இந்திய முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளியல், தொழில்முனைவு, தலைமைத்துவம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘இந்திய முஸ்லிம் மாற்றுக் கட்டமைப்பு 2030’ (Indian Muslim Transformational Framework – IMTF 2030) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
‘ஒரே அடையாளம் ஒரே இலக்கு ஒரே சமூகம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, இந்திய முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான முக்கிய மைல் கற்களாகக் கருதப்படுகிறது.
மலேசியா முழுவதிலுமிருந்து சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், இளம் பேராளர்கள் பிரதிநிதிகள், அமைப்புகள் பலவற்றின் நிர்வாகிகள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
சிங்கப்பூர்த் தொழில்முனைவரும் ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சிராஜுதீன் செய்யது முஹம்மது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்திய முஸ்லிம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக 100,000 ரிங்கிட் கல்வி ஆதரவு நிதியை வழங்குவதாகவும் அவர் நிகழ்ச்சியின்போது அறிவித்தார்.
திறமையுள்ள, ஆனால் நிதி வசதி குறைந்த மாணவர்களின் உயர்கல்வியை ஆதரிக்கும் ‘மாணவர் கல்வி தத்தெடுப்பு திட்டம்’ வழி தமது பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
சிங்கப்பூரில் மட்டுமன்றி, ஆசியா உலக அளவில் பல்வேறு சமூகப் பொறுப்பு முயற்சிகளை முன்னெடுத்து வரும் குழுமம், கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்திற்கான முதலீடுகளை மேற்கொள்வதிலும் உறுதியாகச் செயல்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியின்போது உரையாற்றிய பிரதமர் அன்வார் இப்ராகிம், மலேசிய இந்திய முஸ்லிம் சமூகம் நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக பாராட்டினார்.
சிறுபான்மை சமூகமாக இருந்தாலும் உறுதியான மனப்பாங்கு, திறமை, அர்ப்பணிப்பு, மாற்றம் ஆகியவற்றை உருவாக்கும் ஆற்றல் இந்திய முஸ்லிம் சமூகத்திடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்தத் திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், அது மலேசியாவின் ‘மடானி’ தேசிய முன்னேற்றக் கொள்கைக்கு வலுசேர்க்கும் சமூக மாற்ற முயற்சியாக அமையும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்திய முஸ்லிம் சமூகத்தினர் தங்களது உரிமைகளின் முன்னேற்றத்தை முன்னிறுத்துவதோடு, பிற இனங்களுடனான நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் பாலமாகவும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என பிரதமர் அன்வார் அழைப்பு விடுத்தார்.

