கலன்களில் வைக்கப்படும் உணவுகள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும் என்பதால் அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ஊட்டச்சத்துக் காரணங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துவதில் பலருக்கும் தயக்கம் உண்டு. அந்த எண்ணத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கினர், தொழில்நுட்பக் கல்விக் கழக மேற்கு வளாகத்தைச் சேர்ந்த விருந்தோம்பல் துறை மாணவர்கள் சிலர்.
இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற சமையல் போட்டி ஒன்றில் தொழில்நுட்பக் கல்விக் கழக மேற்கு வளாகத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் கலந்துகொண்டனர். கலன்களில் வைக்கப்படும் உணவுகளைப் பயன்படுத்தி, குறைந்த செலவில் சத்தான உணவுகளை அவர்கள் தயாரிக்கவேண்டியிருந்தது.
ஒவ்வொரு சமையற்கலை மாணவருடனும் ஒரு பேஸ்ட்ரி துறை மாணவர் இணைக்கப்பட்டார். அவர்கள் ஒரு முதன்மை உணவையும் தட்டில் அலங்கரிக்கப்பட்ட இனிப்புப் பலகாரத்தையும் தயாரித்தனர்.
தொழில்நுட்பக் கல்விக் கழக மேற்கு வளாகமும் சிங்கப்பூர் இதய அறநிறுவனமும் அந்தப் போட்டிக்கு இணைந்து ஏற்பாடு செய்தன.
அதில் முதல் பரிசை, இரண்டாம் ஆண்டு உயர் நைட்டெக் வகுப்பில் பயிலும் 18 வயது மாணவர்கள் நூர் இமான் சுலைமான், யோ கியாட் ஆகிய இருவரும் தட்டிச் சென்றனர்.
சமையல் துறையில் பயிலும் யோ கியாட், இறால், ‘கேப்பல்லெட்டி’ எனப்படும் பாஸ்தா, மட்டிச் சாறு ஆகியவற்றைச் சமைத்தார். ‘பேஸ்ட்ரி’ துறையில் பயிலும் மாணவி இமான், ஆலிவ் எண்ணெய்யைக் கொண்டு செய்த கேக், பீச் தயிர் பாலாடை, பிஸ்தா ஓட்ஸ் பலகாரம் ஆகியவை நடுவர்களைக் கவர்ந்தன.
போட்டியின் அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட யோ கியாட், “கலன்களில் வைக்கப்படும் சோளம், காளான்கள் சத்தானவை என்பதால் அவற்றைத் தேர்ந்தெடுத்தோம். மேலும், இப்பொருள்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும் என்பதால் குடும்பங்களுக்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. அதேவேளையில், அவற்றைக் கொண்டு சுவையான உணவையும் தயாரிக்கலாம்,” என்று கூறினார்.
மாணவர்கள் இருவரும் தங்களது யோசனைகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதோடு, பல கட்ட சோதனைகள், கருத்துகள் மூலமாகச் சமையல் குறிப்புகளைத் துல்லியப்படுத்தினர்.
இதற்கிடையே, சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் மூத்த ஊட்டச்சத்து நிபுணர் லிம் கியாட், சரியான உணவை வாங்கும் முக்கியதுவத்தை வலியுறுத்தினார்.
“ஆரோக்கியமான தேர்வு முத்திரையைத் தேடிப் பார்த்து, குறைந்த சோடியம், சர்க்கரை, கொழுப்பு கொண்ட வகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறைவான உணவுப்பொருள்களின் பட்டியலையும் எளிதில் அடையாளம் காணக்கூடிய உணவுப்பொருள்களையும் கொண்ட கலன்களில் வைக்கப்படும் உணவுகள் குறைந்த அளவில் பதப்படுத்தப்பட்டவையாக இருக்க வாய்ப்புள்ளது. சில கலன்களில் வைக்கப்படடும் உணவுகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளையும் வழங்குகின்றன,” என்று கூறினார் திரு லிம்.


