நகைச்சுவை விருந்து படைத்த ‘ரவா உப்மா’

நகைச்சுவை விருந்து படைத்த ‘ரவா உப்மா’

2 mins read
c2463de0-7b9c-41f2-adff-5e5edd20d21a
‘ரவா உப்மா’ நகைச்சுவை விருந்து நிகழ்வில் இடம்பெற்ற மேடை நகைச்சுவைப் படைப்பு.  - படம்: ரவா உப்மா

ஆ. விஷ்ணு வர்தினி

வாழும் மொழியான தமிழை மனத்தை ஆளும் மொழியாகவும் குடும்பங்களிடத்தில் கொண்டுசேர்ப்பது ‘ரவா உப்மா’ மேடை நகைச்சுவைக் குழுவினரின் இலக்கு.

மே 30ஆம் தேதி சனிக்கிழமை மாலை மத்திய பொது நூலகத்தில் இடம்பெற்ற அக்குழுவின் ‘நகைச்சுவை விருந்து’ நிகழ்ச்சி கிட்டத்தட்ட 100 பார்வையாளர்களை ஈர்த்தது. 

குடும்பத்தில் நிகழ்பவை, அன்றாட அனுபவங்கள், உலக நடப்புகள், இளம்பருவ நினைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மேடைப் படைப்புகள் நகைச்சுவை விருந்துக்குச் சுவைகூட்டின.

தேசிய நூலக வாரியத்தின் தமிழ்ச் சேவைகளின் ஆதரவோடு வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, வேறுபட்ட பாணிகளைக் கொண்ட ஏழு படைப்பாளர்களை மேடையேற்றியது. கைதட்டலோடு நின்றுவிடாமல், இடையிடையே பதிலடி கொடுத்த உற்சாகமான பார்வையாளர்களும் நிகழ்ச்சிக்கு உற்சாகம் ஊட்டினர். 

தமிழைப் பாட மொழியாகவே கருதுவது மாணவர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வது அத்தகைய மனப்பான்மையை சற்று நேர்மறையாக மாற்ற உதவுகிறது என்று கூறினார் குடும்பத்தோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்த 40 வயது சுபாஷினி. 

அவரின் 12 வயது மகள் சஞ்சனா, குறிப்பாக ‘ஜென்-சி’ இளையர்களின் செயல்கள், பெற்றோரால் புரிந்துகொள்ள முடியாத அவர்களின் போக்கு குறித்த நகைச்சுவைகளை ரசித்தார். 

இரண்டாம் முறையாக ரவா உப்மாவின் நிகழ்வுக்கு நண்பர்களோடு வந்திருந்த பகுதிநேர தமிழ்மொழி துணைப்பாட ஆசிரியர் ச. ராதிகா, 44, “பட்டிமன்றங்கள், மேடைப் பேச்சுகள் முதலியவையே சிங்கப்பூரில் அதிகம் காணப்படும் நிலையில், இத்தகைய முன்னெடுப்பு புதுமையானதாகவும் ஈர்க்கும் வகையிலும் உள்ளது,” என்றார். 

படைப்பாளர்கள் எழுவரில் பலரும் உள்ளூர்ப் பேச்சாளர் மன்றங்களில் உரையாற்றிய அனுபவம் பெற்றவர்கள்; நகைச்சுவையை ஒரு கருவியாகப் பயன்படுத்த முயன்று அதில் ஆர்வம் கண்டவர்கள்.

தொழில்முனைவரும் பொறியாளருமான 41 வயது பரந்தாமன் சந்தோஷ்குமாருக்கு அவ்வழியே பத்தாண்டுகளுக்கு முன்னர் மேடை நகைச்சுவை பாணிமீது ஈடுபாடு ஏற்பட்டது. அதற்கான உள்ளூர் வாய்ப்புகளோ குறைவாகவே இருந்தன. 2019ஆம் ஆண்டில் ரவா உப்மா உருவாவதற்கு இது முக்கியக் காரணமாக இருந்தது. 

“தொலைக்காட்சி, சமூக ஊடகம் என பல்வேறு தளங்களில் உடனுக்குடன் நகைச்சுவைகளைக் கண்டுகளிக்கும் மக்களை நேரடி நகைச்சுவை நிகழ்வுக்கு வர ஈர்ப்பது ஒரு முக்கிய சவால்,” என ரவா உப்மாவை சேர்ந்த திரு சந்தோஷ்குமார் கூறினார். 

மக்களை இணைக்கும் முக்கிய வல்லமையை நகைச்சுவை பாணி கொண்டுள்ளது என்பது ரவா உப்மாவின் நிறுவனர் ராஜேஷ் குமார் தர்மலிங்கத்தின் நம்பிக்கை. 

புதுமுகங்களுக்குத் தளம் அமைத்துத் தரவேண்டும், வயது வரம்பின்றி அனைவரும் குடும்பத்தினரோடு இணைந்து மகிழும்படியான நிகழ்வுகளைப் படைக்கவேண்டும் என்ற நோக்கங்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இக்குழு, தொடர்ந்து இப்பயணத்தை மேற்கொள்ளும் என முழுநேர மென்பொருள் பொறியாளராக உள்ள அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்