இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்: கலாசாரத்தின் சங்கமம்

இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்: கலாசாரத்தின் சங்கமம்

3 mins read
af154f23-ff11-4586-af3c-dc38788b3b73
ஏப்ரல் 18, 19ஆம் தேதிகளில் இந்திய மரபுடைமை நிலையத்தில் இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டின. - படம்: சுந்தர நடராஜ்

புத்தாண்டு என்றோலே புதிய தொடக்கம்தான். 

தமிழர்களுக்குச் சித்திரைப் புத்தாண்டு, சீக்கியர்களுக்கு வைசாகி, மலையாளிகளுக்கு வி‌ஷு, தெலுங்கர்களுக்கு யுகாதி. 

இவ்வாறு ஒவ்வொரு சமூகமும் புத்தாண்டிற்கு வெவ்வேறு பெயர்களைச் சூட்டினாலும் கொண்டாட்ட உணர்வும் குதூகலமும் ஒன்றுபட்ட அனுபவமே. 

சிங்கப்பூர் இந்தியச் சமூகம் கடைப்பிடிக்கும் பல்வேறு பாரம்பரியங்களையும் அவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளையும் பறைசாற்றும் வண்ணம் இந்திய மரபுடைமை நிலையம் இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

சென்ற ஆண்டு, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறிய அளவில் நடந்தாலும் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் இவ்வாண்டு, பெரிய அளவில் “புதுப்பித்தல்” எனும் கருப்பொருளுடன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

“புத்தாண்டு என்றால் புதுத் தொடக்கம். அதனால் இந்தக் கருப்பொருளைத் தெரிவுசெய்து, அதற்கு ஏற்றவாறு கலை நிகழ்ச்சிகளையும் பயிலரங்குகளையும் நாங்கள் ஏற்று நடத்தினோம்,” என்று கூறினார் இந்திய மரபுடைமை நிலையத்தின் தகவல் தொடர்பு மேலாளர் நாந்திகா சிங்காரவேலன், 24.

லிட்டில் இந்தியாவில் வழிகாட்டிச் சுற்றுலாவின் மூலம் இந்திய மரபைக் கட்டிகாக்கும் வணிகங்களைப் பற்றியும் வரலாற்றுத் தடங்களைப் பற்றியும் பொதுமக்கள் தெரிந்துகொண்டனர்.

சுற்றுலா முடிந்த கையோடு, வாழையிலையில் உணவு பரிமாறப்பட்டது.

பரதநாட்டியம், பாங்ரா உள்ளிட்ட கலைகள் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக மேடையேறின.
பரதநாட்டியம், பாங்ரா உள்ளிட்ட கலைகள் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக மேடையேறின. - படம்: சுந்தர நடராஜ்

அது ஒருபக்கம் இருக்க, கண்களுக்கு விருந்தாக அமைந்தன கலாசாரப் படைப்புகள். அண்மையில், “கலாசார மரபுடைமையில் சிறந்த இளையர் விருது” பெற்ற பானப்ரியா பொன்னரசுவும் நிரஞ்சன் பாண்டியனும் கலைப் படைப்புகளை மேடையேற்றினர்.

பரதநாட்டியம், பாங்ரா என்று இந்தியக் கலாசாரப் படைப்புகளின் ஒரு சங்கமமாகத் திகழ்ந்தது நிகழ்ச்சி.

கதைசொல்லும் நிகழ்ச்சியில் “புதிய தொடக்கங்களின் பூந்தோட்டம்” எனும் கதை சிறாருக்காகச் சொல்லப்பட்டது.
கதைசொல்லும் நிகழ்ச்சியில் “புதிய தொடக்கங்களின் பூந்தோட்டம்” எனும் கதை சிறாருக்காகச் சொல்லப்பட்டது. - படம்: சுந்தர நடராஜ்

அதுமட்டுமின்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் குழந்தைகளுக்காகப் “புதிய தொடக்கங்களின் பூந்தோட்டம்” எனும் கதை சொல்லப்பட்டது. விறுவிறுப்பான நடவடிக்கைகள் மூலமும் துள்ளலான பாடல்கள் மூலமும் தமிழ்மொழி மாதத்தைப் பறைசாற்றியது நிகழ்ச்சி.

