சட்ட சேவையைச் சமூக சேவையாக மறுவரையறை செய்யும் சாதனா

3 mins read
வழக்கறிஞருக்கான கட்டணத்தைச் செலுத்த இயலாதோரிடமிருந்து பணம் வாங்காமல் அவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடும் ‘புரோ போனோ’ வழக்கறிஞர் சாதனா ராய், தேசியச் சமூகச் சேவை மன்றத்தின் ‘40 வயதுக்குட்பட்ட 40 தலைவர்கள்’ திட்டத்தில் ஒருவராக 2022ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023ல் இவருக்கு ஜோசஃப் கிரிம்பர்க் தலைசிறந்த இளம் வழக்கறிஞர் விருது கிடைத்தது. 2025 சமூக சேவைத் தொழில்துறை விருதுகளிலும் இவருக்கு விருது வழங்கப்பட்டது.
aa7fc93b-1965-4f0f-b61d-644f3d2c7625
‘புரோ போனோ எஸ்ஜி’யின் தலைமைப் பிரதிநிதித்துவ அதிகாரி சாதனா ராய். - படம்: சாதனா ராய்

சமூகத்தில் மிகவும் பலவீனமானவர்களும் பாதிக்கப்படக்கூடியவர்களும் நடத்தப்படும் விதமே, சமூகத்தின் தன்மைக்கும் மதிப்புகளுக்கும் உண்மையான அளவீடாக அமையும் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு பணியாற்றுகிறார் சாதனா ராய்.

அதிகம் கவனிக்கப்படாத சமூகப் பிரச்சினைகளுக்கு உரிய நீதி கிடைப்பதற்கும் அதிலுள்ள இடைவெளியைக் குறைக்கத் தொடர்ந்து உழைத்து வரும் இவருக்கு ‘ஹர் வுமன்’ வழங்கும் இவ்வாண்டுக்கான தலைசிறந்த பெண்மணி விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

“நீதிபதி ஜூடித் பிரகாஷ், சிங்கப்பூரின் தங்க மகள் சாந்தி பெரேரா உள்ளிட்ட வலிமையான பெண்களுக்கு வழங்கப்பட்ட இந்த ‘ஹர் வுமன்’ தலைசிறந்த பெண்மணி விருது எனக்கும் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி,” என்று தெரிவித்தார் இவர்.

சிங்கப்பூர் சட்ட சமூகத்தின் அறநிறுவனமான ‘புரோ போனோ எஸ்ஜி’யில் குற்றவியல் சட்ட உதவித் திட்டத்தின்கீழ் 2015 முதல் முழுநேரக் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார் சாதனா.

இவ்வாண்டு ஏப்ரல் முதல் அவ்வமைப்பின் தலைமைப் பிரதிநிதித்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார் சாதனா.

‘பிரோ போனோ எஸ்ஜி’க்கு முன்பாக சாதனா, பிரபல வழக்கறிஞர் தவிந்தர் சிங் தலைமையில் ‘டிரூ & நேபியர்’ நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

“தனியார் துறையில்தான் என் வாதாடும் நாட்டத்தையும் சட்ட ரீதியான திறன்களையும் கண்டறிந்தேன். ஆனால், அத்திறன்களை இன்னும் அர்த்தமுள்ள வழியில் பயன்படுத்த விரும்பினேன். ‘பிரோ போனோ’ பணிகள் மூலம், நீதியைப் பிற வழிகளில் அணுகமுடியாதோருக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது,” என்றார் சாதனா.

‘பிரோ போனோ’ என்பது, வழக்கறிஞர் யாருக்காக வாதாடுகிறாரோ அவரிடமிருந்து பணம் வாங்காமல் சட்டப் பணியைச் செய்வதைக் குறிக்கிறது.

குற்றவியல் சட்ட உதவித் திட்டத்தின் முதல் வழக்கறிஞர்களில் (CLAS Advocate) ஒருவராக சாதனா 2017ல் நியமிக்கப்பட்டார்.

