சிறார் கைப்பேசியைப் பயன்படுத்துவதும் திரைக்குமுன் செலவிடும் நேரமும் அதிகரித்து வருவதால் உலகின் பல நாடுகளும் அவற்றுக்குக் கடிவாளம் போட முயன்று வருகின்றன.
இணையத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளாலும் அவர்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயமுள்ளது.
இதனால், 16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளும் தடை விதித்துள்ளன. மேலும் பல நாடுகள் அத்தகைய தடையை நடைமுறைப்படுத்துவது குறித்துச் சிந்தித்து வருகின்றன.
சிறாரும் பதின்ம வயதினரும் தங்கள் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனச் சமூக ஊடகங்களுக்கும் அரசாங்கங்கள் அறிவுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இன்ஸ்டகிராம் சமூக ஊடகத் தளத்தில் பதின்ம வயதினர் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வது அல்லது உயிரை மாய்த்துக்கொள்வது குறித்துத் தேடினால், அதுகுறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை அனுப்பும் புதிய வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
சிங்கப்பூர் மாணவர்களிடையே கல்வி, சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், பிள்ளைகளுக்கு உதவி தேவைப்படுவதைப் பெற்றோர்க்குத் தெரியப்படுத்துவதும் சவால்களை கையாளத் தேவையான வழிகாடுதல்களை வழங்குவதும் இதன் நோக்கம்.
இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள, பெற்றோர் இன்ஸ்டகிராமின் குடும்ப மையப் பிரிவில் உள்ள கண்காணிப்பு அமைப்பின் வழியாகத் தங்களது கணக்கை தங்கள் பிள்ளைகளின் இன்ஸ்டகிராம் கணக்குடன் இணைக்க வேண்டும்.
ஆபத்தை உணர உதவும்
பதின்ம வயதினரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நடவடிக்கை சிங்கப்பூர் பெற்றோர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. செந்தில்குமார் வரதராஜன் - சுபாஷினி செந்தில்குமார் இணையர்க்கு சுஷ்மிதா, சுபாஷ் என இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் 15 வயதான சுபாஷ் செந்தில்குமார் உயர்நிலை மூன்றாம் வகுப்பில் படிக்கும் மாணவன்.
“பிள்ளைகளின் மனநலம் குறித்துப் பெற்றோர் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை அனுப்பும் புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலும் பிள்ளைகள் சோகமான மனநிலையில் இருக்கும்போது உதவி வேண்டி பெற்றோரை அணுகுவது இல்லை. இந்நிலையில், இன்ஸ்டகிராம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதியின்மூலம் ஆபத்தை உணர்ந்து பெற்றோர் தம் பிள்ளைகளுக்குச் சரியான வழிகளில் உதவ இயலும்,” என்று கூறினார் திரு செந்தில்குமார்.
“இது ஒரு மிகச் சிறந்த நடைமுறை எனக் கருதுகிறேன். ஏனெனில், இக்காலத்தில் பிள்ளைகள் சமூக ஊடங்களில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பது பெற்றோர்க்குக் கடினமாக உள்ளது,” என்றார் திருவாட்டி சுபாஷினி.
“அதே நேரத்தில், செயலி எச்சரிக்கைகள் மட்டும் முழுமையான தீர்வாகிவிட முடியாது. வயதுக் கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்தி, ஒரு குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த பிள்ளைகளுக்கு அனுமதி அளிக்காமல் இருப்பதே சிறந்தது,” என்றும் அவர் சொன்னார்.
குடும்பத்தினருடன் நல்ல பிணைப்பு அவசியம்
இன்ஸ்டகிராமின் புதிய எச்சரிக்கை வசதியை வரவேற்கிறார் திருவாட்டி ரசூல் பீவி. ஜுரோங் வெஸ்ட் வட்டரத்தில் வசிக்கும் இவருக்கு முகமது இஸாத், 15, முகமது இஸான், 11, நூர் இமான், 10, என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
சமூக ஊடகப் பயன்பாட்டைக் கண்காணிப்பதன் முக்கியத்துவத்தையும் பிள்ளைகள் பெற்றோருடன் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளும்படியான நல்ல பிணைப்பின் அவசியத்தையும் திருவாட்டி ரசூல் பீவி வலியுறுத்தினார்.
“இன்ஸ்டகிராம் எச்சரிக்கை பெற்றோர்க்கு நன்மை அளிக்கும் பாதுகாப்புக் கருவி மட்டுமே. அவ்வப்போது பிள்ளைகளிடம் அன்புடன் உரையாடி, அவர்களின் கல்வி, சமூகம் சார்ந்த சவால்களைப் புரிந்துகொள்வதே உண்மையான பாதுகாப்பாகும்,” என்றார் அவர்.
மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் அல்லது செயலியின் நேரடி அறிவிப்பு மூலம் பெற்றோர்க்கு அந்த எச்சரிக்கை அனுப்பப்படும். இதன்மூலம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மனநலத்தை உடனுக்குடன் கண்காணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


