கண்ணுக்குத் தெரியாத செயற்கை நுண்ணறிவுத் தோழனைச் சந்திக்கும் சிறுமி ஒருவர் ஆர்வத்தின் உந்துதலால் குறையற்ற நகரம் ஒன்றை உருவாக்கத் தனக்கு உதவுமாறு அந்தத் தோழனிடம் கேட்கிறார்.
அந்தத் ‘தோழன்’ அடுத்தடுத்து தர்க்கரீதியான, திறன்மிக்க, கட்டமைக்கப்பட்ட தீர்வுகளை முன்வைக்கும்போதெல்லாம் அச்சிறுமி ‘ஒருவேளை இப்படி நடந்தால் என்னாகும்?’ எனப் பொருள்படும் ‘வாட் இஃப்?’ (What if?) என்ற எளிய கேள்வியின் மூலம் அதன் கருத்துகளுக்குத் தொடர்ந்து சவால் விடுகிறார்.
அதுவே ‘விகே’ கலைகள் குழு மேடையேற்றவுள்ள ‘எ லிட்டில் டவுன் கால்ட் மேபி’ (A Little Town Called Maybe) நடன நாடகத்தின் மையக்கருவாக விளங்குகிறது.
குழுவின் பத்தாம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வண்ணம் இப்படைப்பு சனிக்கிழமை (நவம்பர் 21) எஸ்பிளனேட்டில் அமைந்துள்ள டிபிஎஸ் அறநிறுவன வெளிப்புற அரங்கில் மேடையேறவுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் புத்தாக்கத்திறன், இரக்கம், பரிவு போன்ற மனிதப் பண்புகளுக்கும் இடையிலான உறவை ஆராயும் பயணமாக இப்படைப்பு அமையவுள்ளது.
தொழில்நுட்பத்தை ஓர் எதிரியாகச் சித்திரிப்பதற்கு மாறாக ஒரு சமூகத்தை உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக்குவது எது என்பதையும் செயல்திறன் மட்டுமே ஒரு சிறந்த உலகத்தை வரையறுத்துவிட முடியுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க இப்படைப்பு பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
அனைத்துத் தலைமுறையினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, ஆர்வம், மனித உறவுகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதில் உள்ள அழகையும் கண்டறியப் பார்வையாளர்களை ஊக்குவிக்கிறது.
இந்நாடகத்தில் பரதநாட்டியம், பாரம்பரிய இந்திய இசைக்கருவிகள், மேற்கத்திய இசைக்கருவிகள், நாடகம் எனப் பல்வேறு கலை அம்சங்கள் ஒன்றிணைகின்றன.
நாடகத்தின் இயக்குநர் ஷெரீன் ஜீவிதா ஜோசப், மக்களின் வாழ்வில் தொழில்நுட்பம் முக்கிய இடத்தைப் பிடித்துவரும் இன்றைய சூழலில் இப்படைப்பின்வழி செயற்கை நுண்ணறிவுக்கும் மனிதநேயத்திற்குமான உறவை ஆராய முனைகிறார்.
“தொழில்நுட்பம் நமக்குப் பல்வேறு சாத்தியங்களை ஏற்படுத்தினாலும் அவற்றுக்கு அர்த்தமளிப்பது மனிதநேயம்தான் என்பதை நாடகத்தின் முடிவில் ரசிகர்கள் உணர்ந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்,” என்று அவர் கூறினார்.
நாடகத்தில் பாரம்பரிய இசையும் மேற்கத்திய இசையும் ஒன்றிணைவதால் மாறுபட்ட இசை வடிவமைப்பை வழங்க படைப்பின் இசை இயக்குநர் ராகவேந்திரன் ராஜசேகரன் முற்பட்டுள்ளார்.
“நான் அவற்றை இந்திய இசைக்கருவிகள், மேற்கத்திய இசைக்கருவிகள் என்று பிரித்துப் பார்க்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஓர் ஆளுமையைக் கொடுத்தேன்.
“மிருதங்கம் இதயத்துடிப்பு, ஊத் (Oud) ஆன்மா, புல்லாங்குழல் சுவாசம், வயலின் பாலம். அவை ஒன்றுக்கொன்று ‘பேசத்’ தொடங்கியதும், இசை இயல்பாகவே இணைந்துவிட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.
நாடகத்தின் நடனமணிகளில் ஒருவரான 21 வயது அம்ரிதா பூர்ணா கிரண், நாடகத்தின் முதல் பகுதி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்குமென நம்புகிறார்.
“இந்தப் படைப்பு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலுடன் தொடங்குகிறது. மிகுந்த பிணைப்புடன் விளங்கிய உலகிலிருந்து 21ஆம் நூற்றாண்டு வளர்ச்சிகளால் நாம் தனித்தனித் தீவுகளாக மாறிவிட்டோம்.
“நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் உற்றாராக ஏற்றுக்கொண்டு எவ்வாறு ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதை இந்த அங்கம் சித்தரிக்கும்,” என்றார் அவர்.
இசை கலைஞர்களுக்குத் தங்களது கற்பனைத் திறனை வெளிப்படுத்த இந்நாடகம் சிறந்த தளமாக அமைந்துள்ளதெனத் தாள வாத்தியக் கலைஞர் அக்ஷரா திரு கூறினார்.
“எந்த நேரத்திலும் இசைக்கலைஞர்கள் இயல்பாக ஒருவருக்கொருவர் இசையால் உரையாடி மகிழ்வதை இந்நாடகத்தின்போது காண வாய்ப்புண்டு,” என்று அவர் சொன்னார்.
நாடகத்திற்கு அனுமதி இலவசம். மாலை மணி 6.15, இரவு 7.30 மணி, 8.15 மணி ஆகிய நேரங்களில் படைப்பு மேடையேறும்.
