இந்திய மரபுடைமை நிலையத்தின் பத்தாவது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டங்கள்

2 mins read
1813b088-7423-4ce2-afb5-5421b51ed981
இந்திய மரபுடைமை நிலையத்தின் பத்தாமாண்டுநிறைவுக் கொண்டாட்டங்கள் சிறப்பாகத் தொடங்கியுள்ளன. - படம்: யோகிதா அன்புச்செழியன்
multi-img1 of 2

புதுப்பிக்கப்பட்ட காட்சிக்கூடங்கள், அவற்றைச் சார்ந்த மரபுடைமை நிகழ்ச்சிகள், கலாசார நடவடிக்கைகள் முதலியவற்றுடன் இந்திய மரபுடைமை நிலையம் அதனுடைய பத்தாவது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டங்களைச் சனிக்கிழமை (மே 10) சிறப்பாகத் தொடங்கியது.

காட்சிக்கூடங்களில் ஏறத்தாழ 30 புதிய கலைப்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய வரலாற்றையும் கலாசாரத்தையும் எடுத்துரைக்கும் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைவதோடு புதுப்பொலிவு பெற்றுள்ள நிலையத்தின் பல்வேறு அம்சங்களைப் புதிய கண்ணோட்டத்துடன் மீண்டும் காண, சிங்கப்பூரர்கள் அனைவரையும் இந்தக் கொண்டாட்டங்கள் வரவேற்கின்றன.

கடந்த 2015ல் திறக்கப்பட்ட நிலையத்தின் நிரந்தரக் காட்சிக்கூடங்களில் உள்ள கலைப்பொருள்கள் முதன்முறையாகப் பேரளவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

புதிய காட்சிக்கூடங்களில் ஏறத்தாழ 30 புதிய கலைப்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய காட்சிக்கூடங்களில் ஏறத்தாழ 30 புதிய கலைப்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. - படம்: யோகிதா அன்புச்செழியன்

சிங்கப்பூரில் உள்ள இந்திய, தெற்காசியச் சமூகங்களின் பங்களிப்புகள் குறித்த அரிய தகவல்களை வழங்கும் சிற்பங்கள், வர்த்தகப் பொருள்கள், சமூகத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்ட நினைவுப் பொருள்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்ட கலைப்பொருள்களில் அடங்கும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘சோப்பாக்‌ஸ்’ காட்சிக்கூடச் சுற்றுலாவில் (Soapbox Gallery Tour), தன்னார்வக் கதைசொல்லிகள் இக்கலைப்பொருள்கள் தொடர்பான இந்திய மரபுடைமைகளைச் சுவையான கதைகளின்வழி உயிர்ப்பித்து பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டனர். 

தன்னார்வக் கதைசொல்லிகள் பொதுமக்களிடம் புதிய கலைப்பொருள்களைப் பற்றி விளக்குகிறார்கள்.
தன்னார்வக் கதைசொல்லிகள் பொதுமக்களிடம் புதிய கலைப்பொருள்களைப் பற்றி விளக்குகிறார்கள். - படம்: யோகிதா அன்புச்செழியன்

கொண்டாட்டங்களின் முதல் நாளன்று பல இனக் குழந்தைகள், இளையர்கள், குடும்பங்கள் உள்படப் பலரும் நிலையத்தில் ஒன்றுகூடினர். அனைவரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

“உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது முதன்முறையாக இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வந்திருந்தேன். அப்போது இந்தியச் சமூகத்திற்காகவே தனிப்பட்ட காட்சிக்கூடம் அமைக்கப்பட்டிருந்தது என்னைப் பெருமையடைய வைத்தது. இன்று, பத்து ஆண்டுகள் கழித்தும், புதிய காட்சிக்கூடங்கள் மூலம் என் இந்திய வேர்களை மேலும் ஆழமாக என்னால் உணர முடிகிறது.

“பல இனத் தோழர்களையும் இங்கு அழைத்துவந்து, எனது கலாசாரத்தை அவர்களுடன் பகிர்வது எனக்கு வழக்கம். சிங்கப்பூரில் இந்தியச் சமூகத்தின் வளர்ச்சியையும் பங்களிப்பையும் பார்வையிடவும் நமது கலாசாரத்தைப் பிற சமூகத்தினரிடம் பகிரவும் இந்த இடம் தொடர்ந்து ஒரு சிறந்த தளமாக இருந்து வருகிறது,” என்றார் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் கோபிகா நாரயணன், 23.

“ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும், புதிய தலைமுறைகள் இவ்விடத்தைப் பார்வையிடுவதைக் காண்கிறேன். இன்று, இக்கொண்டாட்டங்களில் இளம் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களும் இளையர்களும் பெருந்திரளாகத் திரண்டிருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்திலும் அவர்கள் இந்திய மரபையும் பண்பாட்டையும் பாதுகாத்து வளர்ப்பார்கள் என்றும் இந்திய மரபுடைமை நிலையம் அதற்குத் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் நம்புகிறேன்,” என்றார் நிதித்துறையில் பணியாற்றும் 44 வயது சாரமதி குமரேசன்.

இக்கொண்டாட்டங்கள், ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடரும். பெரனாக்கான் இந்தியத் திருமண அனுபவம், பாரம்பரிய இந்திய உணவைச் சுவைத்துப் பார்த்தல், கைவினைப் பொருள் செய்யும் நடவடிக்கைகள், சமூக நிகழ்ச்சிகள் முதலியவற்றில் பொதுமக்கள் இலவசமாகக் கலந்துகொள்ளலாம்.

தனிப்பட்ட துணிப் பைகள், காந்தங்கள் போன்ற பொருள்களை நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் இலவசமாகப் பெறலாம்.

இந்த இரு-நாள் நடவடிக்கைகள் ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள இந்திய மரபுடைமை நிலையத்தின் 10ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டங்களின் தொடக்கமாகும்.

மேல் விவரங்களுக்கு https://www.indianheritage.gov.sg/en/whats-on/programmes/ihc10-and-shf-open-house என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்