தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல்லினப் பண்பாட்டுப் பிணைப்போடு தொடரும் நல்லிணக்கம்

3 mins read
d027fd58-0cf3-479e-a129-940953a80422
சீனக் குடும்பத்தைச் சேர்ந்த ஜேக்கப் (நடுவில்) இந்தியப் பண்பாட்டோடு மட்டுமின்றி பாட்டி பார்வதியுடனும் (இடது) சித்தி ஷாமலாவுடனும் பின்னிப் பிணைந்துள்ளார்.  - படம்: பே. கார்த்திகேயன்

எட்டு வயதாகும் ஜேக்கப் லீக்கு தோசை என்றால் மிகவும் விருப்பம். அதுவும் தமது அண்டை வீட்டில் வசிக்கும் பாட்டி சுட்டுத்தரும் தோசை ஜேக்கப்பிற்கு பிரியம்.

சீனக் குடும்பத்தைச் சேர்ந்த ஜேக்கப், இந்தியப் பண்பாட்டோடு மட்டுமின்றி தமது இந்திய அண்டை வீட்டாருடனும் நெருக்கம் பாராட்டி வருகிறார்.

கிம் மோவில் வசித்து வரும் 77 வயதாகும் திருவாட்டி பார்வதிக்கு ஜேக்கப் பேரன் போன்றவர்.

திருவாட்டி பார்வதியின் மகள் ஷாமலாவை ஜேக்கப் செல்லமாக சித்தி என்றுதான் அழைப்பார்.

திருவாட்டி பார்வதியும் 47 வயது ஷாமலாவும் ஜேக்கப்பை மூன்று மாதக் குழந்தையிலிருந்து பார்த்து வந்துள்ளனர்.

“முதன்முதலாக ஜேக்கப்பின் பெற்றோர் அவனை எங்கள் வீட்டிற்கு அழைத்துவந்து காட்டியபோது ஜேக்கப் மூன்று மாதக் குழந்தை. ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரைப் புத்தாண்டு நாளன்று அவன் எங்கள் வீட்டுக்கு வந்தான்,” என்று ஷாமலா உணர்ச்சிபொங்க சொன்னார்.

குழந்தையாக இருந்தபோது ஜேக்கப்பைத் தூக்கிக் கொஞ்சும் ஷாமலா.
குழந்தையாக இருந்தபோது ஜேக்கப்பைத் தூக்கிக் கொஞ்சும் ஷாமலா. - படம்: ஷாமலா

அன்றிலிருந்து இன்று வரை ஜேக்கப் இவர்களின் வீட்டுக்கு வராத நாள்களே இல்லை.

திருவாட்டி பார்வதியைப் பாட்டி என்றும் அவரின் கணவரைத் தாத்தா என்றும் தமிழில் செல்லமாக அழைக்கும் ஜேக்கப், பாட்டி சுட்டுத்தரும் தோசையை சிவப்புச் சர்க்கரையுடன் தொட்டுச் சாப்பிட விரும்புவார்.

பாட்டி சுட்டு தந்த தோசையை சித்தியுடன் சாப்பிடும் ஜேக்கப்.
பாட்டி சுட்டு தந்த தோசையை சித்தியுடன் சாப்பிடும் ஜேக்கப். - படம்: அனுஷா செல்வமணி

தோசையுடன் சமோசாவையும் சுவைக்கும் ஜேக்கப், தமிழில் 1 முதல் 20 வரை எண்ணக் கற்றுக்கொண்டதும் வியக்க வைக்கிறது.

ஜேக்கப்பின் பாட்டிக்கும் தாங்கள் சமைக்கும் கோழிக் குழம்பும், தக்காளிச் சட்னியும் விருப்பம் என்று ஷாமலா சொன்னார்.

“ஜேக்கப் என்னை சித்தி என்று அழைத்தபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் ஷாமலா.

ஷாமலாவின் சகோதரியின் பிள்ளைகள் மலேசியாவில் உள்ளனர். அவர்கள் விடுமுறைக்கு சிங்கப்பூர் வரும்போது அவர்களுடன் ஜேக்கப்பையும் சேர்த்துக்கொள்கிறார் ஷாமலா.

சகோதரியின் பிள்ளைகள் மலேசியாவில் வளர்வதால் அவர்களின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் ஷாமலாவால் பார்க்க முடிவதில்லை.

