வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் பலர் நண்பர்களாக ஒன்றுதிரண்டு இளைப்பாறிப் பொழுதைக் கழிப்பர்.
இருந்தபோதும், திரு கி. விஜெயேந்திரன் போன்ற ஓய்வுபெற்றவர்கள் சிலர் இறைத்தொண்டில் ஈடுபட்டு இன்புறுகின்றனர்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கோயில்களில் இந்த ‘இளம் வாலிபர்கள்’ யாகசாலைகளை அமைக்கும் தொண்டைச் செய்துவருகின்றனர்.
வரும் வியாழக்கிழமை (ஜூன் 18) நடைபெறவிருக்கும் குடமுழுக்கிற்கான யாகசாலை அமைப்பதற்காக இவர்கள் கடந்த இரண்டரை மாதங்களாக ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாகசாலைப் பூசைகள் ஒரு கோயிலின் குடமுழுக்கு நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாகும்.
திருக்குடமுழுக்கிற்கான யாகசாலை வழக்கமாகக் கோயிலுக்கு அருகிலுள்ள திறந்த வெளியில், தற்காலிகமாக எழுப்பப்படும். குடமுழுக்கு நாளன்று பயன்படுத்தப்படும் குடங்களுக்கான சிறப்புப் பூசைகள் இந்த யாகசாலையில் தொடங்கும்.
ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் யாகசாலைப் பூசைகள் கடந்த திங்கட்கிழமை தொடங்கின. இதற்கான யாகசாலையை இந்தத் தொண்டூழியர் குழுவே முழுமூச்சுடன் கட்டி எழுப்பியது.
குழுவின் தொடக்கம்
குழுவை அமைத்து, பல ஆண்டுகாலமாகத் தலைமைப் பொறுப்பை வகித்து வருகிறார் 67 வயது திரு கி. விஜெயேந்திரன்.
தொடர்புடைய செய்திகள்
சிறு வயதிலிருந்தே ஓவியத்திலும் வடிவமைப்பிலும் பேரார்வம் கொண்ட இவர், நேரம் கிடைக்கும்போதெல்லாம் பென்சிலால் வரைவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்.
கலைகள்மீது இவருக்கு இருந்த தீராக் காதலே, பின்னாளில் யாகசாலைகளை வடிவமைப்பதற்கான ஆர்வத்தை விதைத்தது.
1980களிலிருந்து சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள ஶ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தொண்டூழியராக இருந்த திரு விஜெயேந்திரன், 1984ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற குடமுழுக்கின்போது, அப்போதைய தலைவர் வி. கிருஷ்ணாவின் வழிகாட்டுதலுடன் முதல்முறையாக யாகசாலை அமைக்கும் பொறுப்பை ஏற்றார்.
யாகசாலை அமைப்பதில் முன்பின் அனுபவம் இல்லையென்றாலும் எப்படிச் செய்யவேண்டும், என்ன செய்யவேண்டும் என மனத்தில் எழுந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துத் திரு விஜெயேந்திரன் செயலில் ஈடுபட்டார்.
கோயிலில் உள்ள தொண்டூழியர்களைக் கொண்டு யாகசாலையை வடிவமைப்பதற்கான குழுவொன்றை இவர் உருவாக்கினார்.
அன்று தொடங்கிய இவரது இறைத்தொண்டு, அடுத்தடுத்துப் பல கோயில்களுக்கும் பரவியது.
“அந்தக் காலத்தில் எங்களிடம் 20 முதல் 30 தொண்டூழியர்கள் முழுமூச்சுடன் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இப்பொழுது ஏறத்தாழ 10 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஶ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் என்னுடன் தொண்டாற்றியவர்களே,” என்று அவர் கூறினார்.
கடின உழைப்பும் கலைவண்ணமும்
திரு விஜெயேந்திரனும் அவரது குழுவினரும் இதுவரை ஏறத்தாழ 35 குடமுழுக்கு நிகழ்ச்சிகளுக்கு யாகசாலையை அமைத்துள்ளனர்.
