சிங்கப்பூரின் தனித்தன்மையாகத் திகழும் அதன் பல்லினக் கலாசாரத்தைச் சிறப்பிக்கும் வகையில் இவ்வாண்டின் பல்லின, பல சமய ‘நல்லிணக்க இரவு’ நிகழ்ச்சி அமைந்தது.
கலை அங்கங்களும் மேடை உரைகளும் அங்கம் வகித்த அந்த நிகழ்ச்சி, மரினா பே சேண்ட்சில் உள்ள சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது.
சமூகத் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், சமயக் குழுக்களின் பிரதிநிதிகள், அரசாங்க அமைப்புகளின் அதிகாரிகள், குடிமக்கள் என 2,000க்கும் மேற்பட்டோர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
‘நல்லிணக்க இரவு’ நிகழ்ச்சிக்கு தை ஹுவா குவான் அறநெறிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
‘மரபு: நல்லிணக்கத்தின் இதயம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, அந்நிகழ்ச்சி சிங்கப்பூரின் பன்முகக் கலாசார மரபுகளைக் கொண்டாடி, நாட்டின் நீடித்த இன, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தியது.
கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ சிறப்பு விருந்தினராக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 2004ஆம் ஆண்டு முதல் நடக்கும் அந்நிகழ்ச்சி, இவ்வாண்டு 19வது முறையாக நடைபெற்றது.
“பாரம்பரியம் என்பது, முன்னைய தலைமுறையிடமிருந்து பெற்று, நம் தலைமுறைக்கு மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்வதாகும்,” என்றார் தை ஹுவா குவான் அறநெறிச் சங்கத்தின் தலைவர் ஆர்டி எஸ். ஹார்ட்ஜோ.
சிங்கப்பூர் அதிகமான மூத்தோரைக் கொண்ட சமூகமாக மாறி வருவதால், முதியோருக்கான கலாசாரத் திட்டங்களைச் சங்கம் முன்னெடுக்கும் என்றும் திரு ஆர்டி பகிர்ந்துகொண்டார்.
அதில் அரும்பொருளகங்களுக்கும் கலாசார மையங்களுக்கும் செல்வது, பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளை ரசிப்பது, சங்கத்தின் துடிப்புடன் மூப்படைதல் நிலையங்களில் பாரம்பரிய உணவுகளைச் சமைக்கக் கற்றுக்கொள்வது ஆகியவை அடங்கும்.
இந்த ஆண்டின் கருப்பொருளைப் பிரதிபலிக்கும் வகையில், ‘நல்லிணக்க இரவு’ ஏற்பாட்டாளர்கள் இவ்வாண்டின் பிற்பகுதியில் சமையல் புத்தகம் ஒன்றை வெளியிடவிருப்பதாகவும் திரு ஆர்டி தெரிவித்தார்.
அந்தச் சமையல் புத்தகம் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரிய சமையல் குறிப்புகளையும் அவற்றின் பின்னால் உள்ள கதைகள், நினைவுகள் போன்றவற்றையும் கொண்டிருக்கும்.
மெண்டாக்கி, சிண்டா, யுரேசியர் சங்கம், சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் ஆகிய நான்கு சுய உதவி அமைப்புகளின் கலாசார நிகழ்ச்சிகள், ஒன்பது சமயங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் பிரார்த்தனை, சிங்கப்பூரின் நான்கு அதிகாரபூர்வ மொழிகளில் சமய நல்லிணக்கப் பற்றுறுதி ஆகியவை நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
“கலாசாரம் ஒவ்வொரு தலைமுறையிலும் இயல்பாகவே மாறுகிறது. இளைய தலைமுறையினர் தங்களின் மரபுடைமையைப் புரிந்துகொள்ளவும் அதில் பெருமைகொள்ளவும், அவர்களின் வாழ்க்கைக்கு ஏற்ப அதை முன்னோக்கி எடுத்துச் செல்லவும் சிண்டா வாய்ப்புகளை உருவாக்க முற்படும்,” என்று சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.

