திருவாட்டி உமா மகேஸ்வரியும் அவருடைய கணவரும் 30 ஆண்டுகளாக தாங்கள் குடியிருந்த வீட்டை விற்று வேறொரு வீட்டிற்கு செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
ஒரு சொத்து முகவரின் உதவியால் அவர்களின் வீட்டு விற்பனை செயல்முறை சுமுகமாகச் இருந்தது.
எவ்விதத் தடையுமின்றி அத்தம்பதியினர் தங்கள் திருப்திக்கேற்ப வீட்டை விற்றனர்.
இவர்களைப்போலவே 92 விழுக்காட்டுப் பயனீட்டாளர்கள் சொத்து முகவர்கள் வழங்கும் சேவைகளில் மனநிறைவு அடைந்ததாக சென்ற ஆண்டு சொத்து முகவர் மன்றம் நடத்திய பொதுப் பார்வை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
2012ல் முதன்முதலில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்புக்குப் பிறகு இதுவே அதிகபட்ச விழுக்காடாகும்.
சொத்து முகவரை நேரடியாகச் சந்தித்து அவர்களிடம் பேசும்போது பயனீட்டாளர்களுக்கு ஒரு நல்ல எண்ணம் கிடைப்பதாகத் தெரியவந்துள்ளது.
சிறந்த சொத்து விலை அல்லது வாடகை பெறுவது, நடைமுறைகள், ஆவண வேலைகளில் உதவி, சொத்து முகவரின் தொடர்புகள் மூலம் விரைவான சொத்துப் பரிவர்த்தனைகள் நடைபெறுவது போன்ற காரணங்களுக்காக பயனீட்டாளர்கள் சொத்து முகவர்களை நாடுவதாக நம்பப்படுகிறது.
அதைப் பற்றி பகிர்ந்துகொண்ட திருவாட்டி உமா, 54, அவர் தேர்ந்தெடுத்த சொத்து முகவர் திருவாட்டி நடலி இந்திரா அனைத்துத் தகவல்களையும் தெளிவாக புரியவைத்ததாகச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“30 ஆண்டுகள் ஒரு வீட்டில் இருந்துவிட்டு வேறொரு வீட்டிற்குச் செல்லும்போது எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது. ஆனால் திருவாட்டி நடலி மன ஆறுதல் தந்து எங்கள் வீட்டை நல்ல விலைக்கு விற்க வழியமைத்தார்,” என்றார் திருவாட்டி உமா.
பயனீட்டாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளுக்கேற்ப தனது சேவைகளில் தகவமைத்துக்கொள்கிறார் புரோப்நெக்ஸ் முகவரான திருவாட்டி நடலி இந்திரா, 45.
பயனீட்டாளர்களின் தேவைகளை நன்கு அறிந்துகொள்வது, தற்போதைய விதிமுறைகளின்படி பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய தொடர்புடைய சோதனைகளை நடத்துவது, சிறந்த விலைகளை பேரம் பேசுவது போன்ற எதிர்பார்ப்புகளை பயனீட்டாளர்கள் வைத்துள்ளதாகவும் அதில் சொத்து முகவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம் என்றும் கணக்கெடுப்பில் அறியப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திருவாட்டி நடலி, பயனீட்டாளர்கள் முகவர்களைவிட அதிகம் தெரிந்து வைத்துள்ளதாகவும் மின்னிலக்கப் பயன்பாட்டால் பயனீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளதாகவும் சொன்னார்.
“பலர் சமூக ஊடகத் தளங்கள் மூலம் வீடுகளைப் பற்றி தெரிந்து வைத்துள்ளனர். பயனீட்டாளர்கள், முகவரைவிட அனைத்து விவரங்களையும் தங்கள் விரல் நுனியில் தெரிந்து வைத்துள்ளனர்,” என்று கூறினார் திருவாட்டி நடலி.
சொத்து நிறுவனங்கள் பல முகவர்களுக்கு தக்க பயிற்சிகளையும் அளிப்பதாக தெரிவித்த திருவாட்டி நடலி, ஒரு சொத்து முகவர் பயனீட்டாளர்கள் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்க வேண்டும் என்றார்.
“எப்போதும் பயனீட்டாளர்களுடன் நல்ல தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். விவரங்கள் அனைத்தையும் தெளிவாக அவர்களிடம் பகிர வேண்டும். இவ்வாறு இருந்தால் ஒரு பயனீட்டாளருக்கு எங்கள்மீது நம்பிக்கை அதிகரிக்கும்,” என்று சொன்னார் திருவாட்டி நடலி.
10 ஆண்டுகளாக இத்துறையில் இருந்து வரும் சொத்து முகவர் திரு குணராஜ் திருச்செல்வம், 45, ஒவ்வொரு முறையும் பயனீட்டாளர்கள் தனது சேவையை அணுகிய பின்னர் அவர்களை தொடர்புகொண்டு நலம் விசாரிப்பது வழக்கம்.
“ஒரு வீட்டை விற்று முடித்தவுடனோ அல்லது ஒருவர் ஒரு வீட்டை வாங்கிய பின்னரும் நான் அவர்களை தொடர்புகொண்டு ஏதாவது சிக்கலை அவர்கள் சந்திக்கிறார்களா என்று கேட்டு அறிந்துகொள்வேன்,” என்று சொன்னார் சிங்கப்பூர் ரியல்டர்ஸ் இன்கோர்பரேடெட் நிறுவனத்தில் பணியாற்றும் திரு குணராஜ்.
திருவாட்டி நடலி கூறியதுபோல பயனீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளும் கூடியுள்ளதாக சொன்ன திரு குணராஜ், சமுக ஊடகத் தளங்கள் மூலம் தனது சேவைகளை அறிமுகம் செய்து வருகிறார்.
புதிதாக திருமணமான திவ்யஸ்ரீ, 31, அகிலேஷ், 34, தம்பதியினர் சொத்து முகவரின் சேவையுடன் மறுவிற்பனை வீட்டை அண்மையில் வாங்கினர்.
சொத்து முகவரின் உதவி மூலம் அவர்களால் அனைத்தும் எளிதில் செய்ய முடிந்ததாக சொன்ன அத்தம்பதி, சிறந்த சொத்து முகவரை தேர்ந்தெடுத்தால்தான் அது சாத்தியமாகும் என்றனர்.
முன்னர் அவர்கள் நாடிய சொத்து முகவர் அவர்களின் கேள்விகளுக்கு செவிமடுத்ததாக சொன்ன திவ்யஸ்ரீ, சமூக ஊடகத் தளம் மூலம் வேறொரு சொத்து முகவரை அவர்கள் நாடியதாகப் பகிர்ந்துகொண்டார்.
சொத்து முகவர்களும் இன்றைய நவீன போக்கிற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டுள்ளதால் சேவைத் தரம் அதிகரித்ததாக அகிலேஷ் கூறினார்.