நாடாளுமன்ற உறுப்பினராக, மருத்துவராக, சமூகத் தலைவராக, சமுதாயத்தில் ஒருவராக நான் பல இடங்களுக்குச் செல்கிறேன். அப்போது, தங்கள் பிள்ளைகளின் நாளைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓய்வின்றி உழைக்கும் பல குடும்பங்களைச் சந்திக்கிறேன்.
முன்னேற வேண்டும், வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. அது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்க்கும்போது ஒரு சிறிய, ஆனால் முக்கியமான இடைவெளியை நான் அடிக்கடி காண்கிறேன்.
வாய்ப்புகள் நம் கண்முன்னேதான் உள்ளன. ஆனால், அந்த வாய்ப்புகள் தங்களுக்கானவைதான் என்பதை இன்னும் பல குடும்பங்கள் முழுமையாக உணரவில்லை. சில நேரங்களில், ஒரு குடும்பத்திற்கான புதிய வழி பிறக்க, நம்பிக்கையான ஓர் உரையாடல் அல்லது சரியான நேரத்தில் கிடைக்கும் அறிமுகம் ஒன்றே போதும்.
இந்திய முஸ்லிம் குடும்பங்கள் எப்போதும் சிங்கப்பூர் மலாய்/முஸ்லிம் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகவே இருந்து வருகின்றன. ஆனால், நான் களத்தில் பலரிடம் பேசும்போது, மெண்டாக்கியை வெறும் துணைப்பாடப் பயிற்சி நிலையமாக மட்டுமே நினைக்கும் பெற்றோரை இன்னும் பார்க்கிறேன். கல்விக்கு உதவுவது அதன் முக்கியமான வேலைதான். அது தொடர்ந்து நடக்கும். ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் மெண்டாக்கி அதையும் தாண்டி பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
ஒரு குழந்தை பிறந்தது முதல், அது சமூகத்தில் நிலைத்து நிற்கும் வரை தொடரும் ஒரு தொடர் ஆதரவுப் பயணமாக அது மாறியுள்ளது. தன்னம்பிக்கை உள்ள மாணவர்களை உருவாக்குவது, வலுவான குடும்பங்களைக் கட்டுவது, நாளைய உலகிற்குத் தயாரான ஊழியர்களை உருவாக்குவது, வளமான சமூகத்தை உருவாக்குவது என்ற நான்கு உயர்ந்த நோக்கங்களைச் சுற்றி இந்தப் பயணம் அமைந்துள்ளது.
நம் இந்திய முஸ்லிம் குடும்பங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்றே ஒன்றுதான். ஒரு குழந்தையின் முதல் பாடம் தொடங்கி, இளையர்களின் லட்சியக் கனவு வரை, பெற்றோரின் வாழ்வின் அடுத்தகட்டம் வரை, உதவுவதற்கு ஒரு கரம் எப்போதும் உண்டு என்பதை அறிந்துகொள்வதுதான் அது.
தொடக்கத்திலேயே துணைநிற்பதன் வலிமை
மருத்துவ உலகில், ஒரு நோயை எப்போது கண்டறிகிறோம் என்பதைப் பொறுத்தே அதைக் குணப்படுத்துவது இருக்கிறது. நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிறிய சிகிச்சை போதும், நீண்டகாலத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டு, அறிகுறிகள் தீவிரமடைந்த பிறகு சிகிச்சையளித்தால், அது பெரிய சிக்கலாகிவிடும்.
சமூக ஆதரவுத் திட்டங்களும் அப்படித்தான். படிப்பில் உதவி தேடும் ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி, வேலையில் புதிய பாதை தேடும் ஒருவராக இருந்தாலும் சரி, பிரச்சினை பெரிதான பிறகு தாமதமாக வரும் தீர்வைவிட, ஆரம்பத்திலேயே பேசும் ஒரு சிறிய உரையாடல்தான் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.
அதனால்தான் ‘ரெடி-செட்-லர்ன் மேத்ஸ் எக்ஸ்ப்ளோரர்’ என்ற கணிதத் திட்டத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
பிள்ளைகளின் பெற்றோருக்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், எளிமையான, ஆனால் வலிமையான ஒரு வேலையைச் செய்கிறது. குழந்தையின் அன்றாட வாழ்வில் நடக்கும் சாதாரண விஷயங்கள் மூலமே, எண்கள்மீது அதற்கு எப்படி தன்னம்பிக்கையை வளர்ப்பது என்று பெற்றோருக்குக் கற்றுத் தருகிறது.
