தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறையெங்கும் அற்புத ‘மார்வெல்’

2 mins read
d91bd126-354b-49f3-9da1-7b7ba3bcedaa
தமது ‘மார்வெல்’ பொம்மைகளுடன் திரு நசீர். - படம்: த. கவி

அறையில் திரும்பிய இடமெல்லாம் ‘மார்வெல்’ பொம்மைகள் பாய்கின்றன; பறக்கின்றன; சண்டையிடுகின்றன; கூடிப் பேசுகின்றன.

அவற்றுக்கெல்லாம் சொந்தக்காரர் 40 வயது முஹம்மது நசீர்.

கண்ணாடிப் பேழைகளில் நிறைந்திருக்கும் விதவிதமான மார்வெல் பொம்மைகள்.
கண்ணாடிப் பேழைகளில் நிறைந்திருக்கும் விதவிதமான மார்வெல் பொம்மைகள். - படம்: த. கவி

தெம்பனிசில் உள்ள ஐந்தறை வீட்டில் அந்த அறைக்குள் செல்வோருக்கு, மார்வெல் உலகத்துக்குள் நுழைந்த பிரமிப்பு ஏற்படுவது வழக்கம்.

இளம் வயதிலிருந்தே மார்வெல் கேலிச்சித்திரப் படங்களின் தீவிர ரசிகர் திரு நசீர். தம் மனதுக்கு மிக நெருக்கமான அந்தப் பொம்மைகளுடன்தான் நசீர் தமது பணியையும் மேற்கொண்டு வருகிறார்.

தேசிய சேவை புரிந்த காலகட்டத்தில் 20 வயதில் தொடங்கிய மார்வெல் பொம்மைகளைச் சேகரிக்கும் இவரது தீரா ஆர்வம், பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் இவருக்கு இன்பமும் இதமும் அளிக்கிறது.

சந்தையில் புதிய மார்வெல் பொம்மை வந்தால் உடனே நசீர் அதை அடித்துப்பிடித்து வாங்கிவிடுவார். மார்வெல் கேலிச்சித்திரத்தில் இடம்பெறும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அவரிடம் உள்ளன. நசீருக்கு மிகவும் பிடித்தது ‘அயர்ன்மேன்’.

“தொழில்நுட்பத்தையும் இயந்திர நுணுக்கங்களையும் அயர்ன்மேன் பிரதிபலிப்பதால் என்னைக் கவர்ந்த கதாபாத்திரம் அது,” என்றார் வன்பொருள் நிறுவனம் ஒன்றின் வணிக வளர்ச்சி அதிகாரியாகப் பணிபுரியும் திரு நசீர்.

அவரிடம் மொத்தம் 115 பொம்மைகள் உள்ளன. இவற்றுக்காக கிட்டத்தட்ட $60,000 செலவு செய்துள்ள நசீர், ‘தானோஸ்’ பொம்மையையே ஆக அதிகமாக $1,500 விலையில் வாங்கியதாக நினைவுகூர்ந்தார்.

வீடு வாங்கிய புதிதில் தமது பொம்மைகளுக்கென ஒரு தனி அறையை ஒதுக்க விரும்பிய நசீர், அந்த அறையை வடிவமைக்க சுமார் $8,000 செலவு செய்தார்.

தொடக்கத்தில் ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமென்று அவரின் தயார் புலம்பியதுண்டு என்று நசீர் புன்னகையுடன் கூறினார். இரு பிள்ளைகளுக்குத் தந்தையான நசீருக்கு அவரின் மனைவி பெரும் ஆதரவாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நசீரின் மகனும் மகளும் சிறுவயதில் தங்களுக்குப் பிடித்தமான பொம்மைகளை வாங்கிச் சேகரித்தனர். எனினும், அந்த ஆர்வம் பெரிதளவில் நீடிக்கவில்லை என்று நசீர் கூறினார்.

இருப்பினும் இந்தப் பொழுதுபோக்கு சில சமயம் ஒருவகை முதலீடாகவும் இருப்பதாக நசீர் குறிப்பிட்டார்.

“சிலவற்றை வாங்கிய விலையைவிட அதிகமான விலையில் விற்றிருக்கிறேன். தற்போது சிலைகளை விற்பதில் பெரிய நாட்டமில்லை. ஆனால், தேவைப்பட்டால் விற்பேன்,” என்றார் அவர்.

பொம்மைகள் கண்ணாடிப் பேழைகளில் புத்தம்புதிதாக மிளிர்வதற்கு நசீர் மாதம் இருமுறை அவற்றைச் சுத்தம் செய்வதே காரணம்.

“இந்தப் பொம்மைகளை வாங்கிய பிறகு, அவற்றின் பாகங்களை ஒன்றாக இணைக்க வேண்டும். சில நேரங்களில் ஒரு பொம்மையை முழுமையாக உருவாக்கி முடிக்க ஒருநாள் கூட ஆகலாம்,” என்றார் நசீர்.

மார்வெல் பொம்மைகளை ரசிக்கும் நசீர்.
மார்வெல் பொம்மைகளை ரசிக்கும் நசீர். - படம்: த. கவி

கைக்கடிகாரங்கள், ‘பைம்மிதிகள்’ எனப்படும் ஸ்னீக்கர் காலணிகள் ஆகியவற்றைச் சேகரித்து வந்த நசீர், செலவு அதிகம் என்பதால் அந்தச் சேகரிப்புகளைக் கைவிட்டுவிட்டார்.

இருப்பினும், தமது மார்வெல் சேகரிப்பு மோகம் இன்னும் பல ஆண்டுகள் தொடரும் என்று எண்ணியுள்ளார் திரு நசீர்.

குறிப்புச் சொற்கள்