நிதித் திட்டமிடல், சேமிப்பு குறித்து நிதித்துறை வல்லுநர்கள் ஆலோசனை

இந்தியச் சமூகத்தினரின் சேமிப்புப் பழக்கங்கள்

4 mins read
இந்தியச் சமூகத்திற்கு நிதித் திட்டமிடல் குறித்து அறிவூட்டல் தேவை என்று நிதித் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
14f7438e-a1dc-4d79-9571-9dc867a6b426
Picture will be replaced by Anusha later - Pixabay - mejiamelissa

தமது திருமணச் செலவு 50,000 வெள்ளியை எட்டும் என்று கருதுகிறார் சுமித்ரா சுப்பிரமணி, 30.

சுமித்ரா சுப்பிரமணி.
சுமித்ரா சுப்பிரமணி. - படம்: சுமித்ரா சுப்பிரமணி

செலவுகளுக்குக் கைகொடுக்கும் விதமாக சுமித்ரா முன்கூட்டியே நிதி ஆலோசகரின் உதவியுடன் அதற்கான பணத்தைச் சேமித்தும் வருகிறார்.

தாதியாகப் பணியாற்றும் சுமித்ரா ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், சேமிப்பு, காப்புறுதி திட்டம் போன்றவை குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை.

தமக்கு நன்கு அறிமுகமான நண்பர் நிதி ஆலோசகர் என்பதால் அவரிடம் ஆலோசனை பெற்றுத் திருமணத்திற்குக் கண்ணும் கருத்துமாகச் சேமித்து வருகிறார் சுமித்ரா.

சுமித்ராவைப்போல திருமணம், வீடு வாங்குவது, வீட்டுப் புதுப்பிப்புச் செலவுகள் எனப் பல்வேறு வகையான பெருஞ்செலவுகளைப் பலரும் எதிர்கொள்ள நேரிடும்.

அவற்றுக்குச் சரியான நிதித் திட்டமிடல் அவசியம். அந்தச் செலவுகள் போக, சரியான முறையில் சேமித்து வந்தால் ஏதோ ஒரு நெருக்கடிச் சூழல் வரும்போது பணத்திற்காகத் தடுமாற வேண்டாம் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள்.

சேமிக்கும் இளையர்கள்

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நிதி ஆலோசகராக இருக்கும் முஹம்மது யாகோப், 30, இக்காலத்து இளைய தலைமுறையினர் பலர் சேமிப்புப் பழக்கத்தைக் கடைபிடிப்பதாகச் சொன்னார்.

நிதி ஆலோசகர் முஹம்மது யாகோப்.
நிதி ஆலோசகர் முஹம்மது யாகோப். - படம்: முஹம்மது யாகோப்

இருந்தாலும், தங்களின் சக்திக்கு மீறிச் செலவு செய்யும் போக்கையும் அவர்களிடம் பார்ப்பதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பிற்கு ஒதுக்கி வைக்கும் பழக்கத்தைத் தவறாமல் கடைபிடிப்பதைக் கடினம் எனக் கருதுவோர் நிதி ஆலோசகரின் உதவியை நாடலாம் என்றார் யாகோப்.

இயன்றால் 60 வயதுக்குள் பணியிலிருந்து ஓய்வுபெற விரும்பும் சுமித்ரா, அது தொடர்பான சேமிப்புப் பழக்கத்தை ஒட்டி நிதி ஆலோசகருடன் கலந்துரையாட விரும்புவதாகத் தெரிவித்தார்.

ஓய்வுக்காலத் திட்டமிடல் முக்கியம்

கடந்த ஏழு ஆண்டுகளாக மூத்த நிதி ஆலோசகராக இருக்கும் ஆர் பிரீதிவ் ராஜ், 34, தான் சந்திக்கும் வாடிக்கையாளர்கள் பலர் ஓய்வுக்காலத் திட்டமிடலுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்று தெரிவித்தார்.

மூத்த நிதி ஆலோசகர் ஆர் பிரீதிவ் ராஜ்.
மூத்த நிதி ஆலோசகர் ஆர் பிரீதிவ் ராஜ். - படம்: ஆர் பிரீதிவ் ராஜ்

“சேமிக்க விரும்பினாலும் குறுகிய காலச் சேமிப்பு பற்றியே பலரும் யோசிக்கின்றனர். வாழ்நாள் முழுவதற்கும் தேவைப்படும் நிதி பற்றி யாரும் பெரிதாகச் சிந்திப்பதில்லை,” என்று கூறினார் பிரீதிவ்.

