கோலாகலமாகத் தொடங்கிய அனைத்துலகத் தமிழ் நாடக விழா

கோலாகலமாகத் தொடங்கிய அனைத்துலகத் தமிழ் நாடக விழா

2 mins read
b513e30d-78b3-47a0-9cc1-47fcf8a53f25
‘நாடகமிக்’ விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், விழாவில் இணையும் அமைப்புகளுக்கு நினைவுப் பொருள்களை வழங்கினார். - படம்: அகம் நாடகக் குழு
Google News Preferred Icon

எட்டு நாடகங்கள், ஆறு பட்டறைகள், ஒரு கருத்தரங்கு என 10 நாள்களுக்குக் கலை ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ள ‘நாடகமிக்’ எனும் அனைத்துலகத் தமிழ் நாடக விழா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) பிரம்மாண்டமாகத் தொடங்கியது.

அகம் நாடகக் குழுவின் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 20லிருந்து 30 வரை நடைபெறும் விழாவின் தொடக்க நிகழ்ச்சி தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க்கில் அமைந்துள்ள அதன் ‘பிளாக் பாக்ஸ்’ அரங்கத்தில் நடந்தேறியது.

விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். - படம்: அகம் நாடகக் குழு

அவருடன் பல்வேறு சமூகத் தலைவர்களும் சிங்கப்பூர் நாடகத்துறையின் முன்னோடி திரு எஸ்.எஸ் சர்மா போன்றோரும் நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். கார்த்திகேயன் சோமசுந்தரம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

சிங்கப்பூர்த் தமிழ் நாடகத்துறையின் முன்னோடி திரு எஸ்.எஸ். சர்மா (வலமிருந்து இரண்டாமவர்) நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
சிங்கப்பூர்த் தமிழ் நாடகத்துறையின் முன்னோடி திரு எஸ்.எஸ். சர்மா (வலமிருந்து இரண்டாமவர்) நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். - படம்: அகம் நாடகக் குழு

இவ்விழா இளையர்களுக்கு மிகவும் முக்கியமானது என்று திரு தினேஷ் கூறினார்.

“‘நாடகமிக்’ இளையர்களுக்கு அவர்களது கலாசாரத்தை உணர்த்தும் ஒரு கண்ணாடி போன்றது. அவர்களது மொழியில், அவர்களது கதைகளையும் அனுபவங்களையும் அவர்களே கண்டு ரசிக்கும் வாய்ப்பு இளையர்களுக்குக் கிடைக்கிறது. அதனால், அவர்களது கலாசாரத்தின்மீதான பற்றும் பெருகக்கூடும்,” என்றார் அவர்.

நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு அங்கங்கள் இடம்பெற்றன. சிங்கப்பூர்த் தமிழ் நாடகத்துறை வரலாற்றைப் பறைசாற்றும் மணல் ஓவியப் படைப்பு ஒன்று பார்வையாளர்களைக் கவர்ந்தது.

நிகழ்ச்சியில் இடம்பெற்ற மணல் ஓவிய படைப்பு.
நிகழ்ச்சியில் இடம்பெற்ற மணல் ஓவிய படைப்பு. - படம்: அகம் நாடகக் குழு

திரு நிரஞ்சன் பாண்டியனின் தயாரிப்பில் உருவான ‘சுவடுகள்’ இசைப் பாடல், நரம்பு, தாள வாத்தியங்களால் வாசிக்கப்பட்டது படைப்புக்குப் பலம் சேர்த்தது.

நிகழ்ச்சியில் அகம் நாடகக் குழுவும் சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையும், கலைத்துறையில் படிப்பை மேற்கொள்ளும் காயத்திரி வரதராஜு, லோச்சனா புரவலன், பிரபா வேலாயுதம், முகேஷ்வரன் புவனேஷ்வரன் ஆகிய நான்கு மாணவர்களுக்கு உதவிநிதிகளை வழங்கின.

விழாவில் பங்கெடுக்கும் சிங்கப்பூர்த் தமிழ்க் கலாசார நிலையம், ஏகேடி நாடகக் குழு, அதிபதி நாடகக் குழு, ட்ரையங்கள் கல்வி ஆலோசனைக் குழு, பிளாக்ஸ்பைஸ் மீடியா, ஆர்ட் காம்பஸ், பர்பல் அவுரா தயாரிப்பு நிறுவனம், டம்மீஸ் டிராமா (இந்தியா), தி லிட்டில் தியேட்டர் (இந்தியா), இந்தியன் இங்க் (நியூசிலாந்து), ரசா தயாரிப்பு நிறுவனம் (இங்கிலாந்து) ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நினைவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

எதிர்காலத்தில் தமிழ் நாடகக் கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து படைப்புகளை உருவாக்கும் தளமாகச் சிங்கப்பூர் திகழவேண்டுமென அகம் நாடகக் குழுவின் நிறுவனரான சுப்பிரமணியம் கணேஷ் விரும்புகிறார்.

“இது போன்ற விழா இதற்கு முன்பு நடந்துள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், இப்போது அதைச் சாத்தியப்படுத்தியிருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது. சிறிய படிகளுடன் தொடங்கும் இந்த விழா எதிர்காலத்தில் நெடுந்தூரம் செல்ல வேண்டுமென விரும்புகிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்