இசை, உணவு, பொழுதுபோக்கு எனக் கலை, அழகியல், விருந்தோம்பல் நிறைந்த துறைகளில் பெண்கள் இயங்கும்போது அதில் சில நுணுக்கங்கள் கவனிக்கப்பட்டு அந்த அனுபவங்கள் மேம்படுவதாக நம்புகிறார் பரிமளா ஸ்வார்ட்சன்பர்க்.
‘சுவாரே’ எனும் நிறுவனத்தை நடத்திவரும் இவர், இணக்கமான சூழலில், குறைந்த பார்வையாளர்களைக் கொண்ட மாறுபட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இவ்வாண்டின் முதல் நிகழ்ச்சியாக, பாடகி சின்மயி பங்கேற்கும் ‘முத்தமழை’ இசை நிகழ்ச்சிக்கு அவரது நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியையொட்டி, நிறுவனத்தின் சிந்தனை, ஏற்பாடுகள், இசை, பொழுதுபோக்குத் துறை குறித்த பார்வை, எனப் பலவற்றையும் ஏற்பாட்டுக் குழுவினர் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
“சிங்கப்பூரில் அடுத்தடுத்து இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இது ஒருவகையில் சோர்வு அளிப்பதாகத் தோன்றினாலும், அதில் புத்தாக்கங்களை உருவாக்கவும் வாய்ப்பளிக்கிறது,” என்றார் பரிமளா.
ஓர் இசை நிகழ்ச்சியை, கலைஞருடன் நெருக்கமாக உணரும் வாய்ப்பு அளிக்கும் விதமாக, ஒருங்கிணைந்த ஓர் அனுபவமாக இதனை வடிவமைத்துள்ளதாகச் சொன்னார் அவர்.
குறிப்பாக, “அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் உள்ளூர்க் கலைஞர்களின் பாடல்கள் தொடக்க நிகழ்ச்சியாகவே அமைகிறது. அதற்கும் பின்வரும் முக்கிய நிகழ்ச்சிக்கும் தொடர்பில்லாத தோற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனை மாற்றி உள்ளூர்த் திறனாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறோம்,” என்று பரிமளா கூறினார்.
இதனைக் கருத்தில் கொண்டு, வரும் இசை நிகழ்ச்சியில் சின்மயியுடன் இணைந்து உள்ளூர்க் கலைஞர்களும் பாட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில் அவருடன் பாடவுள்ள கலைஞர்களில் இசைக்கலைஞர் சங்கீதாவும் ஒருவர்.
அவர், “உள்ளூர் இசைக்கலைஞர்களில் பலர் திறமையானவர்கள். அவர்கள் உலக மேடைகளில் சாதிக்கும்போது அவர்களுக்கான அங்கீகாரம் கூடுகிறது,” என்று கருத்துரைத்தார்.
“உலக அளவில் பிரபலமாகவுள்ள கலைஞர்களுடன் இணைந்து பாட உள்ளூர்க் கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மேலும் சிறப்பானது. அதற்காகத் தயார்படுத்துவது மாறுபட்ட அனுபவமாக அமைவதுடன், அவர்களுக்கான பார்வையாளர்களை அதிகரிக்கவும் இது உதவுகிறது,” என்றார் சங்கீதா.
‘சிங்கப்பூர் சேப்டர்’ எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சியில், முத்தாய்ப்பாக அமையவுள்ள முத்த மழை பாடலுக்கு ‘கதக்’ நடனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னார் பரிமளா. இதுவும் முதன்முறையாக நடைபெறுவதை அவர் சுட்டினார்.
மேலும், திருமண நிகழ்ச்சிகளில் நேரடியாக வரையும் கலைஞர் கஸ்தூரி நாயர், நிகழ்ச்சியில் சின்மயி பாடும்போது அவரை வரையவுள்ளதாகவும் சொன்னார் பரிமளா.
“இது, மாறுபட்ட அம்சமாக அமைவதுடன், மற்றொரு பெண்ணின் திறமைக்கும் மேடையாக அமைவதில் மிக்க மகிழ்ச்சி,” என்ற அவர், இவை அனைத்தும் சிங்கப்பூர் நிகழ்ச்சியைத் தனித்துவமாக்குகிறது என்றும் சொன்னார்.
பெண்கள் வழிநடத்தும் நிறுவனம் என்பதால், இது சிறிய அளவிலான நிகழ்ச்சியாக இருந்தாலும் சின்மயி ஆர்வத்துடன் பங்கேற்க இசைவளித்ததாக அவர் தெரிவித்தார்.
இது கேட்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், இதற்கான ஏற்பாடுகள், திட்டமிடல்கள் போன்றவற்றுக்காகப் பெண்கள் பல நாள்களாக உழைத்து வருவதையும் அவர் சுட்டினார்.
அண்மையில் சின்மயி மேடையில் பாடியதால் பிரபலமடைந்த ‘முத்தமழை’ எனும் பாடலின் பெயரிலேயே இந்நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்ததாகச் சொன்னார் அவர்.
“ஊடகம், நிகழ்ச்சி உருவாக்கம் ஆகியவை பெரும்பாலும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறை என்பது பொதுவான கருத்து. சிங்கப்பூரில் முதன்முறையாக முழுமையாகப் பெண்கள் வழிநடத்தும் நிகழ்ச்சியில் பங்காற்றுவதில் பெருமை,” என்றார் நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான ஜெசிந்தா சுரேஷ்.
“இது எந்த அளவிற்குச் சிரமம் மிகுந்ததோ அந்த அளவு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இது பெண்கள் இணைந்து பணியாற்றும் ஒருவித குழு மனப்பான்மையை மேம்படுத்துகிறது. ஆண்களுக்கும் இப்பயணத்தில் இடம் இருந்தாலும், முழுமையாக ஏற்பாடு செய்து வழிநடத்துகிறோம். இதற்குப் பெண் வலிமையைப் பேசும் பாடகரும் பங்கேற்பது சிறப்பானது. இதற்குச் சமூகப் பங்காளிகளும் ஆதரவளிக்கின்றனர்,” என்றார் அவர்.
“பொதுவான இசை நிகழ்ச்சியைப் போலல்லாமல், இது மாறுபட்ட நிகழ்ச்சி என்பதை மக்களிடம் சென்று சேர்ப்பதில் சற்று சிரமம் இருந்தாலும், நேரில் வந்து பார்ப்பவர்கள் அதன் சிறப்பை உணர்வார்கள்,” என்று பரிமளா நம்பிக்கை தெரிவித்தார்.
“இது சுவாரசியமான அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை,” என்றார் சங்கீதா.
பலரும் ஆதரவளிக்கும்போது சிங்கப்பூரிலும் சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என்பது ஜெசிந்தாவின் விருப்பம்.

