பாரம்பரியம் சார்ந்த புதுவித இணைய ஊடுருவல் போட்டி

பாரம்பரியம் சார்ந்த புதுவித இணைய ஊடுருவல் போட்டி

3 mins read
62a62cb9-827e-4ee4-a2fc-3d402d2c0335
போட்டியில் (இடமிருந்து இரண்டாமவர்) எலேனா டியோன் டேவிட், செஃப்ரின் அலெக்ஸ், சிவாஞ்சலி அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். - படம்: கன்ட்ரோல்+ஹெரிட்டேஜ்
multi-img1 of 3

சிங்கப்பூரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியோடு அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் வகையில் ‘கன்ட்ரோல்+ஹெரிடேஜ்’ என்ற இளையர்களுக்கான கருத்தரங்கமும் ஹேக்கத்தான் எனப்படும் இணைய ஊடுருவல் போட்டியும் வெற்றிகரமாக நடைபெற்றன.

‘பிரிட்ஜிங் ஜெனரே‌ஷன்ஸ்’ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, ஜூன் 13, 14ஆம் தேதிகளில் ‘கிளாஸ் டோம் அட் சைனா ஸ்த்ரீட்’டில் நடைபெற்றது

18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள் நிகழ்ச்சியில் பங்கெடுத்துப் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்வி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ், இளையர்களின் ஈடுபாட்டைப் பெரிதும் பாராட்டினார்.

“பாரம்பரியம் என்பது வெறும் தரவுகள் அன்று. அது மக்களிடையே தலைமுறை தலைமுறையாகப் பகிரப்படும் அனுபவங்கள், உணர்வுகள், அன்பு ஆகியவை சம்பந்தப்பட்டது,” என்று திருவாட்டி லாவ் கூறினார்.

தொழில்நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் எப்படி இணைப்பது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இந்த ஊடுருவல் போட்டியில் கலந்துகொண்டதாக 19 வயது சிவாஞ்சலி அறிவழகன் தெரிவித்தார்.

சீன வட்டார வழக்குகள் குறித்த கண்காட்சி தமக்குப் புதிய கண்ணோட்டத்தைத் தந்ததாக அவர் கூறினார்.

தற்போது, இளையர்கள் பலருக்குத் தங்களின் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை எனத் தாம் கருதுவதாகவும் அவர் சொன்னார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

செயற்கை நுண்ணறிவை மூத்த தலைமுறையினரிடம் கொண்டுசெல்வதைப் பற்றியும் சிவாஞ்சலி பேசினார்.

“நமது தாத்தா பாட்டிகள் எழுதுவதற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தயங்கலாம்; ஆனால், பேசுவதற்கு ‘ஏஐ’ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது, அவர்கள் தட்டச்சு செய்யாமல் நேரடியாகப் பேசித் தங்கள் கதைகளைப் பதிவுசெய்ய முடியும்,” என்று ஆக்கபூர்வமான யோசனையை அவர் முன்வைத்தார்.

அதேபோல, சிறுபான்மையினரின் பாரம்பரிய வணிகங்களைப் போற்றிப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டத்தை முன்வைத்தார் 23 வயது மதுலிஷா.

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அவரது குழுவினர், சிங்கப்பூரின் பாரம்பரிய ‘கச்சாங் பூத்தே’ போன்ற உணவுப்பொருள்களை விற்போரை மையமாக வைத்துச் செயல் திட்டமொன்றை உருவாக்கினர்.

“சிங்கப்பூரில் உள்ள சிறுபான்மையினரின் வணிகங்களுக்குக் குரல் கொடுப்பதுடன், அவர்களின் கதைகளை மக்களிடம் கொண்டுசேர்த்து அவர்களின் அன்றாடச் சிரமங்களைக் குறைப்பதே எங்களின் முக்கிய நோக்கம்,” என்று மதுலிஷா தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டம்பெற்றுள்ள 22 வயது சேஃப்ரின் அலெக்ஸ், இந்த நிகழ்வில் தொழில்நுட்பத்தின் பங்கை வியந்து பாராட்டினார்.

“நவீன ‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் மூலம் மூத்த தலைமுறையினரின் அனுபவங்களை ஆவணப்படுத்தி, அதை இணையத்தில் பதிவேற்றுவது வருங்காலச் சந்ததியினருக்குத் தங்களின் வேர்களைப் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்று அவர் தமது கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இளையர்களின் இந்த ஈடுபாட்டைக் கண்டு பெருமிதம் அடைவதாக ‘பிரிட்ஜிங் ஜெனரே‌ஷன்ஸ்’ அமைப்பின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான திருவாட்டி லின் வோங், 37, குறிப்பிட்டார்.

“இன்றைய இளையர்களுக்குத் தொழில்நுட்பம் அத்துப்படி; ஆனால் முதியவர்களுக்கு அது சற்றுச் சிரமம். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரண்டு தலைமுறையினரையும் ஒன்றாக இணைப்பதே எங்களின் முக்கிய இலக்கு,” என்று அவர் சொன்னார்.

தேசிய மரபுடைமைக் கழகத்துடன் ஈராண்டுகள் நீடிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதால், இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் திருவாட்டி லின் வோங் தெரிவித்தார்.

இணைய ஊடுருவல் போட்டியில் வெற்றிபெறும் சிறந்த 5 குழுக்களுக்குத் தங்களின் திட்டங்களைச் செயல்படுத்த ஒவ்வொன்றுக்கும் $5,000 தொடக்க நிதி வழங்கப்படும் என்று ‘பிரிட்ஜிங் ஜெனரே‌ஷன்ஸ்’ அமைப்பு தெரிவித்தது.

அச்சு நூல்களைக் கடந்து இளையர்களின் கைகளில் இப்போதுள்ள புதிய மின்னிலக்கக் கருவிகளிலும் மரபு பற்றிய தகவல்கள் இடம்பெறுவதற்கு இத்திட்டம் வழிவகுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்