தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தந்தையர் தினத்தில் 100வது பிறந்தநாள்

4 mins read
c76dcdf5-4ea4-4e6f-92e0-e3743ca545fd
புரோப்நெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் இஸ்மாயில் கஃபூர் தமது தந்தை அப்துல் கஃபூரின் 100வது பிறந்தநாள் விழாவைத் தந்தையர் தினத்தன்று கொண்டாடினார். - படம்: எஸ்பிஎச் மீடியா

தந்தையர் தினம் திரு அப்துல் கஃபூர் முகம்மது காசிமுக்கு இரட்டிப்புக் கொண்டாட்டமாக அமைந்தது.

தந்தையர் தினத்தன்று இரண்டாவது மகன் அலி கஃபூர் வந்தபோது, மதிய உணவுக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார் என்றே அவர் நினைத்தார்.

பீச் ரோட்டில் அமைந்துள்ள பார்க்ராயல் ஹோட்டலின் ஸ்கை பால்ரூமுக்குள் நுழைந்தபோது அவருக்கு ஆனந்த அதிர்ச்சி.

அரங்கத்தின் கதவுகள் திறந்ததும், சிவப்புக் கம்பளத்தில் மகன்கள் திரு அப்துல் கஃபூரை சக்கர நாற்காலியில் தள்ளி உள்ளே அழைத்துவர, அங்கு கூடியிருந்த குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அணுக்கமான நண்பர்கள் என ஏறத்தாழ 80 பேர் ரோஜா மலர்களைத் தூவி அவரை வரவேற்றனர்.

விருந்தினர்கள் ரோஜா மலர்களைத் தூவ திரு அப்துல் கஃபூர் அரங்கினுள் சக்கர நாற்காலியில் வந்தார்.
விருந்தினர்கள் ரோஜா மலர்களைத் தூவ திரு அப்துல் கஃபூர் அரங்கினுள் சக்கர நாற்காலியில் வந்தார். - படம்: எஸ்பிஎச் மீடியா

ஏழு வயதில் செங்கல் சுமந்து இருபது வயதில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்து மளிகைக்கடை நடத்தி, செய்தித்தாள் விநியோகித்து ஓரறை வாடகை வீட்டில் மனைவியுடன் ஆறு குழந்தைகளை வளர்த்து ஏழ்மையிலிருந்து குடும்பத்தை முன்னுக்குக்கொண்டு வந்த திரு அப்துல் கஃபூரின் 100 வயது பிறந்தநாளை குடும்பத்தினர் அன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

தந்தையர் தினத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார் திரு அப்துல் கஃபூர்.
தந்தையர் தினத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார் திரு அப்துல் கஃபூர். - படம்: சாவ் பாவ்

“என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்துள்ள அனைத்தும் என் தந்தையின் அர்ப்பணிப்பால்தான் சாத்தியமானது,” என்று கண்ணீர் மல்க மேடையில் உருக்கமான உரையாற்றினார் சிங்கப்பூரின் ஆகப் பெரிய சொத்து முகவையான ‘புரோப்நெக்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநரான திரு கஃபூரின் மகன் இஸ்மாயில் கஃபூர். 

“கடின உழைப்புக்கும் கட்டுக்கோப்பான வாழ்வுக்கும் மற்றவர்களுக்கு உதவும் இரக்க குணத்துக்கும் என் தந்தையே காரணம். அதிகாலை எழுந்து அவருடன் செய்தித்தாள் விநியோகித்து கடையில் உதவுவதையே இளம்பருவ வாழ்க்கையாக இருந்தது.

“அந்தக் கட்டுப்பாடான வாழ்க்கைதான் பின்னர் ராணுவத்திலும் இப்போது தனியார் துறையிலும் சிறக்க வழிவகுத்துள்ளது,” என்று தந்தையின் வளர்ப்பை மெச்சினார் அவர். 

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி மெஹருன்னிசா காதர் மைதீன், 78, தைத்துக் கொடுத்த கால்சட்டையை இன்றும் அணிகிறார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இலவசமாக வழங்கிய குவளையில்தான் இப்போதும் காபி குடிக்கிறார் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

“அப்பாவின் 100 வயது நிறைவைக் கொண்டாடுகிறோம் என்பதுடன், எங்கள் குடும்பத்தை வழிநடத்திய கொள்கைகளை இறுக்கிப்பிடித்து வந்துள்ள அவரது வாழ்க்கையை நினைவுகூர்ந்து அவர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பார் என்று நினைத்துப்பார்க்கவும் இந்தக் கொண்டாட்டம் வாய்ப்பாக அமைந்தது,” என்றார் திரு இஸ்மாயில் கஃபூர். 

திரு இஸ்மாயிலின் நான்கு சகோதரர்களும் சகோதரியும் காணொளி மூலம் தந்தைக்கு வாழ்த்துகளையும் செய்தியையும் பகிர்ந்தனர்.

