சிங்கப்பூரில் இன, மத நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்கும் நோக்கில் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம் (யுஐஎம்ஏ), சிண்டாவுடனும் இதர சமூக அமைப்புகளுடனும் இணைந்து மார்ச் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சமூக இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
லெங்கோக் பாருவில் யுஐஎம்ஏ நிர்வகிக்கும் லிட்டில் டால்ஃபின்ஸ் மேம்பாட்டு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிற இனங்களையும் சமயங்களையும் சேர்ந்த தொண்டூழியர்கள், சமூக அமைப்புத் தலைவர்கள், வசதி குறைந்த பின்னணியைச் சேர்ந்தோர் எனக் கிட்டத்தட்ட 150 பேர் பங்கேற்றனர். ‘யுஐஎம்ஏ’ அனைவருக்கும் ‘இஃப்தார்’ உணவு ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சியில், 37 வசதி குறைந்த இந்திய முஸ்லிம் குடும்பங்களுக்கு $120 என்டியுசி பற்றுச்சீட்டுகளையும் பண்டிகைக்கால அன்பளிப்புப் பைகளையும் சிண்டா வழங்கியது.
புக்கிட் மேராவில் உள்ள ஏறக்குறைய 25 வசதி குறைந்த குடும்பங்களுக்கும் யுஐஎம்ஏ, லோட்டஸ் லைட் அறநிறுவனம், சிங்கப்பூர் பெளத்த தங்குவிடுதி ஆகியவை இணைந்து தானியங்கள், சமையல் பொருள்கள் போன்றவற்றை வழங்கின.
“வழக்கமாக ஆண்டுதோறும் வசதி குறைந்தோரின் இல்லங்களுக்குச் சென்று பொருள்களை வழங்குவோம். ஆனால் இம்முறை அனைவரையும் ஒரே இடத்தில் அழைத்து சமூக இஃப்தாராக கொண்டாடினோம்,” என்றார் யுஐஎம்ஏ தலைவர் ஃபரீஹூல்லாஹ்.