மனநலத் துறை குறித்த ஆழமான புரிதலுக்கு உதவும் ‘மனித நூலகம்’

தமிழர் பேரவையின் மனித நூலகம் நிகழ்ச்சி

மனநலத் துறை குறித்த ஆழமான புரிதலுக்கு உதவும் ‘மனித நூலகம்’

படம்: சுந்தர நடராஜ்

08 May 2026 - 6:29 am

2 mins read

சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாயத்தில் வேலை வாய்ப்புகளைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழர் பேரவை ஏற்பாட்டில் நடைபெறும் ‘மனித நூலகம்’ தொடர் நிகழ்ச்சி இரண்டாம் முறையாக சனிக்கிழமை (மே 9) நடைபெறவிருக்கிறது.

ஈசூனில் அமைந்துள்ள ஶ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும். தமிழர் பேரவையின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

‘மென்டல் ஆக்ட்’ (Mental ACT) அமைப்பும், ஶ்ரீ நாராயண மிஷன் பராமரிப்பு இல்லமும் இதற்கு ஆதரவு அளிக்கின்றன.

நூலகங்களில் புத்தகங்களை இரவல் வாங்குவதுபோல், இந்நிகழ்ச்சியில் பங்கேற்போர் பேச்சாளர்களை ‘இரவல்’ பெற்று, அவர்களுடன் கலந்துரையாடி மனநலத் துறை பற்றிய ஆழமான கண்ணோட்டத்தைப் பெறலாம். அத்துடன், வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிந்துகொள்ளலாம்.

மனநலத் துறையில் வேலை வாய்ப்புகளை ஆராய விரும்பும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிலிருந்து, வேறொரு துறையிலிருந்து மனநலத் துறைக்கு மாற விரும்புவோர் வரை அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

மனநலத் துறை வல்லுநர் அறுவர் இந்நிகழ்ச்சியில் ‘மனித நூல்களாக’ பங்கேற்றுத் தம் அனுபவங்களைப் பகிரவிருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சி கலந்துரையாடல் வடிவில் அமைவதால், பங்கேற்பாளர்கள் மனநலத் துறை சார்ந்த பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்து ஆழமான புரிதலைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

“சிங்கப்பூரில் மனநலச் சேவைக்கான தேவைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மனநலத் துறை வேலை வாய்ப்புகளைப் பற்றிச் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறோம்,” என்று கூறினார் இந்நிகழ்ச்சியின் தலைவரான வெள்ளிநிலா குணாளன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்