கொண்டாட்டத்தின்போது 15 சிறிய வர்த்தகங்களுக்கு, அவற்றின் பொருள்களை விற்கும் வாய்ப்பும் கிடைத்தது. நுண்கலைப் படைப்புகள், ஆடை ஆபரணங்கள் போன்ற பலதரப்பட்ட பொருள்கள் விற்கப்பட்டன.

தொன்மைமிக்க கலை ஒன்றின் நுணுக்கங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் பொதுமக்களுக்குக் கிட்டியது.

இந்தியாவைச் சேர்ந்த தோல்பாவைக் கலைஞர்கள் திரு முத்துச்சந்திரனும் திரு முத்துமுருகனும் இக்கலைக்குப் பின்னால் உள்ள மரபையும் நுணுக்கங்களையும் பார்வையாளர்களுக்கு எடுத்துக்கூறினர். 

தோல்பாவைக் கலையை ரசித்த பார்வையாளர்கள்.
தோல்பாவைக் கலையை ரசித்த பார்வையாளர்கள். - படம்: சுந்தர நடராஜ்

கலைமாமணி விருது பெற்ற முத்துசந்திரன் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் மூலம் தமது கலை பிறருக்குத் தெரிவதில் நெகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். 

“இக்கலையைத் தொடர்ந்து முன்னெடுப்போரில் நாங்கள் ஆறாவது தலைமுறை. ஐந்தாவது தலைமுறையில் கலையின் தொடர்ச்சி நின்றுபோனது. நாங்கள் இருவரும் மீண்டும் இக்கலையைக் கையில் எடுத்திருக்கிறோம். அதனால், சிங்கப்பூர் மக்கள் ஆர்வத்துடன் கலையைப் பற்றித் தெரிந்துகொள்ள வந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று மனநிறைவுடன் கூறினார் முத்துசந்திரன்.

“இந்தியர்களைத் தவிர்த்து, மற்ற இனத்தவரும் இந்தியக் கலாசாரத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ள வந்தனர். சுற்றுப்பயணிகளைத் தவிர்த்து, உள்ளூர் மக்களும் ஒன்றுதிரண்டு மகிழ்ச்சியோடு கலந்துகொண்டனர்,” என்றார் நாந்திகா.

இதற்கு முன்னதாக இந்திய மரபுடைமை நிலையத்தின் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டதால், இந்தியப் புத்தாண்டு பற்றிச் சமூக ஊடகங்களில் விளம்பரத்தைப் பார்த்தவுடன் மகனை நிலையத்திற்கு அழைத்துவந்ததாகச் சொன்னார் 32 வயது லினுஷா சுனில்.

“இங்கே பலதரப்பட்ட சுவாரசியமான நடவடிக்கைகள் இருந்தன. புத்தாண்டு பற்றிப் பல தகவல்களைப் பலரும் பகிர்ந்தனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

சக்தி ஃபைன் ஆர்ட்ஸில் பயிலும் 8 வயது சிறுமி பிரகதி, நிகழ்ச்சிக்காக ஒயிலாட்டத்தைக் கற்றுக்கொண்டு ஆடியது நல்ல அனுபவமாய் இருந்ததாகத் தமிழ் முரசிடம் கூறினார்.

தமது மகளுக்கு இந்திய நண்பர்களின் கலாசாரத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ள இது நல்ல தளமாக இருக்கும் என்ற நோக்கில் 38 வயது தந்தை வில் ஜீ, மகளைக் கொண்டாட்டத்திற்கு அழைத்துவந்ததாகச் சொன்னார்.

“இங்கு, அவள் கலை நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கலாசார நுணுக்கங்களைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொண்டாள். ஒவ்வொரு நடவடிக்கையிலும் உற்சாகத்தோடுக் கலந்துகொண்டாள்,” என்றார் வில் ஜீ.

பண்பாட்டையும் படைப்பாற்றலையும் ஒன்றிணைக்கும் வகையில் அமையும் இந்நிகழ்ச்சி ஏப்ரல் 18, 19ஆம் தேதிகளில் நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்