ஆனால், ஜேக்கப்பைச் சிறுவயதிலிருந்து பார்த்துவரும் ஷாமலா, அவரின் வளர்ச்சியை நன்றாகக் காண முடிவதாகச் சொல்கிறார்.

தமிழ்ப் படங்கள், பாடல்கள் ஆகியவற்றையும் விரும்பிப் பார்க்கும் ஜேக்கப், தனக்குப் பிடித்த தமிழ் நடிகர் விஜய் என்றார்.

திருவாட்டி பார்வதி, ஜேக்கப்பிற்கு ‘நிலா நிலா ஓடி வா’ என்ற பாடலையும் பாட கற்றுத்தந்துள்ளார்.

“எனக்கு ஜிமிக்கி பொண்ணு, ரஞ்சிதமே பாடல் மிகவும் பிடிக்கும். நான் சித்தியுடன் இணைந்து விளையாட்டுகள் விளையாடுவேன்,” என்று புன்முறுவலுடன் சொன்னார் ஜேக்கப்.

இவர்களின் பிணைப்பு, வீட்டோடு நின்றுவிடுவதில்லை. ஷாமலா ஜேக்கப்பை பாத்தாம் தீவிற்கும் ஜோகூருக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.

உலு பாண்டான் சமூக மன்றத்தில் அடித்தள தலைவராக இருக்கும் ஷாமலா சிங்கப்பூரின் பல்லினப் பண்பாட்டை அண்டை வீட்டாருடன் தான் கொண்டுள்ள உறவு நன்கு பறைசாற்றுவதாகக் கூறினார்.

“எனது குழந்தைப் பருவத்தில் சீனப் பாட்டி ஒருவர் எங்களுக்கு அண்டை வீட்டாராக இருந்தார். ஜேக்கப் இப்போது எங்களுடன் இருப்பதுபோல நான் அந்தப் பாட்டியுடன் இருந்தேன்,” என்று நினைவுகூர்ந்தார் ஷாமலா.

திருவாட்டி பார்வதியும் சமூக மன்ற நிகழ்ச்சிகளில் முழு ஈடுபாட்டுடன் இருப்பவர். மக்கள் கழகம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு ஜேக்கப்பையும் அழைத்து செல்லும் திருவாட்டி பார்வதி, இதனால் அண்டை வீட்டார் பிணைப்பு வலுப்படுவதாகக் கூறினார்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் அண்டை வீட்டாரின் முகத்தைக்கூட பலரால் பார்க்க முடிவதில்லை.

ஜேக்கப்பிற்கு தங்களின் இல்லக் கதவுகளைத் திறந்த ஷாமலாவும் அவரது பெற்றோரும் அவனுக்குத் தங்கள் வீட்டில் எப்போதும் இடமுண்டு என்கின்றனர்.

ஜேக்கப்பின் பெற்றோரும் இந்த உறவைப் பெரும்பேறாகக் கருதுகின்றனர்.

“ஷாமலாவிடம் நான் எப்போதும் ஜேக்கப்பிற்குத் தமிழ் சொல்லித் தருமாறு கேட்பேன். சிங்கப்பூரில் இருப்பதால் ஜேக்கப் பல்லினப் பண்பாட்டை அறிந்துகொள்வது நல்லது. நாங்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போதுகூட எங்கள் வீட்டுச் சாவியை ஷாமலாவிடம் தந்து, வீட்டைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டுச் செல்வோம்,” என்கிறார் ஜேக்கப்பின் தாயார் அலிசியா, 46.

சீனக் குடும்பத்தைச் சேர்ந்த ஜேக்கப் (நடுவில்) இந்தியப் பண்பாட்டோடு மட்டுமின்றி பாட்டி பார்வதியுடனும் (இடது) சித்தி ஷாமலாவுடனும் பின்னிப் பிணைந்துள்ளார். 
சீனக் குடும்பத்தைச் சேர்ந்த ஜேக்கப் (நடுவில்) இந்தியப் பண்பாட்டோடு மட்டுமின்றி பாட்டி பார்வதியுடனும் (இடது) சித்தி ஷாமலாவுடனும் பின்னிப் பிணைந்துள்ளார்.  - படம்: பே. கார்த்திகேயன்
குறிப்புச் சொற்கள்