“சட்டத்துறை பொதுவாகப் பலருக்கும் மிரட்சியளிக்கக்கூடியதாக இருக்கலாம்,” என்ற இவர், பிரச்சினைகளில் உள்ளோரை கனிவுடன் அணுகுவதும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதங்கள்மூலம் முழுமையான உதவியை வழங்க முயல்வதாகவும் சொன்னார்.

சிலருக்கு, அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் சட்ட ரீதியான முடிவுகள் வழங்க முடியாமல் போனாலும், அவர்களுக்குப் பிற வகைகளில் முழுமையான ஆதரவை வழங்கும் உரிய நிறுவனங்களுக்கும் பரிந்துரைப்பதாகச் சொன்னார்.

தமது சக ஊழியர் பிரேம்நாத்துடன் இணைந்து அனைவருக்கும் சமமான, ஒரே தரத்திலான சட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான இலவச சட்ட ஆலோசனை நிலையத்தை அமைப்பதில் பங்காற்றினார் சாதனா. “அங்கு வருவோர்க்கு இதமான, பாதுகாப்பான சூழலை வழங்க வேண்டும் என்பதால், அங்குள்ள வண்ணம் தொடங்கி, பொருள்கள் வரை பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்தோம். அது மனநிறைவான முன்னெடுப்பு,” என்றார்.

குற்றஞ்சாட்டப்பட்ட இளையர்களுக்கு சட்ட ரீதியாக உதவுவதை முக்கியப் பொறுப்பாகப் பார்க்கிறார் சாதனா. “அவர்கள் நம் நாட்டின் எதிர்காலத்தை ஏந்துபவர்கள், ஆனால் பலரும் சவால்மிக்கச் சூழ்நிலைகளில் மாட்டிக்கொள்கிறார்கள்,” என்றார் சாதனா.

நன்னடத்தை, சீர்திருத்தப் பயிற்சியின் மதிப்பீடுகளை நீதிபதி கேட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட இளையர் அழுததை நினைவுகூர்ந்தார் சாதனா. “அத்தகைய தருணங்களில், நாம் அவர்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டும் - வழக்கறிஞராக மட்டுமல்ல, சக மனிதராகவும் - என்பதை நான் உணர்கிறேன்,” என்றார் சாதனா.

“எதிர்காலத்தில், நீதியை அணுகமுடிவது விதிவிலக்காக அல்லாமல் வழக்கமானதாகக் காணப்படவேண்டும்; வலுவான தனியார்-பொது பங்காளித்துவங்கள்மூலம் ‘புரோ போனோ’ பணிகள் இன்னும் நிலைத்தன்மைமிக்கவையாக மாறவேண்டும் என்பதே என் ஆசை,” என்றார் சாதனா. விலங்குவதை தடுப்புச் சங்கத்தில் கெளரவப் பொதுச் செயலாளராகவும் பங்காற்றும் இவர், “தங்களது பிரச்சினைகளை வெளியில் சொல்ல முடியாதது குழந்தைகளும் விலங்குகளும்தான். அவற்றுக்குக் குரல்கொடுப்பது அவசியம். அவ்வகையில், இச்சங்கத்தில் பங்காற்ற வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி,” என்று சொன்னார் சாதனா.

பல இந்தியத் தாய்மார்களைப் போலவே, சிரமப்பட்டுத் தம்மை வளர்த்து, கல்வியளித்து, இந்த நிலைக்கு எட்டவைத்த தம் தாயாரை ‘ஹர் வுமன்’ விருது விழாவுக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு கிடைத்ததையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் சாதனா.

“சமூகத்துக்கு முடிந்தவரை திருப்பிக் கொடுக்கும் முயற்சிகளைத் தொடர்வேன். இந்தியப் பெண்கள் மட்டுமன்றி, முன்னேறத் துடிக்கும் இளம் பெண்களுக்கு உதவுவதிலும் உறுதியாக இருக்கிறேன்,” என்றார் சாதனா.

குறிப்புச் சொற்கள்