சீனர்களின் பாரம்பரிய இலையுதிர்காலக் கொண்டாட்டங்கள் சிங்கப்பூரில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வந்தாலும் அதனைப் பற்றி ஆழமாகவும் நுட்பமாகவும் அறியும் வாய்ப்புகள் அரிதாக உள்ளன.
இவ்வேளையில், தெம்பனிஸ் பொலிவார்ட் நல்லிணக்க வட்டம் செப்டம்பர் 25ஆம் தேதியில் நடத்திய சீன ஆலயச் சுற்றுலா அத்தகையதொரு வாய்ப்பாக அமைந்தது
அந்தச் சுற்றுலாமூலம் சியென் கெங், ஹியாங் தோங் கெங் என்ற இரு ஆலயங்களுக்கும் கிட்டத்தட்ட 50 பேர் சென்றிருந்தனர்.
ஹியாங் தோங் கெங் கோயிலின் முதன்மைத் தெய்வம் கான் தியான் தா தி ஆவார். இவர் தமது பெற்றோரிடத்தில் பொழிந்த பக்தியினாலும், விண்ணையும் நெகிழவைத்த நற்செயல்களினாலும் அறியப்படுகிறார்.
கோவில்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதுடன் கோவிலின் வரலாறும் சமயக் கதைகளும் விளக்கப்பட்டன. மேலும் சில தெய்வங்களை அடையாளம் காணவும் முடிந்தது.
தெம்பனிஸ் பொலிவார்ட் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களை ஒன்றிணைத்து இலையுதிர்காலத் திருவிழாவை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுவதும் புதிய நண்பர்களை உருவாக்கி ஒருவரோடு ஒருவர் கலந்துறவாடச் செய்வதும் நோக்கமாக இருந்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
“எதிர்பார்த்ததைவிட அதிகமானோர் பதிவுசெய்திருந்ததைப் பார்த்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். படிவத்தின்மூலம் பதிவுசெய்த 40க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அன்றைய தினம் விழாவில் கலந்துகொண்டனர்,” என்று தெம்பனிஸ் பொலிவார்ட் நல்லிணக்க வட்டத் தலைவர் ராஜ் குமார் கூறினார்.
அவர்கள் கையில் கூண்டுவிளக்குகளை ஏந்தியபடியே அவர்கள் ஒரு கோவிலிலிருந்து ஹியாங் தோங் கெங் கோவிலுக்கு நடந்துசென்றனர்.
அந்தக் கோவிலில் சந்திரக் கடவுளின் சடங்குகள், இலையுதிர்காலத் திருவிழா போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.
பிள்ளைகள் விளக்குகளுக்கு வண்ணம் தீட்டியும், ‘மத்தாப்பு’ விளையாடியும் மகிழ்ந்தனர். இளந்தம்பதியரும் முதியோரும் மகிழ்வுடன் கலந்துகொண்ட இந்த நிகழ்வு அனைத்துத் தலைமுறையினரையும் உள்ளடக்கும் வகையில் இருந்தது.
இலையுதிர்காலக் கொண்டாட்டங்களின் பண்பாட்டுக் கூறுகளைப் பற்றி ஆழமாக அறிந்துகொண்டு பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளித்த திரு ராஜ்குமாரைக் கண்டு வியந்ததாகச் சுற்றுலாவில் பங்கேற்ற குவாங் ஹுவா பெளத்த மடாலயத்தின் தலைவர் ஷி வெய் ஷீ தெரிவித்தார்.
அந்த விளக்கம், சீனச் சமய, பாரம்பரியச் செழுமையைத் தெள்ளத் தெளிவாகப் பங்கேற்பாளர்களிடம் கொண்டுசேர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
