செவித்திறன் குறைபாடு, உணர்வுபூர்வமான பாதிப்பு என்பதைவிட உலகத்துடனான தொடர்பில் ஏற்படும் விரிசல் என்பது ஏறத்தாழ 15 ஆண்டுகளாக அச்சவாலை எதிர்கொண்டு வரும் 63 வயது மகேஷ் சமத்தின் அனுபவம்.
செவித்திறன் பாதிப்பு, தமது பணியிலும் சமூக வாழ்விலும் குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதை அவர் பகிர்ந்தார்.
“செவித்திறன் குறைபாடு இருந்தால் பணியிலும் குடும்ப, நண்பர்கள் ஒன்றுகூடலிலும் உரையாடல் நடப்பதே தெரியாது. எதை இழக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் போகலாம். உரையாடல்களைப் பின்தொடர முடியாமல் போகும்போது, தனித்து விடப்பட்டதை உணரத் தொடங்குவோம். அது ஒருவித விரக்தியை ஏற்படுத்தும்,” என்று அவர் விளக்கினார்.
செவித்திறன் பாதிப்பால் பணி இழப்பு
இக்கருத்தை வழிமொழிந்த செவி உணர்வியல் வல்லுநர் ஹிரியா க்ருணாகரன், செவித்திறன் பாதிப்பால் தாம் சந்தித்த இளம்பெண் ஒருவர் தமது பணியிலிருந்து விலக நேரிட்டதைப் பகிர்ந்தார்.
“உரையாடல்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போவது ஒருவரின் தன்னம்பிக்கையைச் சிதைத்து, பதற்றத்திற்கும் மன அழுத்தத்திற்கும் வித்திடுகிறது,” என்றார் அவர்.
“செவித்திறன் குறைபாட்டை முறையாகக் கவனிக்காமல் போவது, சக ஊழியர்களுடனான தொடர்பைப் பாதிக்கிறது. சொல்வதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு திறமையற்றவராகச் சித்திரிக்கப்படக்கூடும்.
“இது இறுதியில் வேலை இழப்பு போன்ற கடுமையான நிலைக்குக் கொண்டு செல்வதுடன், வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்குகிறது,” என்றார் ஹிரியா.
சமூகத் தனிமை
உணர்வு ரீதியாக, சரியாகக் கேட்க முடியாதவர்கள் மற்றவர்களுடன் உரையாடுவதைத் தவிர்க்கத் தொடங்குகிறார்கள். இச்சமூகத் தனிமைப்படுத்தல் அவர்களை மெல்ல மெல்ல மனச்சோர்வுக்குத் தள்ளுவதாகவும் ஹிரியா குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, செவித்திறன் குறைபாடு ஏற்பட்டால் அதை இளம் வயதினர் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதற்கு சமூகத்தில் மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்வதே முக்கியக் காரணம் என்றார் ஹிரியா.
இத்தகைய பயம் அவர்களைத் தங்களுக்குள்ளேயே முடக்கி, மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
செவித்திறன், காது சார்ந்தது மட்டுமன்றி மூளையின் செயல்பாட்டோடு நேரடித் தொடர்புடையது என்று அவர் விளக்கினார்.
“நாம் நம் மூளையின் மூலமே ஒலிகளைச் செயலாக்குகிறோம். செவித்திறன் குறையும்போது, ஒலியைப் புரிந்துகொள்ள மூளை அதிகப்படியான ஆற்றலைச் செலவிட வேண்டியிருக்கிறது. இது சோர்வை ஏற்படுத்தி, ஒருவரின் உற்பத்தித்திறனைக் குறைக்கிறது. காலப்போக்கில் இது அறிவாற்றல் மந்தநிலை, மறதிநோய் போன்ற தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதனைச் சாதாரணமாகக் கருதக்கூடாது,” என்று ஹிரியா எச்சரித்தார்.
தொழில்நுட்ப ஆதரவு
சமூகத்தில் மூக்குக்கண்ணாடி அணிவதை இயல்பாகப் பார்க்கும் மக்கள், செவித்திறன் குறைபாடுள்ளோர் அதற்கான கருவி அணிவதைக் குறையாகப் பார்க்கும் மனப்பான்மை இன்னும் இருப்பதாக ஹிரியா வருந்தினார்.
தொழில்நுட்ப வளர்ச்சி, செவிப்புலன் குறைபாடு உடையோர்க்கு ஆதரவாக அமையும் கருவி வடிவமைப்புக்கு வழிவகுத்துள்ளதைச் சுட்டிய அவர், தாம் பணியாற்றும் ‘ஆட்டிகான்’ நிறுவனம், தனிப்பயனாக்கப்பட்ட கருவிகளை வழங்குவதாகச் சொன்னார்.
உரிய நேரத்தில் கவனித்து வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி சரியான கருவிகளை அணிவது எதிர்காலச் சிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் என அவர் விளக்கினார்.
இனி புது உலகம்
“தற்போதுள்ள செவித்திறன் கருவிகள் முற்றிலுமாக மாறிவிட்டன. நான் பயன்படுத்தும் கருவி எனக்கு ஒரு புதிய உலகத்தைத் திறந்துள்ளது,” என்றார் மகேஷ்.
இந்தக் கருவி மிகச்சிறியதாக இருப்பதால் பிறர் கண்களுக்குத் தெரிவதில்லை என்று சொன்ன அவர், இரைச்சலான சூழலிலும் உரையாடல்களில் கவனம் செலுத்த முடிவதாகச் அவர் சொன்னார்.
தமது திறன்பேசியுடன் இணைக்க முடிவதால் பயன்படுத்துவதற்கும் எளிதாக இருப்பதைச் சுட்டினார்.
நவீன தொழில்நுட்பத்துடன் ‘ஆட்டிகான் சிர்கான்’ போன்ற கருவிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதையும் இவை சுற்றுச்சூழலை ஆய்வுசெய்து ஒலியைத் தானாகவே சரிசெய்வதையும் சுட்டினார்.
“தொழில்நுட்பம் நம் வாழ்வை எளிதாக்கவே இருக்கிறது. ஆட்டிகான் போன்ற நவீன கருவிகள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களை மீண்டும் உலகத்துடன் இணைக்கின்றன,” என்றும் சொன்னார் ஹிரியா.