அதிக சம்பளம் பெறுபவர்கள் முதலீடு, பங்குச் சந்தை போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருப்பதாகச் சொன்ன பிரீதிவ், இந்தியச் சமூகத்தினருக்கு நிதி அறிவூட்டல் தொடர்பான பயிலரங்குகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

தங்கத்தை சேமிப்பாக நம்பும் தவறான மனப்போக்கு

இந்தியக் கலாசாரத்தில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்தால் அது என்றாவது ஒருநாள் உதவும் என்ற தவறான மனப்போக்கு பலரிடம் இருப்பதாகச் சொன்னார் யாகோப்.

“தங்க விலை இப்போது ஏற்றம் கண்டாலும் அது சரிய நீண்ட நாள் ஆகாது. அமெரிக்க டாலர் மதிப்புக்கும் தங்கத்தின் விலைக்கும் தொடர்பு இருப்பதால் அமெரிக்க டாலர் இறங்கும்போது தங்க விலை திடீரென இறங்கும்,” என்று விளக்கினார் யாகோப்.

எனவே, இந்தியக் கலாசாரத்தில் பின்னிப்பிணைந்துள்ளது என்று நினைத்துக்கொண்டு தங்கத்தில் முதலீடு செய்வதில் முழுக் கவனத்தைச் செலுத்தாமல், வேறென்ன வழிகள் இருக்கின்றன என்பதை நிதி ஆலோசகர் மூலம் தெரிந்துகொள்ள முன்வர வேண்டும் என்றார் அவர்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பிரதீப் சுப்பிரமணியம், 31, திருமணத்திற்கு ஈராண்டுகளுக்கு முன்பு நிதி ஆலோசகரை நாடினார்.

பிரதீப் சுப்பிரமணியம்.
பிரதீப் சுப்பிரமணியம். - படம்: பிரதீப் சுப்பிரமணியம்

ஓய்வுக்காலத்திற்குத் திட்டமிடுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள பிரதீப், தாமாகச் சேமிப்பதற்குத் தன்னொழுங்கு அதிகம் தேவைப்படுவதாகவும் நிதி ஆலோசகரின் உதவி கிடைக்கும்போது அதைத் தவறாமல் கடைப்பிடிக்க முடிவதாகவும் சொன்னார்.

தங்கத்தில் முதலீடு செய்வது குறித்துக் கருத்துரைத்த அவர், தான் அதை விரும்புவதாகக் கூறினார்.

“தங்கத்தில் முதலீடு செய்ததால் எனக்குத் தேவைப்படும் நேரத்தில் அது உதவியது.

“எனவே, தங்கத்தில் முதலீடு செய்வதை நான் எப்போதும் ஒரு தெரிவாக வைத்திருப்பேன்,” என்றார் பிரதீப்.

பெரிய செலவுகள் வரும்வரை காத்திருக்காமல் இளவயதிலிருந்தே சேமிக்கப் பழகிக்கொள்ள வேண்டுமென்று அவர் குறிப்பிட்டார்.

சேமிக்கச் சிரமப்படும் பிரிவினர்

தலைமை நிதி ஆலோசகர் சுமிதா நடராஜபதி, 33, இந்தியக் குடும்பங்கள் பலவற்றைச் சேர்ந்தோர் தங்கள் குடும்பங்களுக்கான நிதி ஆதரவையும் தனிப்பட்ட சேமிப்பையும் சமநிலைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்வதாகக் கூறினார்.

தலைமை நிதி ஆலோசகர் சுமிதா நடராஜபதி.
தலைமை நிதி ஆலோசகர் சுமிதா நடராஜபதி. - படம்: சுமிதா நடராஜபதி

சுமிதாவைப் பொறுத்தவரை இளவயதினர் அதிக ஆர்வமுள்ளவர்களாகவும், நிதி ஆலோசனையைப் பெறுவதற்கு அதிக விருப்பமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

மாறாக, 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தற்போதுள்ள நிதிச் சுமைகள் காரணமாகத் தாங்கள் சிக்கியிருப்பதாகவோ கட்டுப்படுத்தப்பட்டதாகவோ உணர்கின்றனர்.

“அதிகச் சம்பளம் பெறுவோரும் அதிகமாகச் சேமிப்பதற்குப் பதிலாக அன்றாடம் செலவு செய்யத் தூண்டப்படுகின்றனர்,” என்றார் சுமிதா.

நிதி அறிவூட்டலை வலியுறுத்திய சுமிதா, அதிக ஆர்வமும் விழிப்புணர்வும் இருந்தால் இந்தியக் குடும்பங்கள் சிறப்பான வழியில் முடிவெடுக்கலாம் என்றார். நடுத்தர வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த சிலர் தங்களின் சக்திக்கு மீறி, குறிப்பாக, கடன் அட்டைகளை முறையின்றிப் பயன்படுத்திச் செலவு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்