வழக்கமான நிகழ்ச்சிகளிலிருந்து சற்று மாறுபட்ட நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஒன்று வாழ்நாள் கற்றல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சிறப்பாக நடந்தேறியது.
பல்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் நோன்பு முறைகளைப் பகிர்ந்துகொண்ட நிகழ்ச்சியை ‘தி வையிட்ஹேட்டர்ஸ்’ (The Whitehatters) அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. பௌத்த, கத்தோலிக்க, இந்து, சமண, இஸ்லாமிய, பஹாய் சமயங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
பிளவுபட்டிருக்கும் தற்போதைய உலகில், ஒருவரையொருவர் செவிமடுப்பதற்கும் சுய கட்டுப்பாடு, சுய சிந்தனை போன்ற முக்கிய விழுமியங்களை ஆராய்வதற்கும் ஒரு பாலமாக அமைவது நோக்கம்.
‘மனித நூலகம்’ முறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேச்சாளர்கள் நூல்களாகத் திகழ்ந்து தங்களுடைய சமயங்களைப் பற்றி விவரித்துப் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொண்டனர். பங்கேற்பாளர்கள் சமயப் பிரதிநிதிகளிடம் நேரடியாகக் கேள்விகளைக் கேட்டுச் சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டனர்.
“இந்த முன்னெடுப்பை முதன்முறையாகச் செய்வது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. பல்வேறு சமயங்களில் உள்ள ஒற்றுமைகளைப் பற்றிப் பேச அனைவரையும் ஒன்றிணைப்பது நல்லது என நினைத்தோம்,” என்றார் அமைப்பின் நிறுவனரும் இயக்குநருமான ஷாரனி ஹாசன்.
வரும் ஜூலை மாதத்தில் இதைவிடப் பெரிய அளவில் மாபெரும் ‘மனித நூலகம்’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, சமூக நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து நோன்பு துறந்தனர்.
இந்து சமயப் பிரதிநிதியாக திருவாட்டி சு அனுராதா, 57, கலந்துகொண்டு விரதம் இருப்பது குறித்துப் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
முழுநேர நிதித்துறை செய்தியாளரான இவர், பயிற்சி பெற்ற யோகாசன, இந்து சமய ஆசிரியரும் ஆவார். சிங்கப்பூர் ‘இந்து சென்டர்’ அமைப்பில் தொண்டூழியராகவும் செயற்குழு உறுப்பினராகவும் அவர் சேவை செய்து வருகிறார்.
“இந்து சமயத்தில் உபவாசம் அல்லது விரதம் என்பது உடல், வாக்கு, மனம் ஆகிய மூன்று நிலைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இது புண்ணியத்தைச் சேர்க்கவும், மனத்தைத் தூய்மைப்படுத்தவும் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடவும் உதவுகிறது,” என்று அவர் விளக்கினார்.
இந்து சமயத்தில் தோன்றும் பல்வேறு கடவுள்கள், வைணவ-சைவ வேறுபாடுகள் குறித்துப் பங்கேற்பாளர்கள் தம்மிடம் கேள்விகள் கேட்டதாகத் திருவாட்டி அனுராதா கூறினார்.
“ஒருவரைப் பற்றி மற்றொருவர் தெரிந்துகொள்ளும்போது நமக்கு அவர்கள் மீது அன்பும் மரியாதையும் ஏற்படுகின்றது,” என்ற அவர், இந்த நிகழ்ச்சி தமக்கும் கற்றல் அனுபவமாய் அமைந்ததாகக் கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக, அனைவரும் அருகில் உள்ள கேலாங் செராய் ரமலான் சந்தைக்கு ஒன்றாகச் சென்று பண்டிகைக்கால உணவுவகைகளை ருசித்தனர். புதிய நட்புறவுகளையும் அவர்கள் உருவாக்கிக்கொண்டனர்.

