சிங்கப்பூரில் உள்ள தனியார் தயாரிப்பு நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள் மேலும் திறம்படச் செயல்படவும் சிறப்பான படைப்புகளைப் படைக்கவும் புதிய வாய்ப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தற்சார்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (AIPRO) ஏற்பாட்டில் ‘நமது சிங்கப்பூர் நமது கதைகள்’ (Our Singapore, Our Stories) என்ற கருப்பொருளில் தனியார் தயாரிப்பு நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள் 150க்கும் மேற்பட்ட குறும் படக் காணொளிகளைத் தயாரித்தனர்.
இதற்குத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆதரவு வழங்கியது. எஸ்ஜி60 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இது நடத்தப்பட்டது.
நகைச்சுவை, ஆவணப்படம், வரலாறு எனப் பல பின்னணிகளில் படைப்புகள் தயாரிக்கப்பட்டன. அவை தமிழ், சீனம், மலாய் மொழிகளிலும் உருவாக்கப்பட்டன.
படைப்புகளைப் படைத்தவர்களுக்கு நன்றிகூறும் விதமாகக் கடந்த மாதம் 25ஆம் தேதி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சிறப்பு விருந்தினராகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியாட் ஹாவ் கலந்துகொண்டார்.
“இதுபோன்ற தளம் மிகவும் முக்கியமானது. அப்போதுதான் நமது தயாரிப்பாளர்கள், படைப்பாளர்கள் தங்களது திறமைகளை வெளியே கொண்டு வரமுடியும்,” என்று துணை அமைச்சர் டான் கூறினார்.
கலைஞர்கள் தயாரித்த படைப்புகளை எஸ்ஜி ஸ்டோரியின் www.sgstory.sg என்ற இணையப்பக்கத்தில் காணலாம். அல்லது www.tiktok.com/@sgstory.sg என்ற டிக்டாக் தளத்திலும் காணலாம்.
“போட்டிமிக்க சூழல், படைப்புகளைத் தயாரிக்கப் போதிய நிதி கிடைக்காதது எனப் பல சவால்களை உள்ளூர் கலைஞர்கள் எதிர்நோக்குகின்றனர். வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட இதுபோன்ற தளங்கள் மிகப்பெறும் உதவியாக இருக்கின்றன,” என்று தயாரிப்பாளர் விஷ்ணு எம் ஆனந்த் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“தற்போது சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. அனைத்து வயதுப் பிரிவினரும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களை ஈர்க்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டோம். இளையர்களுக்கு எந்த மாதிரியான படைப்புகள் பிடிக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க இது உதவக்கூடும்,” என்றார் தயாரிப்பாளர் ஹைதர் அலி.
“தற்சார்பு தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கும் சவால்களைத் துணை அமைச்சர் டானிடம் எடுத்துக்கூறினோம். அவர் கொடுத்த ஊக்கத்தால் இப்போது 150க்கும் மேற்பட்ட படைப்புகள் உருவாகியுள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற பல்வேறு தளங்கள் உருவாக்கப்பட்டு, சிங்கப்பூர் படைப்பாளிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க அனைத்து முயற்சியும் எடுப்போம்,” என்று ஏப்ரோ சங்கத்தின் தலைவர் ஜீவன் நாதன் கூறினார்.

