செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தினால் பலர் வேலை பறிபோகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஆனால் சில வேலைகளை மனிதர்கள் செய்வதைவிட இயந்திரம் அல்லது செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் செய்தால் பாதுகாப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டிற்கு, கழிவுநீர் ஆய்வு போன்ற பணிகளுக்கு ஊழியர்களை அமர்த்துவதால் ஆபத்தான விளைவுகள் உண்டாகக்கூடும்.
பாதாளச் சாக்கடைக்குள் நச்சுக் காற்று இருக்கும்; மறைவான வளைவுகளும் இருக்கும். அவற்றில் விரிசல்கள், அடைப்புகள், கட்டமைப்புச் சேதம் முதலியவை உள்ளனவா என்பதைக் கண்டறிய தொடர்ந்து ஆய்வுசெய்ய வேண்டியது அவசியமாகும்.
சிங்கப்பூரில் வழக்கமான ஆய்வுகளுக்கும் பழுதுபார்ப்புப் பணிகளுக்கும் தேவைப்படுகின்ற ஏறத்தாழ 3,600 கிலோமீட்டர் நீளமுள்ள பொதுக் கழிவுநீர் வடிகால்களையும் ஆள்கள் நுழையக்கூடிய கிட்டத்தட்ட 100,000 துளைகளையும் தேசியத் தண்ணீர் அமைப்பான பியுபி பராமரித்து வருகிறது.
மேலும் குறுகலான வடிகால்களுக்குள் நேரடியாக நுழைவதால் ஊழியர்களுக்கு ஆபத்துகள் நேரக்கூடும் என்றும் பியுபி சுட்டியது.
இதற்குத் தீர்வுகாணும் முனைப்பில் சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் ‘இகுவானா’ எனப்படும் ஓர் இயந்திரக் கருவியைத் தயாரித்துள்ளது.
குறுகலான நிலத்தடிப் பகுதிகளுக்குள் நிகழ்நேரக் காட்சிகளை வழங்கிப் பாதுகாப்பான தொலைவிலிருந்து ஆய்வுகளை மேற்கொள்ள உதவும் சிறிய இயந்திரக் கருவியே ‘இகுவானா’.
சிறிய விட்டம் கொண்ட குழாய்கள் வழியாக ஊர்ந்துசென்று நிலத்தின் மேற்பகுதியிலிருந்து இயக்குவோருக்கு நிகழ்நேரக் காட்சிகளை அது வழங்கும். ‘இகுவானா’ குறுகலான, இருண்ட சூழல்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மோகன் ராஜேஷ் எலாரா, அவரது குழுவினருடன் இணைந்து ‘இகுவானா’வை உருவாக்கினார்.
அபாயகரமான, குறுகலான சூழல்களுக்கு மனிதர்கள் ஆளாவதைக் குறைக்க வேண்டுமென்ற தொழில்துறைச் சவாலே ‘இகுவானா’வின் உருவாக்கத்திற்கு முக்கியக் காரணமாய் அமைந்ததாக இணைப் பேராசிரியர் மோகன் சொன்னார்.
சிசிடிவி பாதாளச் சாக்கடை ஆய்வு போன்ற வழக்கமான முறைகளின் தொலைவு வரம்பு குறைவாகவே உள்ளது.
நீளம் குறைந்த, சிக்கல் குறைந்த குழாய்களுக்கு மட்டுமே அவை மிகவும் ஏற்றவையாக இருக்கும் என்றார் அவர்.
‘இகுவானா’ எந்தவொரு சூழலுக்கும் எளிதில் பொருந்தக்கூடிய இயந்திரக் கருவியாகும்.
வழக்கமான சிசிடிவி அமைப்புகளால் அணுகுவதற்குச் சிரமமான சிறிய, சிக்கலான குழாய்களுக்குள் 120 மீட்டர் தூரம் வரை ஊடுருவிச் சென்று இதனால் ஆய்வு செய்ய முடியும்.
“தொழில்துறைகள் புதிய தொழில்நுட்பங்களை ஏற்கும்போது ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது. அத்துடன் அவர்களின் திறன்களை மேம்படுத்தி, பாதுகாப்பான, அதிகத் திறன் வாய்ந்த வேலைகளைச் செய்வதற்கும் இயந்திரக் கருவி உதவுகிறது,” என்றார் பேராசிரியர் மோகன்.
பணியிட ஆபத்துகளை முற்றாக அகற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அணுகுமுறைக்கு மாற வேண்டும் என்பதை ‘இகுவானா’ போன்ற கண்டுபிடிப்புகள் உணர்த்துவதாக அவர் தெரிவித்தார்.
அதிக ஆபத்துள்ள செயல்பாடுகளில் இயந்திரவியல், தரவுப் பகுப்பாய்வுத் தானியக்கம் ஆகியவற்றை நேரடியாக ஒருங்கிணைப்பது பாரம்பரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அப்பால் சிங்கப்பூர் எவ்வாறு முன்னேறிச் செல்கிறது என்பதைப் பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.

