தேசத்தோடு வளர்ச்சிப் பாதையில் இந்திய சமூகம்

2 mins read
சிங்கப்பூரின் இந்திய சமூகம் குறித்து உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம்
0d75c636-3c39-4b2a-849b-42070cc4ae38
சிங்கப்பூரின் இந்திய சமூகம் நாட்டுடன் சேர்ந்து தாமும் வளர்ச்சி பெற்றிருப்பதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். - படம்: த பிசினஸ் டைம்ஸ்

பல்வேறு சவால்களையும் சிரமங்களையும் கடந்து அதன் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் சிங்கப்பூரில் இந்திய சமூகம், நாட்டுடன் சேர்ந்து தாமும் வளர்ச்சி பெற்றிருப்பதாகச் சொன்னார் திரு சண்முகம்.

இந்திய சமூகத்தின் மேம்பாடு குறித்தும் அதன் அடுத்த இலக்கு குறித்தும் தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தார் அமைச்சர் சண்முகம்.

“30 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய சமூகத்தின் நிலையை ஒப்புநோக்க தற்போது சமூகம் அடைந்துள்ள முன்னேற்றம் ஓரளவு நன்றாகவே உள்ளது,” என்றார்.

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிவரங்கள், இந்தியர் உள்ளிட்ட இதர இனத்தவர் எத்தனை அறை வீடுகளில் வசிக்கின்றனர், எவ்வகை வீடுகளில் உள்ளனர், அவர்களின் கல்விநிலை யாது, பட்டதாரிகள் எத்தனை பேர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விவரிக்கும்.

இதன் அடிப்படையில் சிங்கப்பூரின் இந்தியச் சமூகம் முன்னேற்றம் கண்டுள்ளதாக திரு சண்முகம் குறிப்பிட்டார்.

அதே சமயம் எல்லாரும் அந்நிலையை அடையவில்லை என்றும் உதவி தேவைப்படுவோர் இருக்கவே செய்கின்றனர் என்றும் அமைச்சர் பதிவுசெய்தார். 

இந்திய சமூகம் அடைந்துள்ள முன்னேற்றத்திற்குப் பல காரணங்கள் துணைபுரிந்துள்ளதாக அமைச்சர் சண்முகம் கூறினார்.

“நாடு முன்னேறியது. அரசாங்கத் திட்டங்கள் எல்லாருக்கும் உதவியாக இருந்தன. சுய உதவிக் குழுவான சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) மற்றும் மேலும் பல இந்திய நிறுவனங்கள் உதவி செய்துள்ளன. இதனால், கல்வித்தகுதி, வேலை, போட்டித்தன்மை ஆகியவற்றோடு திகழ்வது முக்கியம் என்ற மனப்பாங்கு வந்துள்ளது,” என்றார் அமைச்சர்.

“மேலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க, கற்றல் சார்ந்த வாய்ப்புகளை அமைத்துத் தருவதில் ஆர்வம் காட்டுவதால் ஒருவருக்கொருவர் ஊக்கம் நல்கி நம் இந்திய சமூகம் இந்த வளர்ச்சி நிலையை எட்டியுள்ளது,” என்ற கருத்தை முன்வைத்தார் திரு சண்முகம்.

சிறப்புற செயல்படும் சுய உதவிக் குழுக்கள் 

சிண்டா போன்ற சுய உதவிக் குழுக்கள் தங்களின் திட்டங்களை மேம்படுத்தவும் சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும் ஏதுவாக அடுத்த ஐந்தாண்டுகளில் கூடுதலாக $60 மில்லியன் நிதி வழங்கப்படவிருக்கிறது. இது குறித்தும் பேசினார் அமைச்சர் சண்முகம்.

சிங்கப்பூரில் சிண்டா, மெண்டாக்கி, சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், யூரேஷியர் சங்கம் உள்ளிட்ட சுய உதவிக்குழுக்கள் சிறப்பாகச் செயலாற்றி வந்துள்ளன என்றார் அவர்.

“பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்விக்கூடங்களை அரசாங்கம் கட்டியெழுப்பும். ஆனால், சமுதாயத்திற்கான ஆதரவைப் பலவகையிலும் இத்தகைய சுய உதவிக்குழுக்களால் வழங்கிட இயலும்,” என்றார் அமைச்சர்.

நல்ல நிலையில் உள்ளோர், தேவையில் உள்ளோருக்கு உதவிக்கரம் நீட்டுவதை உறுதிசெய்யும் நோக்குடன் இயங்கி வரும் இத்தகைய சுய உதவிக்குழுக்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் நிதியாதரவு நல்குவதாக அறிவித்தது.

சிண்டா போன்ற சுய உதவிக் குழுக்கள் தங்களது திட்டங்களை மேம்படுத்தவும் சமூகங்களுக்குக் கூடுதல் ஆதரவளிக்கவும் ஏதுவாக அடுத்த ஐந்தாண்டுகளில் கூடுதலாக $60 மில்லியன் நிதி வழங்கப்பட இருக்கிறது.

அவ்வகையில் இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் எனத் தாம் நம்புவதாகக் கூறி நேர்காணலை நிறைவு செய்தார் திரு சண்முகம்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க, கற்றல் சார்ந்த வாய்ப்புகளை அமைத்துத் தருவதில் ஆர்வம் காட்டுவதால் ஒருவருக்கொருவர் ஊக்கம் நல்கி நம் இந்திய சமூகம் இந்த வளர்ச்சி நிலையை எட்டியுள்ளது.
உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம்
குறிப்புச் சொற்கள்