திருவாட்டி ரஹீமா பீவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம், தம் மகளுக்கு எப்படிச் சொல்லிக் கொடுத்தார் என்பதில் மட்டும் இல்லை; அவள் எந்த வேகத்தில் கற்றுக்கொள்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு, அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதிலும்தான் இருக்கிறது. அந்த அனுபவம், வீட்டிலேயே தன் குழந்தைக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்க அவருக்குக் கூடுதல் தன்னம்பிக்கையைக் கொடுத்தது.
அதேபோல, இந்தத் திட்டத்தின் ஆரம்பக்கட்டத்தில் கலந்துகொண்ட திருமதி நசீரா நசீர், கணிதத்தை மன அழுத்தம் இல்லாமல், தம் மகளுக்குப் பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பதைத் தெரிந்துகொண்டார். சாப்பிடும் நேரம், மளிகைப் பொருள் வாங்கத் திட்டமிடும் நேரம், விளையாடும் நேரம் என அன்றாட வாழ்வோடு எண்களை அவர் இயல்பாக ஒருங்கிணைக்கத் தொடங்கினார். கற்றலைத் தன் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாற்றிவிட்டார்.
இந்த இரு பெற்றோருமே தங்கள் குழந்தைகளின் படிப்பில் நல்ல மாற்றத்தைக் கண்டார்கள். என்னை வியக்க வைப்பது, அவர்களுக்குள் ஏற்பட்ட அந்தப் பெரிய மாற்றமே. தேவையான அறிவும் வழிகாட்டலும் கிடைக்கும்போது, இந்தப் பயிற்சி முடிந்த பிறகும், தங்கள் குழந்தையின் கற்றல் பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகிறார்கள். இப்படிப்பட்ட வலுவான குடும்பங்களிலிருந்தே தன்னம்பிக்கை உடைய மாணவர்கள் உருவாகிறார்கள்.
வாய்ப்போடு திறமை இணையும்போது
திறமையும் ஆற்றலும் நம் சமூகம் முழுவதும் நிறைந்து இருக்கிறது, ஆனால் அதற்கான வாய்ப்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி தெரிவதில்லை.
மெண்டாக்கி திறனாளர் உபகாரச் சம்பளம், பல்கலைக்கழகத்தில் படிக்கும் திறமையான இளையர்களுக்குத் துணையாக இருக்கிறது. இந்த வாய்ப்பைப் பெறும் அவர்கள், நாளை மற்றவர்களின் வாழ்க்கைக்கும் வழிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கையை இந்தத் திட்டம் வளர்க்கிறது.
அப்படிப்பட்ட மாணவர்களில் ஒருவர், முஹம்மது இக்பால் சமீர் லால். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) கணினி அறிவியல் படிக்கும் அவர், தலைமைப் பண்போடும் தன்னார்வத் தொண்டோடும் தொடர்ந்து சமூகத்திற்கு உதவி வருகிறார். ஒரு சிறிய வாய்ப்பு எப்படி திறமையாக வளர்ந்து, அந்தத் திறமை எப்படி சமூகச் சேவையாக மலர்கிறது என்பதற்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டு.
திருப்புமுனைகளில் தாங்கிப்பிடிக்கும் ஆதரவுக்கரம்
வாழ்க்கை திசை மாறும் அந்த நேரங்களில்தான், குடும்பங்களுக்குச் சமூகத்தின் ஆதரவு மிகவும் தேவைப்படுகிறது.
அவ்வகையில், ‘விமன்@ஒர்க்’ [Women@Work] திட்டம் முக்கியமான ஒன்று. மீண்டும் வேலைக்குத் திரும்ப விரும்பும் பெண்களுக்குத் துணையாக இருந்து, அவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கவும் வேலைச் சூழலை தைரியமாக எதிர்கொள்ளவும் உதவுகிறது.
இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, அனிஷா தமீம். பிள்ளை பெறுவதற்காக அவர் வேலையிலிருந்து விலகியபோதுதான் அவரது வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. மீண்டும் வேலைக்குத் திரும்ப நினைத்தபோது, நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வதிலும் சரியான வேலையைத் தேடுவதிலும் அவருக்குத் தயக்கம் இருந்தது. அந்த நேரத்தில் அவரது குடும்பம் ஒரேயொரு வருமானத்தில்தான் இயங்கிக்கொண்டிருந்தது.
