‘கிராமி’ விருதுகளுக்கு வாக்களிக்கும் இந்தியப் பாரம்பரிய இசைக்கலைஞர்

4 mins read
1cd6eb62-6e60-46aa-b84d-51fdaa1c960f
பல்லின சமூகமாகத் திகழும் சிங்கப்பூரில், பல்வேறு பாரம்பரிய இசைகுறித்த புரிதல் ஏற்படவும் அவற்றை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் வாய்ப்புகள் இருப்பதாகவும், இளம் கலைஞர்கள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார் கவிதா. - படம்: த கவி

உள்ளூர் இசை, குறிப்பாக இந்தியப் பாரம்பரிய இசை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் கிராமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும் ஆழமாக நம்புகிறார் இசைக்கலைஞர் கவிதா ஜெயராமன். அதற்குத் தம்மால் இயன்ற வரை உழைத்து வருவதாகவும் குறிப்பிட்டார் அவர்.

கர்நாடக இசைப் பாடகர், வீணை இசைக்கலைஞர், இசைப் பயிற்றுவிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட அவர், கடந்த மூன்றாண்டுகளாக கிராமி விருதுகளுக்கு இணைநிலை வாக்காளராகவும் உள்ளார்.

அவரது இசைப் பயணம், கிராமி விருதுகளுக்கான வாக்காளராகத் தகுதி பெற்றது, அதன் கட்டமைப்பு, உலக அரங்கில் உள்ளூர் இசைக்கலைஞர்கள் அங்கீகரிக்கப்படுவதன் அவசியம் எனப் பலவற்றைக் குறித்தும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் கவிதா.

இசைப்பயணத்தின் தொடக்கம்

1950களில் கர்நாடக இசைப்பள்ளி நடத்தி வந்த தாத்தா, இசைக் கலைஞரான தாயார், என இசைக் குடும்பத்தில் பிறந்தவர் கவிதா. நான்கு வயதில் இசைப் பயணம் தொடங்கினாலும், இசை, தமது வாழ்க்கையுடனே தொடர்ந்து பயணித்ததை நினைவுகூர்ந்தார் அவர்.

கடந்த 2005ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த அவர், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் இணைந்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தோர், தாங்கள் பயணித்த அனைத்து இடங்களிலும் இசையைத் தொடர்ந்த காரணத்தினால் அது எங்கும் பரவியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

‘கிராமி’ வாக்காளராக வாய்ப்பு

“கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரது வாழ்விலும் மாற்றம் ஏற்பட்டதுபோல என் வாழ்விலும் ஏற்பட்டது,” என்றார் அவர்.

கர்நாடக இசைக்கு மின்னிலக்க உலகில் குறைவான பிரதிநிதித்துவம் உள்ளதை உணர்ந்த அவர், அதனை நோக்கித் தமது கவனத்தைச் செலுத்த ஏதுவாக முழுநேரப் பணியைத் துறந்தார்.

அப்போது அமெரிக்காவில் இருந்த அவர், மாசசூசெட்சில் உள்ள பெர்க்லீ இசைக் கல்லூரியில் சேர்ந்தார். “அடிப்படையில் வர்த்தகத் துறை நிபுணத்துவம் இருந்ததாலும், இசைமீது ஆர்வம் இருந்ததாலும், ‘இசை வர்த்தகத்’ துறையைத் தேர்ந்தெடுத்தேன்,” என்றார்.

“அந்த நேரத்தில், அமெரிக்காவில், இசைத்துறையில் பயிலும் மாணவர்களுக்கான, ‘கிராமி யூ’ எனும் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் நுழைந்தது, எனது கிராமி வாக்காளர் பயணம் தொடங்க, தொடக்கப்புள்ளியாக அமைந்தது,” என்றார்.

வெனிசுவெலா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் ‘லத்தீன் கிராமியின்’ மையமாகத் திகழும் மயாமியில் தங்களது இசைப்பயணத்தை மேற்கொள்வர். இத்திட்டத்தின் வழியே அக்குழுவில் உள்ள பல்வேறு பாரம்பரிய இசைக்கலைஞர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்ததாகச் சொன்னார் கவிதா.

அப்போது தாம் சந்தித்த ஒரு வயலின் இசைக்கலைஞர் ‘கிராமி’ விருதுகளில் பெரும்பாலும் வெளிநாட்டினர் வாக்காளர்களாக இருப்பதையும், இந்தியப் பாரம்பரிய இசைக்கான பிரதிநிதிகள் குறைவாக இருப்பதையும் கோடிட்டுக் காட்டியதாகக் கூறினார் கவிதா.

