செய்தி: வி.கே.சந்தோஷ் குமார், தமிழாக்கம்: வினோத் கருப்பையா
இந்திய தேசிய மாணவர் படையின் (என்சிசி) மாணவர்கள், சிங்கப்பூரில் ஒரு வாரம் நடைபெற்ற இளையர் பரிமாற்றத் திட்டத்தில் கலந்துகொண்டனர்.
அப்போது, அந்த மாணவர்கள் சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரச் சமூகம், தேசிய வளர்ச்சி, இந்தியாவுடனான தூதரக உறவுகள் ஆகியவற்றை நேரில் அனுபவித்து அறிந்தனர்.
இளையரிடையே அனைத்துலகப் புரிந்துணர்வு, கலாசாரப் பரிமாற்றம், நட்பு, தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான இளையர் பரிமாற்றத் திட்டம் உருவாக்கப்பட்டது.
அத்திட்டத்தின்கீழ், இரண்டு அதிகாரிகள், பத்து மாணவர்கள் அடங்கிய குழு ஆகஸ்ட் 30ஆம் தேதிமுதல் செப்டம்பர் 5ஆம் தேதிவரை சிங்கப்பூருக்கு வருகை தந்தது.
இந்தியா, சிங்கப்பூர், புரூணை, ஹாங்காங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை அத்திட்டம் ஒன்றிணைத்தது.
மாணவர்கள் மற்ற நாட்டுப் பங்கேற்பாளர்களுடன் உரையாடவும், வெவ்வேறு கலாசாரங்கள், வாழ்க்கைமுறைகள், சமூக விழுமியங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ளவும் அது வாய்ப்பளித்தது.
சிங்கப்பூர் டிஸ்கவரி சென்டரில், மாணவர்கள் சிங்கப்பூரின் வரலாறு, தேசிய அடையாளம், வளர்ச்சி, எதிர்கால இலக்குகள் பற்றி அறிந்துகொண்டனர்.
ராஃபிள்ஸ் பிளேஸ், மரினா பே ஆகிய இடங்களுக்குச் சென்றதன்மூலம் சிங்கப்பூர் ஒரு நவீன நகர நாடாக மாறியிருப்பதை அவர்கள் இன்னும் நெருக்கமாகப் பார்க்க முடிந்தது.
கம்போங் கிளாம், பூகிஸ் ஸ்ட்ரீட் , சைனாடவுன், லிட்டில் இந்தியா, ஆர்ச்சர்ட் ரோடு ஆகிய பகுதிகளையும் மாணவர்கள் பார்வையிட்டனர்.
அதன்மூலம் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சமூகங்கள் இந்த நகரத்தில் எவ்வாறு ஒன்றாக வாழ்கின்றன என்பதையும் அவர்கள் நேரடியாக உணர்ந்தனர்.
சாகச நடவடிக்கைகள் இந்தத் திட்டத்திற்கு ஒரு வித்தியாசமான பரிமாணத்தைச் சேர்த்தன.
கடல்நாகப் படகுப் பயிற்சியானது மாணவர்களின் குழுப்பணி, ஒருங்கிணைப்பு, ஒழுக்கத்தைச் சோதித்தது. அதே நேரத்தில், ‘லேசர் டேக்’ (Laser Tag) விளையாட்டானது பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, வியூகம் அமைத்து, கூட்டாக இணைந்து விரைவான முடிவுகளை எடுக்க உதவியது.
மாணவர்கள் சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும் சென்றனர். அங்குத் தற்காலிகத் தூதருடனும் தூதரக அதிகாரிகளுடனும் அவர்கள் உரையாடினர்.
இந்தியத் தூதரகத்தின் செயல்பாடு, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான தூதரகப் பொறுப்புகள், இந்தியா-சிங்கப்பூர் இடையிலான நெருக்கமான, பன்முக உறவு ஆகியவை குறித்து மாணவர்கள் அறிந்துகொண்டனர்.
மேலும், வெளிநாடுகளில் இந்தியா எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் நேரடியாக அவர்களால் அறிந்துகொள்ள முடிந்தது.
ஒழுக்கம், குடிமைப் பொறுப்பு, பன்முகக் கலாசார நல்லிணக்கம் ஆகியவற்றிற்குச் சிங்கப்பூர் அளிக்கும் முக்கியத்துவத்தை மாணவர்கள் கவனித்தனர்.
அதே வேளையில், புவியியல் ரீதியாக ஒரு சிறிய நாடு எவ்வாறு வெற்றிகரமான நாடாக உருவெடுத்தது என்பதையும் அவர்கள் உணர்ந்து பாராட்டினர்.
