சாங்கி சிறைச்சாலைக்குள் முதன்முறையாக நிகழ்நேர்காட்சித் (Reality Show) தொடர் வடிவில் நடைபெற்ற சமையல் போட்டி, சிறைவாசிகளின் மனமாற்றத்தையும் குடும்பப் பாசத்தையும் வெளிப்படுத்தும் களமாக அமைந்தது.
அப்போட்டியின் இறுதிச்சுற்று கடந்த சனிக்கிழமையன்று (நவம்பர் 7) யூடியூப்வழி ஒளிபரப்பப்பட்டது.
மஞ்சள் நாடா திட்டமும் சிங்கப்பூர்ச் சமையற்கலைஞர் சங்கமும் இணைந்து நடத்திய ‘மஞ்சள் நாடா சமையல்திறன் காட்சி 2026’ போட்டியின் தொடக்கச் சுற்றில் கலந்துகொண்ட 24 பேரிலிருந்து நால்வர் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகினர்.
‘வாழ்வின் சுவைகள்’ (Flavours of Life) என்ற கருப்பொருளில் இப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் சமைத்த உணவுகள், சமையற்கலைமூலம் தங்களது வாழ்க்கை அனுபவங்களையும், எதிர்காலக் கனவுகளையும், மறுவாழ்வு குறித்த நம்பிக்கைகளையும் அவர்கள் வெளிப்படுத்துவதாக இருந்தன.
குடும்பப் பிணைப்பை உணர்த்திய சமையல்
இறுதிச்சுற்றில் கடலுணவு வறுத்த சோறு (seafood fried rice) சமைத்த 38 வயது தி சான் முதலிடம் பிடித்தார். ஈராண்டுகாலச் சிறைவாசத்தின்போது சமையல், தையல் கலைகளைக் கற்றுக்கொண்ட அவர், தம் வெற்றியைக் குடும்பத்தினர்க்கு அர்ப்பணித்தார்.
தமது உணவு பற்றிக் குறிப்பிட்ட அவர், “வறுத்த சோற்றில் சேர்க்கப்படும் பல்வேறு உணவுப் பொருள்கள் ஒன்றுசேர்ந்து ஒரு குடும்பம்போல அமைகின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருந்தாலும், ஒன்றுகலந்து பிணைந்திருக்கின்றன,” என்றார்.
இறுதிப் போட்டியின்போது தி சானை ஆதரிக்க அவரின் கணவரும் வந்திருந்தார். தனது உணவை அவர் மிகவும் விரும்பியதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட தி சான், பல ஆண்டுகளாகத் தனக்கு ஆதரவாகவும் புரிந்துணர்வுடனும் இருந்த கணவர்க்கு இந்த உணவை நன்றியாகச் சமர்ப்பிக்க விரும்புவதாகக் கூறினார்.
ஈராண்டுகளாகச் சிறையில் இருப்பதால் பிள்ளைகளுக்குச் சமைத்துக் கொடுக்க முடியாத நிலையில் இருந்த அவர், விடுதலையானபின் தனக்கு வெற்றி தேடித் தந்த உணவை அவர்களுக்குச் சமைத்துக் கொடுக்க ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, ‘மிகவும் ஊக்கமளிக்கும் உணவு’ என்ற விருது 37 வயது அலியாவுக்குக் கிடைத்தது. தாயுடன் சேர்ந்து உண்ட கடைசி இரவு உணவை நினைவுகூரும் வகையில் அவர் ‘ஸ்பகெட்டி அக்லியோ இ ஓலியோ’ (Spaghetti Aglio e Olio) சமைத்தார்.
சிறை செல்வதற்குமுன் அந்த உணவை உண்டபோது தாயுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், உணவை முடித்துவிட்டு கோபத்துடன் வீட்டைவிட்டுச் சென்றதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்துக்கான காரணம்கூட இப்போது நினைவில் இல்லை என்றும் வீட்டைவிட்டுச் சென்ற பிறகு தான் கைதுசெய்யப்பட்டேன் என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.