ஒரு குடமுழுக்கு நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே ஆயத்தப் பணிகள் தொடங்கிவிடும்.
கோயில் மேலாண்மைக் குழுவுடன் கலந்துரையாடிய பின்னர், இவர் யாகசாலையை வடிவமைத்துத் தருவார்.
தேவையான பொருள்களை வாங்குவதற்கு மேலாண்மைக் குழு ஒதுக்கீடு செய்ததும் அதற்கேற்பப் பொருள்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.
சிவாச்சாரியார்கள் அமர்ந்து வேள்வி வளர்ப்பதற்கு ஒட்டுப்பலகையிலான எளிய கூடம் அமைத்தாலே போதுமானது. ஆனால் அதற்கு அழகான, தெய்வீகக் கலை நிரம்பிய வகையில் வடிவமைக்க வேண்டும் என விரும்பி இந்தக் குழுவினர் கூடுதலாக உழைக்கின்றனர்.
இவர்கள் ஒவ்வொரு பலகையையும் கண்களுக்குக் குளிர்ச்சியான வண்ணங்களில் தீட்டி, தென்னிந்திய பாணியைப் பின்பற்றிப் பிசகின்றி அலங்கரிக்கின்றனர்.
“ஒட்டுப்பலகையை வேண்டிய வடிவில் தச்சர் செய்துகொடுப்பார். கற்களைக் கொண்டு செதுக்கும் பணிகளை ஸ்தபதி செய்வார். நாங்கள் வண்ணம் தீட்டுவது, துளையிடுவது, ஒட்டுவேலைகள் போன்றவற்றைச் செய்வோம்,” எனத் தொண்டர்களில் ஒருவரான 71 வயது திரு ஆர்.ஆர்.பாலச்சந்திரன் கூறினார்.
“ஒவ்வொரு கோயிலுக்கும் அதன் இறைப் பாரம்பரியத்திற்கும் ஏற்றாற்போல் வடிவமைப்புகளை மாற்றவேண்டும். வடிவமைப்பில் தனித்துவம் என்பதே எங்களுடைய முக்கிய குறிக்கோளாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில், மாரியம்மனுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டது.
அவரது வழிபாடுகளில் மஞ்சளும் குங்குமமும் முக்கியப் பங்கை வகிப்பதால், மாரியம்மனுக்கு ஒதுக்கப்பட்ட இடம் மஞ்சள் நிறத்தாலும் சிவப்பு நிறத்தாலும் பூசப்பட்டது.
இதுவரை தாம் அமைக்கத் துணைபுரிந்துள்ள பல்வேறு யாகசாலைகளில், அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் செய்த யாகசாலையே தம் மனத்தில் தனி இடத்தைப் பிடித்திருப்பதாகத் திரு பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.
“அதை நாங்கள் பிரம்மாண்டமான முறையில் செய்துகொடுத்தோம், மனத்திற்கு மிக நிறைவாக இருந்தது. அதனையடுத்து, அண்மைக் காலத்தில், நாங்கள் ஶ்ரீ சிவ-கிருஷ்ண ஆலயத்திற்கும், ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயத்திற்கும் செய்துகொடுத்தோம்,” என அவர் கூறினார்.
அன்றாடப் பணிகளும் சவால்களும்
காலை பத்து மணியளவில் வேலை தொடங்கும். மாலை ஐந்து மணியளவில் இடத்தைச் சுத்தப்படுத்திவிட்டுத் தொண்டூழியர்கள் வீட்டிற்குப் புறப்பட்டுவிடுவர்.
குடமுழுக்கிற்கான நாள்கள் நெருங்க நெருங்க வேலைப் பளுவும் அதிகரிக்கும் என்று அவர்கள் கூறினர்.
