வணிகத்தைத் தாண்டிய மனிதநேயம்

வணிகத்தைத் தாண்டிய மனிதநேயம்

2 mins read
eaecc7a3-2fe1-4d5b-8a33-41e5d0926ec5
வெளிநாட்டு ஊழியர்களின் நலனில் கவனம் செலுத்தி வருகிறது எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ் நிறுவனம். - படம்: எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ் நிறுவனம்
Google News Preferred Icon

வணிகம் செய்து லாபம் ஈட்டுவதுடன் ஒரு நிறுவனத்தின் கடமை முடிந்துவிடுவதில்லை; சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதே உண்மையான வளர்ச்சி என்ற கோட்பாட்டோடு இயங்கி வருகிறது ‘எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ்’ நிறுவனம்.

சட்டத்தை மீறியதற்காகத் தண்டனை அனுபவித்து, மீண்டுவந்த முன்னாள் குற்றவாளிகளுக்குச் சமூகத்தில் மறுவாழ்வு அளிப்பது மிக முக்கியமானது என்பதை இந்நிறுவனம் ஆழமாக நம்புகிறது.

அவ்வகையில், ‘மஞ்சள் நாடா திட்டத்தின்’ (Yellow Ribbon Project) மூலம் இதுவரை முன்னாள் குற்றவாளிகள் ஏறத்தாழ 15 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி, அவர்கள் சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ வழிவகுத்துள்ளது.

அவர்களில் சிலர் வேறு வேலைகளுக்குச் சென்றிருந்தாலும், சிலர் இன்றளவும் இந்நிறுவனத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

அதேபோல, சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழும் வெளிநாட்டு ஊழியர்களின் நலனிலும் இந்நிறுவனம் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

தஞ்சோங் காத்தோங் சாலையில் ஏற்பட்ட புதைகுழி விபத்தின்போது துணிச்சலோடு செயல்பட்டு மனித உயிர்களைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குச் சிறப்புப் பாராட்டும் ஆதரவும் வழங்கிக் கௌரவித்தது ‘எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ்’ நிறுவனம்.

மேலும், ‘இட்ஸ் ரெய்னிங் ரெயின்கோட்ஸ்’ (Its Raining Raincoats) அமைப்போடு இணைந்து, அனைத்துலகப் புலம்பெயர்ந்தோர் தினம், சிங்கப்பூர் தேசிய தினம் போன்றவை தொடர்பான கொண்டாட்டங்களின்போது வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.

அது மட்டுமன்றி, எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிண்டா அமைப்புடன் இணைந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தரமான உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்குவதோடு நின்றுவிடாமல், மனிதநேய அடிப்படையில் சமூகத்தில் ஆக்ககரமான மாற்றத்தை உருவாக்குவதையே ‘எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ்’ நிறுவனம் முக்கிய நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
வணிகம்சமூக சேவைவெளிநாட்டு ஊழியர்