மேலும், ‘கிராமி’ விருது வழங்கும் குழுவும் பலதரப்பட்ட வாக்காளர்களை உள்ளடக்க ஆர்வம் காட்டுவதையும் அறிந்ததாகக் கூறினார்.

‘கிராமி’ தேர்வு

“ஒருவர் கிராமி வாக்காளராகத் தேர்வு செய்யப்பட, குறைந்தது இரு வாக்காளர்களின் பரிந்துரை தேவை. குறைந்தது 15 முதல் 17 இசைப் படைப்புகளைத் தயாரித்திருக்க வேண்டும்,” என்றார் கவிதா.

“நம்மைப் பரிந்துரைக்க உரிய காரணங்களையும் அவ்விரு கலைஞர்கள் அளிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஆறு, ஏழு மாதங்களில் அதற்கான முடிவு வெளிவரும்,” என்றார்.

கடந்த 2024ஆம் ஆண்டு தாம் வாக்காளராகத் தேர்வாகி முதன்முறை வாக்களித்ததையும் குறிப்பிட்டார் அவர்.

‘கிராமி’ வாக்களிப்பு முறை

“ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ‘கிராமி’ விருதுகளுக்கான பரிந்துரைகள் தொடங்கும். வாக்களிப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து இசைக்கோப்புகளைச் சமர்ப்பிக்கலாம். அதற்கு 20 நாள்கள் காலக்கெடு அளிக்கப்படும்,” என்றார் கவிதா.

“அவை, முதற்கட்டமாக, ஒவ்வொரு கோப்பும், அதற்குரிய சரியான பிரிவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்று கவனிக்கப்பட்டு, இறுதிப்பட்டியல் வாக்கெடுப்புகளுக்கு வெளிவரும்.

“அக்டோபர் மாதம் முதற்கட்ட வாக்களிப்பு தொடங்கும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், 70, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வரும். வக்களிப்பு முடிவடைந்த பின், இறுதிப்போட்டிக்குத் தேர்வான பரிந்துரைகளுக்கு மீண்டும் ஒருமுறை வாக்களிப்போம்.

இறுதி நாளில் முக்கியமான, பிரபலமான பத்துப் பிரிவுகளை மட்டுமே பார்க்கிறோம். அதற்கு முன்பாக ஆறு மணிநேரம் ‘கிராமி’ நிகழ்ச்சி நடைபெறும்,” என்றும் விவரித்தார் கவிதா.

ஒரு வாக்காளர் எட்டு பெரும் பிரிவுகளின் கீழ் வாக்களிக்க இயலும் என்றும் அதன்கீழ் சிறு பிரிவுகளில் 16 கோப்புகளுக்கு வாக்களிக்கலாமென்றும் சொன்னார்.

“ஒவ்வொருவரும், அவர்களுக்கு ஆர்வமுள்ள பிரிவில் வாக்களிக்கலாம்,” என்ற அவர், ஒவ்வோர் ஆண்டும், இதற்காக ஐந்தாயிரம் முதல், ஆறாயிரம் பாடல்களைக் கேட்பதாகவும் சொன்னார். “அதில் சமர்ப்பித்த சிலர், சக வாக்காளர்களுக்குத் தங்கள் படைப்பை அனுப்பி, கருத்துக் கேட்பதும் உண்டு,” என்றார்.

உள்ளூர்க் கலைஞருக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் பல மாணவர்களுக்கு இசை பயிற்றுவிக்கும் இவர், “இந்தியப் பாரம்பரிய இசைக்கலைஞர்கள் பலர் திறமையானவர்கள். ஆனால், அவர்களுக்கு அனைத்துலக விருதுகள் குறித்த புரிதல் குறைவாக உள்ளது,” என்றார்.

அவர்களும் தங்கள் படைப்புகளின் மீது நம்பிக்கை வைத்து, அதிக அளவில் சமர்ப்பித்தால், அதற்கெனத் தனி பிரிவு உருவாக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதுகுறித்த புரிதலை விரிவாக்குவதும், இயன்ற அளவு இந்தியப் பாரம்பரிய இசைக்கு மின்னிலக்க உலகில் அங்கீகாரம் கிடைக்க உழைப்பதுமே தமது இலக்கு என்றும் சொன்னார் கவிதா.

குறிப்புச் சொற்கள்