தியோங் பாருவில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திலிருந்து காணொளி பதிவுசெய்த இரண்டாவது மகன் அலி கஃபூர், தம்மை பாலர் பருவ நாட்களில் அங்கு அழைத்துவந்து விளையாடிய இடத்திலேயே தாம் தமது பிள்ளைகளையும் தற்போது பேரப் பிள்ளைகளையும் அழைத்து வருவதாகக் கூறினார். 

திரு கஃபூருக்கு 16 பேரப்பிள்ளைகளும் ஐந்து கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர். 

சிங்கப்பூரின் ஆகப் பெரிய சொத்து முகவையான ‘புரோப்நெக்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் இஸ்மாயில் கஃபூர் தமது தந்தை அப்துல் கஃபூரின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம். 
சிங்கப்பூரின் ஆகப் பெரிய சொத்து முகவையான ‘புரோப்நெக்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் இஸ்மாயில் கஃபூர் தமது தந்தை அப்துல் கஃபூரின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்.  - படம்: சாவ் பாவ்

“இடமும் அதைச் சுற்றிய நினைவுகளும் மாறவில்லை. அதைப் போல என் தந்தை வறுமையில் இருந்தபோதும் சரி, தற்போது அனைத்து வசதிகளும் இருக்கும்போதும் சரி, தமது கொள்கைகளையும் வாழ்க்கை விழுமியங்களையும் என்றும் மாற்றிக்கொண்டதே இல்லை,” என்றார். 

திரு கஃபூரின் மற்றொரு மகனான ஐக்கிய நாடுகள் சபைக்கான சிங்கப்பூரின் நிரந்தரப் பிரதிநிதியாக இருக்கும் புர்கான் கஃபூர், வேலை காரணமாக நியூயார்க்கிலிருந்து வர முடியவில்லை என்றும் அடுத்த சில மாதங்களில் வரும்போது மீண்டும் ஒன்றுகூடுவோம் என்றும் தன் தந்தைக்கு அளித்த காணொளிச் செய்தியில் கூறினார். 

தங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக வலுவான அடித்தளம் அமைத்துக்கொடுத்ததற்குத் தங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். 

இளைய மகன் நிஸாம் கஃபூர், தன் தந்தை வாழ்க்கையில் கடினமாக உழைத்துச் சேர்த்த அனைத்து சொத்துகளையும் சமூகத்துக்கே கொடுத்துவிட்டதைக் குறிப்பிட்டுப் பேசினார். 

தமது சொந்த ஊரான தமிழகத்தின் குடவாசலில் கட்டிய வீட்டை பெண்கள் சமயக் கல்விப் பள்ளிக்கு அர்ப்பணித்துள்ளார் திரு கஃபூர். அங்கு கிட்டத்தட்ட 300 பெண்கள் பயில்கின்றனர். மேலும், சமுதாயக் கூடம், பள்ளிவாசல், மருந்தகம் என பல்வேறு சமூகத் தேவைகளுக்காகத் தமது சொத்துகளைக் கொடுத்துள்ளார். 

“தமக்கு அணுக்கமான அனைவரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டது என் தந்தைக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எதிர்பாராத இந்தச் சந்திப்பு தன் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியளித்ததாக என்னிடம் பகிர்ந்தார்,” என்று நிஸாம் கூறினார். 

“தமது பெரிய சொத்தே மக்கள் அவரைச் சுற்றி இருப்பதுதான். அதுவே அவருக்கு வலிமை தந்து மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வகைசெய்கிறது,” என்றார் நிஸாம். 

எவ்வளவோ வசதி இருந்தும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துவரும் திரு கஃபூர் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது என்றார் குடும்ப நண்பரான வழக்கறிஞர் சுப்ரா எம். சுப்பையா. மனைவியுடன் நிகழ்ச்சிக்கு வந்த அவர், மேடையில் பாடல் பாடி உற்சாகமூட்டினார்.

50 செட்கள் பிரத்யேகமாகத் தருவிக்கப்பட்டு வந்திருந்தவர்களுக்கு குடும்பத்திற்குத் தலா ஒரு செட் வழங்கப்பட்டன. 
50 செட்கள் பிரத்யேகமாகத் தருவிக்கப்பட்டு வந்திருந்தவர்களுக்கு குடும்பத்திற்குத் தலா ஒரு செட் வழங்கப்பட்டன.  - படம்: சாவ் பாவ்

தந்தையின் 100வது பிறந்தநாளையொட்டி அவரது உருவமும் பெயரும் பொறிக்கப்பட்ட ‘தேநீர் குவளை செட்’ தயாரித்துள்ளனர் குடும்பத்தினர். 

“தேநீர் கலன்கள் காலத்தை வென்று நிலைக்கும் தன்மை கொண்டவை. அதுபோல என் தந்தையின் 100 ஆண்டுகால வாழ்க்கையை அடுத்த பல ஆண்டுகளுக்கு குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் நினைவில் வைத்திருப்பார்கள்,” என்று கூறினார் திரு இஸ்மாயில் கஃபூர். 

குறிப்புச் சொற்கள்