நோய் வருமுன் காப்பதன் அவசியத்தை வலியுறுத்தியது சுகாதார விழா

நோய் வருமுன் காப்பதன் அவசியத்தை வலியுறுத்தியது சுகாதார விழா

2 mins read
f418d675-3bd2-4ea9-bfff-42a91f7770fb
இவ்வாண்டின் சுகாதார விழாவில் ரத்த அழுத்தம், வாய் சுகாதாரப் பரிசோதனை, புற்றுநோய் விழிப்புணர்வு, மனநல ஆலோசனை உள்ளிட்ட பல கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. - படம்: கிறிஸ்டோ லியோன்
multi-img1 of 2

நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதைவிட, முன்கூட்டியே அதைத் தடுப்பது எப்போதும் சிறந்தது. இந்தக் கருத்தை நினைவூட்டும் விதமாக இவ்வாண்டின் சுகாதார விழா நடத்தப்பட்டது.

இந்து அறக்கட்டளை வாரியம், மீடியாகார்ப், இந்து ஆலோசனை வாரியம் ஆகியவை இணைந்து இதை நடத்தின. இந்து அறக்கட்டளை வாரியமும் மீடியாகார்ப்பும் 2015முதல் இணைந்து ஆண்டுதோறும் சுகாதார விழாவுக்கு ஏற்பாடு செய்து வந்துள்ளன. 

பிஜிபி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) நடைபெற்ற சுகாதார விழாவில், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பதும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும் நோக்கமாகும். 

இலவச அனுமதியைக் கொண்ட விழாவில் 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.

“மக்களுக்கு ஆரோக்கியம் முக்கியம் என்பதையும் நோய் வருமுன் காப்பதே நன்று என்பதையும் நாம் எடுத்துக்கூற வேண்டும்,” என்றார் அவர். 

ரத்த அழுத்தப் பரிசோதனை, வாய் சுகாதாரப் பரிசோதனை, புற்றுநோய் விழிப்புணர்வு உள்ளிட்ட 18 கூடங்களில் 70க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் சேவையாற்றினர். 

சுகாதார மேம்பாட்டு வாரியம், ஹெல்தியர் எஸ்ஜி, ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், சிங்கப்பூர் தேசிய கண் மருத்துவ நிலையம், சிங்கப்பூர் பல் சுகாதார அறநிறுவனம் ஆகியவை சுகாதார விழாவில் பங்குதாரர்களாகச் செயல்பட்டன.

“இந்தியச் சமூகத்தினரிடையே ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், தாமதமாக உணவருந்துவது போன்ற பழக்கவழக்கம் அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதித்து உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கின்றன,” என்றார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் மருத்துவ ஆதரவுச் சேவைகள் தலைவர் மோதி பாபு ராமலிங்கம்.

“முழு உடல் பரிசோதனைக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கால்களை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள் உள்ளிட்ட ஆலோசனைகளையும் நான் பின்பற்றி வருகிறேன்,” என்று சதாசிவம் நிர்மலா, 73, கூறினார். 

தம் குடும்பத்துடன் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அவர் சுகாதார விழாவில் பங்கேற்றார்.

குறிப்புச் சொற்கள்