மொழிபெயர்ப்புப் போட்டிவழி பெருகிய மொழியறிவு

மொழிபெயர்ப்புப் போட்டிவழி பெருகிய மொழியறிவு

2 mins read
a6703eeb-24b4-486f-b2e1-178aa85b6419
மொழிபெயர்ப்புத் திறனைச் சோதிக்கும் போட்டியில் ஏறத்தாழ 200 உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற ‘மொழிபெயர்ப்புப் போட்டி’ தமிழ் ஆர்வலர்களையும் மாணவர்களையும் ஈடுபடுத்தியது. 

தேசிய மொழிபெயர்ப்புக் குழுவுடன் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ 200 உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களின் மொழித்திறனைச் சோதித்தனர்.

போட்டியின்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கிலச் சொற்கள், சொற்றொடர்கள், உவமைகள் ஆகியவற்றை அவர்கள் உடனுக்குடன் மொழிபெயர்த்தனர். 

நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக, கவிஞர் மகுடேசுவரன் மாணவர் பாசறை வழங்கிய “சொல்! தமிழ்ச் சொல்!” எனும் இணையச் செயலிவழிப் போட்டி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்போட்டியின் மூலம் பல புதிய தமிழ்ச் சொற்களையும் அவற்றின் பொருள்களையும் அறிந்துகொண்டதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

மொழிபெயர்ப்புப் போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் ஆர்வமும் மொழித்திறனும் நிகழ்வின் வெற்றியை மேலும் உயர்த்தியதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர். 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வளர்தமிழ் இயக்கத் தலைவர் நசீர் கனி, “பதின்மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் தமிழின் செழுமையையும் மொழிவளத்தையும் கொண்டுசேர்த்துள்ளது என்பதே இதன் மிகப்பெரிய வெற்றி,” எனப் பாராட்டினார்.

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத் தலைவர் யூசுப் ராவுத்தர் ரஜித், “இத்தகைய முயற்சிகள் வழியாக மாணவர்களிடையே தமிழ்மொழியின் செழுமையையும் பயன்பாட்டையும் விரிவுபடுத்த பல்வேறு புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும்,” எனக் கூறினார்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்பே நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம் எந்று கூறிய நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு நாணற்காடன், அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
மொழிதமிழ் மொழிபோட்டிமாணவர்