இச்சூழலில், ‘விமன்@ஒர்க்’ திட்டம் அவருக்குத் தெளிவான, நடைமுறைக்கேற்ற வழிகாட்டலையும் அதே நிலையில் இருக்கும் மற்ற பெண்களின் வலுவான ஆதரவையும் கொடுத்தது. சில நேரங்களில், முன்னோக்கிச் செல்வதற்கான தன்னம்பிக்கை, தொழில் சார்ந்த வழிகாட்டுதலிலிருந்து மட்டும் வருவதில்லை. நம்மைப் போலவே மற்றவர்களும் இதே பாதையில் நடந்துள்ளார்கள் என்பதை அறிவதிலிருந்தும் வருகிறது. அவ்வகையில், இதன் பலனாக, இந்த ஆண்டு ஆகஸ்ட்டில், கற்பித்தல் உதவியாளராக அனிஷா வேலைக்குத் திரும்பினார்.
என்னைப் பொறுத்தவரை, இது வெறும் வேலை கிடைத்த கதையன்று. இதுபோன்ற திட்டங்களின் பலன், ஒரு வேலையைப் பெற்றுத் தருவதோடு முடிந்து விடுவதில்லை. அனிஷா தன்னால் என்ன செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை மீட்டெடுத்தார். அதே நேரத்தில், தம் குடும்பத்தின் பொருளியல் மீட்சியையும் வலுவாக்கினார்.
வேலைவாய்ப்பு என்பது வருமானத்திற்கான வழி மட்டுமன்று. தன் வாழ்க்கையைத் தானே முன்னெடுத்துச் செல்லும் ஆற்றலையும் வாழ்வின் நோக்கத்தையும் துணிவுடன் முன்னோக்கிச் செல்லும் தன்னம்பிக்கையையும் மீட்டுத் தருவதே அதன் மிகச் சிறந்த பலன்.
தொடரும் உதவிகள்
குடும்பங்களோடும், குடியிருப்பாளர்களோடும் நான் பேசியதிலிருந்து கற்ற சில ஆழமான உண்மைகள் என் மனத்தில் அப்படியே நிற்கின்றன. குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான சமூக உதவியைத் தேடி வர சற்று தாமதமாகலாம். ஆனால், அதற்காக அவர்களுக்கு உதவி தேவையில்லை என்று அர்த்தமாகாது. ஒரு குழந்தையின் படிப்பு குறித்த கவலைக்குப் பின்னால், பண நெருக்கடியோ பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் சுமையோ வேலை குறித்த அழுத்தமோ கூட இருக்கலாம்.
அதனால்தான், நல்ல திட்டங்கள் மட்டும் இருந்தால் போதாது. அந்த உதவி எல்லோருக்கும் தெரியும்படியும் தொடர்புடையதாகவும் நம்பிக்கைக்கு உரியதாகவும் இருக்க வேண்டும்.
பெரும்பாலும், குடும்பங்கள் தங்கள் முதல் அடியை எடுத்து வைப்பதே, அவர்கள் ஏற்கெனவே நம்பும் ஒருவர் அவர்களுக்கு ஒரு வாய்ப்பைக் காட்டும்போதுதான். அவர் ஓர் ஆசிரியராகவோ தொண்டூழியராகவோ முதலாளியாகவோ அண்டை வீட்டுக்காரராகவோ இருக்கலாம், அல்லது ஒரு சமூக அமைப்பாகவும் இருக்கலாம்.
இப்படிப்பட்ட நம்பிக்கையான தொடர்புகளே, குடும்பங்களுக்கு இருக்கும் உதவிகளைக் கண்டறிய வழிகாட்டுகின்றன. வாய்ப்புகளை அவர்கள் கண்ணுக்குத் தெரியும்படியும், எளிதில் கிடைக்கும்படியும் செய்கின்றன. அந்த முதல் அடியை எடுத்துவைக்க வேண்டிய பொறுப்பு, குடும்பங்களிடம் மட்டுமே இருந்துவிடக்கூடாது.
அதேபோல, பிரச்சினைகள் ஒருபோதும் தனியாக வருவதில்லை.
சமூக ஆதரவைப் பெற்றவர்களின் வாழ்க்கையில் அடுத்து நடக்கும் மாற்றங்களிலேயே இதை நாம் தெளிவாகப் பார்க்க முடியும். அனிஷா இப்போது ‘விமன்@ஒர்க்’ திட்டத்தில் இருக்கும் மற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பகிர்ந்து வழிகாட்டுகிறார்.
