எஸ்-பாஸ் சம்பளத் தகுதி உயர்வு அறிவிப்பால் வணிகர்கள் கவலை

கூடுதல் செலவுகளை ஏற்க வேண்டியிருக்கும் என லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் கருத்து

எஸ்-பாஸ் சம்பளத் தகுதி உயர்வு அறிவிப்பால் வணிகர்கள் கவலை

2 mins read
22caac45-3118-412d-9642-fd56bc8bc766
இந்திய வர்த்தகங்களில் எஸ்-பாஸ் அட்டையில் பணியாற்றுவோரில் உணவக நிர்வாகிகள், சேவைத்துறை மேற்பார்வையாளர்கள், குறிப்பிட்ட நிபுணத்துவம் கொண்டுள்ள இந்திய நாட்டவர்களும் அடங்குவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எம்ப்ளாய்மென்ட் பாஸ், எஸ்-பாஸ் வேலை அனுமதி அட்டைகளைப் பெறுவதற்கான சம்பளத் தகுதி உயர்த்தப்படுவதால் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா வட்டார வணிக நிறுவனங்கள் கூடுதல் செலவுகளை ஏற்க வேண்டிவரும்.

இருந்தபோதும், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்ட அறிக்கையால் சிங்கப்பூரர்களைப் பணியமர்த்த நிறுவனங்கள் ஊக்கமடையக்கூடும் என்று சிறிய, நடுத்தர வணிகர்கள் கருதுகின்றனர்.

எம்ப்ளாய்மென்ட் பாஸ் அனுமதி அட்டைக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் $5,600லிருந்து $6,000க்கு உயர்த்தப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவித்திருந்தார்.

அத்துடன், புதிய எஸ்-பாஸ் விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் $3,300லிருந்து $3,600க்கு உயர்த்தப்படும். இந்த இரண்டு மாற்றங்களும் 2027ல் நடப்புக்கு வரும். அனுமதி அட்டையைப் புதுப்பிப்போருக்கு 2028ல் மாற்றங்கள் நிகழும்.

சேவைத் துறைக்குச் சவால்

இந்திய வர்த்தகங்களில் எஸ்-பாஸ் அட்டையில் பணியாற்றுவோரில் உணவக நிர்வாகிகள், சேவைத்துறை மேற்பார்வையாளர்கள், குறிப்பிட்ட நிபுணத்துவம் கொண்டுள்ள இந்திய நாட்டவர்களும் அடங்குவர்.

செலவைக் கட்டுப்படுத்துவதற்காக, நடுத்தரத் திறன்கொண்ட வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருக்கும் வர்த்தகங்களின் போக்கை இந்த அறிவிப்பு மாற்றக்கூடும்.

இருந்தபோதும், தற்போதைய ஊழியர்களில் சிலருக்கு, குறிப்பாக ஏறத்தாழ $3,300 சம்பளம் பெறுவோருக்கு ஊதியம் உயர்த்தப்படாவிட்டால், அவர்களுக்கு எஸ்-பாஸ் புதுப்பிக்கப்படாது.

செலவுகளைச் சமாளிக்கத் தடுமாறிக்கொண்டிருக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு இது நெருக்கடியாக அமையலாம்.

இதன் விளைவால், வாடிக்கையாளர்கள் பொருள்களின் விலையேற்றத்தைச் சந்திக்க நேரிடலாம் என்று ஹாஜி எம்.என்.டிரேடிங் இறைச்சிக்கடை உரிமையாளர் முஸ்தஃபா ஷாகுல் ஹமீது கருத்துரைத்தார்.

உள்ளூர் ஊழியரணிக்கு வாய்ப்பு

உள்ளூர்வாசிகளை வேலைக்குச் சேர்க்கவும் அவர்களின் சம்பளத்தை உயர்த்தவும் அரசாங்கத்தின் உத்திபூர்வ நடவடிக்கையாக இந்த அறிவிப்புகள் அமைவதாகக் காயத்திரி உணவகத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.மகேந்திரன் கருதினார்.

“தீர்வை, இதர செலவுளுக்கு அப்பாற்பட்டு வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து வேலை செய்வோர்க்குக் குறைந்தபட்சம் $3,600 சம்பளம் தரவேண்டிய நிலையில் ஒரு வர்த்தகம் இருந்தால், அந்தச் சம்பளத்தை உள்ளூர் ஊழியருக்கு வழங்குவது குறித்து அது சிந்திக்கும். இது சிங்கப்பூரர்களுக்குச் சாதகமாக இருக்கக்கூடும்,” என்று திரு மகேந்திரன் கூறினார்.

இருப்பினும், வெளிநாட்டவரைப் பணியமர்த்தும் செலவு அளவுக்கு அதிகமானால் வருவாய் குறைந்து, நல்ல சம்பளம் தரும் வேலைகளின் உருவாக்கமும் பாதிக்கப்படலாம் என்று ஆனந்த பவன் உரிமையாளர் வீரன் குமார் கூறினார்.

“வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பால் எங்களது வருவாய், சேவைத் தரம், உற்பத்தித்திறன், உணவின் தரம் ஆகியவற்றை உயர்த்த முடிந்தது. ஆனால், தற்போதைய நிலையில் சிங்கப்பூரர்களை ஈர்க்கத் தேவைப்படும் சம்பளத்தை வழங்குவதும் சிரமமாக உள்ளது,” என்றார் அவர்.

மேற்கண்ட அறிவிப்பு, குறுகிய காலத்தில் நிறுவனங்களுக்குச் சிரமமாக இருந்தாலும், நிறுவனங்கள் தங்களது வணிகச் செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்யக்கூடும் என்று லிட்டில் இந்தியா வர்த்தகர், மரபுடைமைச் சங்கத் தலைவர் ரெகுநாத் சிவா கருத்துரைத்தார்.

பாரம்பரிய வர்த்தகங்களில் ஈடுபட உள்ளூர் ஊழியர்கள் ஆர்வம் காட்டக்கூடும் என்றும் அவர்கள் இதன்வழி பயனடையலாம் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்