சிறையில் இருந்தபோது, கோபத்தில் வீட்டைவிட்டுச் செல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று பலமுறை சிந்தித்ததாகக் கூறிய அலியா, தனது வாழ்க்கையில் தாயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றார். தற்போது அலியாவின் ஆறு பிள்ளைகளும் அவரது தாயின் பராமரிப்பில் உள்ளனர்.
தம் தாயார் குடும்பத்தினர்க்குச் சமைத்துக் கொடுத்த உணவையே தானும் சமைக்க விரும்பியதாகக் குறிப்பிட்ட அவர், தாயின் சமையலைப்போலச் சுவையாக இல்லாவிட்டாலும், அதன்வழி அவர் காட்டிய அன்பை வெளிப்படுத்த விரும்பியதாகக் கூறினார்.
இரண்டாவது வாய்ப்பு வாழ்வை மாற்றும்
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் உள்துறை, சட்டத்திற்கான அரசாங்க நாடாளுமன்றக் குழு உறுப்பினருமான கேப்ரியல் லாம் கலந்துகொண்டார்.
பல்வேறு சவால்களுக்கு இடையிலும் தொடர்ந்து முயன்று இறுதிச்சுற்றுவரை முன்னேறிய போட்டியாளர்களின் ஒழுக்கத்தையும் உழைப்பையும் அவர் பாராட்டினார்.
“வாழ்க்கையை மீண்டும் புதிதாகக் கட்டமைக்க முயலும் ஒருவருக்கு மற்றொருவரின் நம்பிக்கை உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்றார் அவர்.
கடந்தகாலத் தவறுகளுக்குப் பொறுப்பேற்று, நேர்மையான வழியில் புதிய எதிர்காலத்தை உருவாக்க முயல்வோர்க்கு நியாயமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இத்தகைய முயற்சிகளுக்குத் துணைநின்று, முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலைவாய்ப்புகளையும் வழிகாட்டுதலையும் வழங்குமாறு தொழில் நிறுவனங்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
திரைக்குப் பின்னால் பணியாற்றிய சிறைத்துறை அதிகாரிகள்
போட்டியின் பாதுகாப்பு, நிர்வாகப் பணிகளைக் கவனித்ததோடு, போட்டியாளர்களின் குடும்பத்தினரை வரவேற்று அவர்களுக்கு ஆதரவளிக்கும் பணியிலும் ஈடுபட்டார் 27 வயது சிறைத்துறை அதிகாரி திவ்யதர்ஷினி கலைச்செல்வன். ஆறு ஆண்டுகளாகச் சிங்கப்பூர்ச் சிறைத்துறையில் பணியாற்றிவரும் இவர், சிறைத்துறையின் நிதியுதவியுடன் பகுதிநேரப் பட்டப்படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.
போட்டி முடிந்ததும் போட்டியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேரடியாக அமர்ந்து மனம்விட்டுப் பேசுவதற்குச் சந்திப்பு நேரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“சிறைச்சாலை விதிமுறைகளுக்கு உட்பட்டுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேவேளையில், குடும்பத்தினர் தங்களது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தத் தேவையான தனிப்பட்ட நேரத்தை அமைத்துத் தருவதே எங்களது முக்கிய நோக்கம்,” என்றார் அவர்.
சிறைவாசம் என்பது தண்டனைக்கான இடமாக மட்டுமன்றி, சீர்திருத்தத்திற்கான களமாகவும் விளங்குவதாக திவ்யதர்ஷினி குறிப்பிட்டார்.
சிறைவாசிகளின் நேரத்தை ஆக்கபூர்வமாக வழிநடத்த இத்தகைய போட்டிகள் உதவுவதாகக் கூறிய அவர், “கைதிகள் தங்களது திறமைகளை உணர்ந்து, விடுதலைக்குப் பிறகு மீண்டும் சமூகத்துடன் வெற்றிகரமாக இணைவதற்கான பாதையை அமைத்துக்கொடுப்பதே சிறைத்துறை அதிகாரிகளின் தலையாய கடமை,” என்றார்.
