‘என் தந்தை என்றுமே என் முதல் ரசிகர்’

‘என் தந்தை என்றுமே என் முதல் ரசிகர்’

2 mins read
0739f58a-c19e-4e8a-8beb-36c2089aabc5
தம் தந்தையோடு இஷா பர்வீன் (வலது). - படம்: இஷா பர்வீன்

அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இன்னும் ஐந்து நாள்களே இருந்த நிலையில், இஷா பர்வீன் தம்முடைய தந்தையை இழந்தார்.

மருத்துவமனையில் மூன்று நாள்களாக உயிருக்குப் போராடிய 80 வயது பி.எஸ்.தர்மராஜ், நிமோனியாவால் மாண்டார்.

“மருத்துவமனையில் அப்பாவுடன் செலவழித்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு முக்கியமாக இருந்தது.

“போட்டியின் இறுதி ஒத்திகை மிக முக்கியம் என்பதால் இரண்டரை மணி நேரம் தந்தையை விட்டுச் சென்றேன். நான் திரும்பி வந்து ஐந்தே நிமிடங்களில் தந்தையின் உயிர் பிரிந்தது,” என வருத்தத்துடன் கூறினார் இஷா.

அழகுராணிப் போட்டிக்காக அத்தனை நாள் முழுமூச்சுடன் பயிற்சி செய்துவந்த இஷாவிற்கு உலகமே இருண்டு போனது. போட்டியில் தொடர வேண்டாம் என்றும் தோன்றியது.

எனினும், ‘எந்த காரணத்துக்காகவும் தொடங்கிய செயலைப் பாதியில் விட்டுவிடாதே; முடித்துவிட வேண்டும்’ என்ற தந்தையின் சொற்கள் அவரைத் தொடர்ந்து நடைபோட வைத்தன.

அத்துடன் சவால்மிக்க நேரத்திலும் தொடர்ந்து போராட அவருக்கு அழகுராணிப் போட்டி ஏற்பாட்டாளர்களும் சக போட்டியாளர்களும் ஊக்குவித்தனர்.

“சக போட்டியாளர்களின் தந்தையரும் என்னைத் தங்கள் மகளாகக் கருதி ஆறுதல் கூறியது என்னை மிகவும் நெகிழ வைத்தது,” என்றார் இஷா.

தமது மனத்திடத்திற்குப் பரிசாக கடந்த 18ஆம் தேதி, ‘அனைத்துலக ஆசிய பசிபிக் அழகி’, ‘திருமதி பிரபலம்வாய்ந்த அழகி’ ஆகிய பட்டங்களைப் பெற்றார் இஷா. இரு பட்டங்களும் தம்முடைய தந்தைக்குச் சமர்ப்பணம் என்றார் அவர்.

தம் வெற்றிப் பரிசையும் கிரீடத்தையும் தந்தைக்கு அர்ப்பணித்தார் இஷா.
தம் வெற்றிப் பரிசையும் கிரீடத்தையும் தந்தைக்கு அர்ப்பணித்தார் இஷா. - படம்: இஷா பர்வீன்

“என் தந்தை என்றுமே என் முதல் ரசிகர். என்னைப் பற்றியோ அல்லது என் சகோதாரர்கள் பற்றியோ பத்திரிகையில் ஏதேனும் வெளிவந்தால் அவர் அதை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வார். இந்த வெற்றியும் அவரைப் பெருமைப்பட வைத்திருக்கும் என நம்புகிறேன்,” எனக் கண்ணீர் மல்கக் கூறினார் இஷா.

“என் தந்தை ஒரு சகலகலா வல்லவன். சிறுவயதிலேயே கலைமீது ஆர்வம் கொண்டவர். தன்னைப் பற்றி யாரிடமும் பெருமையாகப் பேசிக்கொள்ளமாட்டார்.

“சிறுவயதில் எனக்கும் என் சகோதரிகளுக்கும் பல வாழ்க்கைத் திறன்களைக் கற்றுத் தந்தார்,” என்றார் இஷா.

தந்தையை முன்மாதிரியாகக் கருதித் தம்முடைய இரு மகள்களுக்குத் தாமும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ உறுதி பூண்டுள்ளார் இஷா.

‘திருமதி சிங்கப்பூர் கிலோபல் யுனிவர்ஸ்’ அழகுராணிப் போட்டியில் ‘அனைத்துலக ஆசிய பசிபிக் அழகி’, ‘திருமதி பிரபலம்வாய்ந்த அழகி’ என்ற பட்டங்களைப் பெற்றார் இஷா.
‘திருமதி சிங்கப்பூர் கிலோபல் யுனிவர்ஸ்’ அழகுராணிப் போட்டியில் ‘அனைத்துலக ஆசிய பசிபிக் அழகி’, ‘திருமதி பிரபலம்வாய்ந்த அழகி’ என்ற பட்டங்களைப் பெற்றார் இஷா. - படம்: லூமியர் இண்டர்நேஷனல்
தன் தந்தை கலைமீது ஆர்வம் கொண்ட சகலகலா வல்லவன் என்றார் இஷா.
தன் தந்தை கலைமீது ஆர்வம் கொண்ட சகலகலா வல்லவன் என்றார் இஷா. - படம்: இஷா பர்வீன்
என் தந்தை என்றுமே என் முதல் ரசிகர். என்னைப் பற்றியோ அல்லது என் சகோதாரர்கள் பற்றியோ பத்திரிகையில் ஏதேனும் வெளி வந்தால் அவர் அதை உடனே பாதுகாப்பாக வைத்துக்கொள்வார். இந்த வெற்றியும் அவரைப் பெருமைப்பட வைத்திருக்கும் என நம்புகிறேன்.
இஷா பர்வீன்
குறிப்புச் சொற்கள்