சில்ட்ரானிக் நிறுவனத்தில் முழுநேரமாகப் பணிபுரியும் 61 வயது திரு ப.ஜெகநாதன் தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“மற்றவர்களைப் போல் என்னால் இங்கு நாள்தோறும் வந்து உதவமுடியாது என்பதால், ஒவ்வொரு வாரயிறுதியிலும் வந்து உதவுகிறேன். வேலையையும் குடும்பப் பொறுப்புகளையும் தாண்டி இதையும் சமாளிப்பதால் அசதி ஏற்படும். ஆனால், நாங்கள் இதை விரும்பிச் செய்வதால், அசதியைப் பொருட்படுத்தாமல் வேலையை முடிப்பதிலேயே குறியாக இருக்கிறோம்,” என்று அவர் சொன்னார்.
இவர்களில் பெரும்பாலானோருக்கு ஓவியம் தீட்டுவதில் எவ்வித அனுபவமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், குடமுழுக்கு நடைபெறுவதற்கு முன்னரே பணிகளைச் செய்து முடிக்கவேண்டும்; பொருள்கள் கிடைக்க வேண்டும்; ஆள் பலமும் வேண்டும். இப்படி, பல சவால்கள் குழுவுக்கு இருந்தன.
இந்த வயதில் இந்த வேலை தேவையா?
“வீட்டில் அமர்ந்து ஓய்வெடுக்கலாமே?” என்று தொண்டூழியர்களின் குடும்பத்தினர் கேட்பதுண்டு.
நரைத்த முடியும் தளர்ந்த நடையும் முதுமைப் பருவத்தை அவ்வப்போது நினைவூட்டினாலும் இவர்களது மனஉறுதிக்கு வயது தடையாக இருந்ததில்லை.
“ஆரம்பத்தில் கேள்விகள் கேட்ட குடும்பத்தினரிடம் நிலைமையை விளக்கியதால் அவர்களும் காலப்போக்கில் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தனர். அவர்களின் ஒத்துழைப்பு இன்றி எங்களால் 40 ஆண்டுகாலமாக இதைத் தொடர்ந்து செய்திருக்க முடியாது,” என்று திரு ஜெகநாதன் நன்றியுடன் குறிப்பிடுகிறார்.
எதிர்காலத்தை நோக்கிய பயணம்
“இந்த யாகசாலையைச் செய்ய அதிக நேரத்தை அர்ப்பணிக்கவேண்டும். செயலைச் சரியாகச் செய்து முடித்துக்கொடுக்க வேண்டும் என்ற சிரத்தையும் இருக்கவேண்டும்,” எனத் திரு விஜெயேந்திரன் சுட்டினார்.
இதில் ஈடுபட பலர் முன்வருவதைச் சுட்டிய இவர், மிகுந்த ஆவலுடன் அப்போக்கை வரவேற்பதாகக் கூறினார்.
ஓய்வுபெற்ற ஊழியர் 62 வயது திரு பன்னீர்செல்வம் ராமசாமி அவர்களுள் ஒருவர்.
“நான் இந்தக் குழுவில் அண்மையில் சேர்ந்தேன். முதலில் ஈடுபட்டிருந்தேன். ஆனால், ஒருசில மாதங்கள் ஓய்வெடுத்த பின்னர், நான் இதில் தொடர்ந்து ஈடுபட்டேன். இங்கு வருவதன் மூலம், நண்பர்களுடன் வேலைபார்க்க முடிகிறது. நட்பு மேம்படுவதோடு, மனநிறைவையும் உணர்கிறேன்,” எனத் திரு பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
இளம் தலைமுறையினரும் இதை எடுத்துச்செய்ய முன்வர வேண்டும் என்று திரு விஜெயேந்திரன் விரும்புகிறார்.
“சமூகத்தில் ஈடுபடவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. எங்களால் முடியும்வரை இதைத் தொடர்ந்து செய்வோம், செய்ய இயலாத சூழலுக்குத் தள்ளப்பட்டால், ஆதரவையாவது கொடுப்போம்,” எனத் திரு பன்னீர்செல்வம் உருக்கத்துடன் கூறினார்.

