ஊழியர்களுடன் நோன்பு துறந்த இளையர்கள்

1 mins read
86a7f855-f7dd-4c6d-93c5-37a276e81427
பெஞ்சூரு பொழுதுபோக்கு நிலையத்தில் ஏறத்தாழ 2,000 வெளிநாட்டு ஊழியர்கள் நோன்பு துறந்தனர்.  - படம்: கீர்த்திகா ரவீந்திரன் 
multi-img1 of 3

வெளிநாட்டு ஊழியர்களுடன் மூன்றாவது முறையாக நோன்பு துறந்து மகிழ்ந்தனர் இந்திய முஸ்லிம் இளையர்கள் அமைப்பைச் சேர்ந்த (IMYouth) தொண்டூழியர்கள்.

பெஞ்சுரு பொழுதுபோக்கு நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நோன்புத் துறப்பில் சுமார் 2,000 வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்றனர்.

“மூன்று ஆண்டுகளில் இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புத் துறப்புத்தான் ஆகப் பெரியது,” என்றார் இளம் தொண்டூழியர் நுருல் அமீரா.

சுமார் 10 அமைப்புகளிலிருந்து கிட்டதட்ட 70 இளைய தொண்டூழியர்கள் பிரியாணி, நோன்புக் கஞ்சி, குளிர்பானங்கள், பழங்கள், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றை வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பரிமாறினர்.

இத்தகைய நோன்பு துறப்புக்கு ஏற்பாடு செய்வது இளையர்கள் பலருக்கும் மனத்தை நெகிழவைக்கும் அனுபவமாக இருந்தது.

“குடும்பங்களை விட்டு சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களைச் சமூகத்துடன் ஒருங்கிணைக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெரிதும் உதவுகின்றன,” என்று வலியுறுத்தினார் ‘பிஸ்மி’ தனியார் சமூக வானொலி நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சீனீ ஜஃபார் கனி, 56.

“ரமதான் மாதம் என்பது அனைவரையும் ஒன்றுதிரட்டுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு. இனம், மொழி, மதம் ஆகியவற்றைக் கடந்து அனைவரிடமும் பெருந்தன்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை நினைவூட்டும் மாதம்,” என்றார் சிங்கப்பூரின் துணை முஃப்தி முகமது ஹனன் ஹசான்.

அதன் அடிப்படையில் மார்ச் 16ஆம் தேதி நடந்த நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் பல நன்கொடைகள் பெறப்பட்டன.

குறிப்புச் சொற்கள்