இக்பால் தன் நேரத்தை மாணவர்களுக்காகச் செலவிட்டு தொடர்ந்து உதவி வருகிறார். அவர்கள் இருவரும் வெவ்வேறு வழிகளில், மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையின் முதல் அடியை எடுத்து வைக்க உதவும் நம்பிக்கைக்குரிய மனிதர்களாக மாறியுள்ளனர்.
இப்படித்தான் ஒருவருக்குக் கிடைத்த ஆதரவு, அடுத்தவருக்கான ஆதரவுக்கரமாக மாறுகிறது. தனி ஒருவரிடமிருந்து ஒரு குடும்பத்திற்கும், அங்கிருந்து ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எனப் பன்மடங்காகப் பெருகி விரிகிறது.
“வலுவான சமூகம் என்பது வெறும் திட்டங்களை வகுப்பதால் மட்டும் கட்டப்பட்டு விடுவதில்லை. ஒவ்வொரு குடும்பமும் தனக்கான பாதையைத் தெளிவாகப் பார்க்கும்போதும் அந்த வாய்ப்புகள் தனக்கானது என்று உணரும்போதும், தொடக்கத்திலேயே ஆதரவைப் பெற்று அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் நம்பிக்கையைப் பெறும்போதும்தான் சமூகம் கட்டமைக்கப்படுகிறது.”
நாம் தொடர்ந்து கட்டமைக்க விரும்புவதும் இதைதான். சரியான நேரத்தில் கிடைக்கும் உதவி, ஒருவரை அடுத்தவரைச் சார்ந்திருக்க வைப்பதில்லை. மாறாக, சுயமாக செயல்படும் துணிவையே அது விதைக்கிறது. அந்த ஆற்றல், குடும்பங்களை வலுப்படுத்துகிறது. வலுவான குடும்பங்கள், ஒட்டுமொத்த சமூகத்தையும் வலுப்படுத்தி, வளப்படுத்துகின்றன.
உங்கள் வீடு தேடிவரும் நல்வாய்ப்புகள்
அதனால்தான், குடும்பங்களுக்கு அருகிலேயே சமூக ஆதரவைக் கொண்டுசேர்ப்பது முக்கியமாகிறது. ரைக்கான் இல்மு @ குடியிருப்புப் பேட்டைகள் [RI@H] திட்டத்தின் மூலம், மெண்டாக்கி அமைப்பும் அதன் பங்காளித்துவ அமைப்புகளும் உதவியை நேரடியாக நமது வட்டாரங்களுக்கே கொண்டு வருகிறார்கள்.
இதன்மூலம், குடும்பங்கள் தங்களுக்குள் உரையாடல்களைத் தொடங்கவும் வாய்ப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் தங்களுக்கு வழிகாட்டுபவர்களுடன் இணையவும் ஒரு தெளிவான வழி உருவாகிறது.
சமூக அமைப்புகள், பங்காளிகள், சேவை வழங்குவோர் என அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றிணைப்பதன் மூலம், RI@H (Raikan Ilmu@Heartlands) திட்டம் குடும்பங்கள் தங்களுக்கான வாய்ப்புகளை எளிதில் கண்டறியவும் தங்கள் தேவைக்கேற்ற உதவியை அடையவும் வழி செய்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் நம்பிக்கை மிக எளிமையானது: உதவி என்பது குடும்பங்கள் அதைத் தேடி வரும் வரை காத்திருக்கக் கூடாது. முடிந்தவரை எல்லா வேளைகளிலும், மக்கள் இருக்கும் இடத்திற்கே அது சென்றுசேர வேண்டும்.
நமது இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு, எனது செய்தி மிக எளிமையானது. உதவியை நாடுவது என்பது ஒரு குடும்பம் சிரமத்தில் இருக்கிறது என்பதற்கான அடையாளமன்று. சில நேரங்களில், ஒரு குடும்பம் இன்னும் முன்னேறிச் செல்ல விரும்புகிறது என்பதற்கான அடையாளம் அது. நீங்கள் எந்த நிலையிலிருந்து தொடங்கினாலும், உங்களுக்கு உதவி வழங்குவதற்கான ஆதரவுத் தளங்கள் தயாராகவே இருக்கின்றன.
ரைக்கான் இல்மு @ குடியிருப்புப் பேட்டைகள் [Raikan Ilmu@Heartlands] திட்டத்தின் நிகழ்ச்சி
அக்டோபர் 3 - 4: ஒன் பொங்கோல்
