையாகக் கருதுகிறேன். இந்நோன்பு நாளில் அதனையே சொல்லிக்கொடுக்கிறேன்,” என்றார்.

அப்துல் கஃபூர் பள்ளிவாசல் தொழுகைக் காட்சி.
அப்துல் கஃபூர் பள்ளிவாசல் தொழுகைக் காட்சி. - படம்: அப்துல் கஃபூர் பள்ளிவாசல்

இப்பள்ளிவாசலில் தொண்டூழியராக உள்ள ரஷிதா பேகம், 55, “இந்த 30 நாள்களும் தொடர்ந்து தொழுகை நேரத்தில் சந்தித்ததில் பலருக்கும் நட்பு வட்டங்கள் விரிவடைந்துள்ளன. அவர்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடுவதைப் பார்ப்பது மனநிறைவு அளிக்கிறது,” என்றார்.

பென்கூலன் பள்ளிவாசலில் இவ்வாறு குடும்ப, நட்பு வட்டங்கள் கொண்டாடிய வேளையில், ஆயிரக்கணக்கனோர் பங்கேற்ற தொழுகையுடன் களைகட்டியிருந்தது வரலாற்றுச் சிறப்புமிக்க அப்துல் கஃபூர் பள்ளிவாசல்.

காலை 7.20 மணிக்கு நடைபெற்ற ஆண்களுக்கான தொழுகையில் 2,000 பேர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து 8.15, 9.15 மணி அமர்வுகளையும் சேர்த்து மொத்தம் 5,000 பேர் இப்பள்ளிவாசலில் தொழுகை மேற்கொண்டனர்.

ஆண்கள் ஏறத்தாழ 2,000 பேர் திரண்டு மேற்கொண்ட முதல் தொழுகை அமர்வு.
ஆண்கள் ஏறத்தாழ 2,000 பேர் திரண்டு மேற்கொண்ட முதல் தொழுகை அமர்வு. - படம்: அப்துல் கஃபூர் பள்ளிவாசல்

சிங்கப்பூர்த் தமிழ் முஸ்லிம்களில் பலருக்கும் மனத்துக்கு நெருக்கமான பள்ளிவாசல் இது என்றார் இப்பள்ளிவாசலின் இமாம் தாவூதி ‌‌ஷம்சுதீன் முஹம்மது இப்ராஹிம்.

சூரிய உதயத்திலிருந்து 20 நிமிடங்கள் கழித்து நடக்கும் ‘ஈதுல் பித்துர்’ நாள் சிறப்புத் தொழுகை இங்கு மூன்று அமர்வுகளாக நடக்கும். முதல் இரு அமர்வுகள் தமிழில் அமையும். இரண்டாம் மூன்றாம் அமர்வுகளில் பெண்களும் பங்கேற்பர்,” என்றார் அவர்.

இது ஈகைத் திருநாள் என்பதால் ‘ஸக்காத்’ எனும் வழக்கப்படி எளியோர்க்கு உதவும் வகையில் அனைவரும் ஈகை செய்வதைச் சுட்டினார். இது அனைவருக்குமான பண்டிகையாக அமைவதை அது உறுதி செய்வதாகவும் அவர் சொன்னார்.

“கடந்த 30 நாள்களும் அன்றாடம் 2,500 பேருக்கு நோன்புக் கஞ்சி, 1,500 முதல் 1,800 பேருக்கு உணவு ஆகியவற்றுக்குப் பள்ளிவாசல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 30 நாள்கள் நோன்பிருந்து முன்வைத்த கோரிக்கைகளை இறைவன் ஏற்பார் என்பது எங்கள் நம்பிக்கை. இன்று நாங்கள் அனைவருமே அல்லாவின் விருந்தினர்கள்,” என்றார் காமிலா பானு மஹபூப் ஹுசைன், 42.

இவ்வாண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவிருக்கும் தமது தாய் தந்தையருடன் இந்த நாளைக் கொண்டாடுவதில் கூடுதல் மகிழ்ச்சியென்றும் அவர் குறிப்பிட்டார்.

இப்பள்ளிவாசலில் தொழுகை மேற்கொள்ளும் அனைவரும் ‘ஏழை வரியாக’ குறைந்தது ஐந்து வெள்ளி முதல் எட்டு வெள்ளி வரை செலுத்துவதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் குடும்பத்தினரை விட்டு இங்குத் தனியே வாழும் 42 வயது சையத் அப்துல் காதருக்குப் பள்ளிவாசல் தான் குடும்பம். கடந்த பத்தாண்டுகளாக இங்கு வரும் அவர், “பள்ளிவாசலில் பழகுவோர் எனக்குக் குடும்பமாகிவிட்டனர். அவர்களுடன் கொண்டாடும்போது தனியே இருக்கிறோம் எனும் எண்ணம் மறைந்து மனநிறைவு பிறக்கிறது,” என்றார்.

தமது தொடக்கப்பள்ளி நாள்களிலிருந்தே அப்துல் கஃபூர் பள்ளிவாசலுக்கு வருவதாகச் சொன்னார் பக்ருதீன் பின் அப்துல் ஜஃபார், 49. சிங்கப்பூரின் பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் சற்றே அமைதியாகக் குடும்பத்துடன் அமர்ந்து நேரம் செலவிடுவது, பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசுவது, பெரியவர்களின் கருத்துகளைக் கேட்பது ஆகியவற்றுக்கேற்ற நாளாக இது அமைவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்