செய்த குற்றத்தை எண்ணி வருந்தி ஒருவர் திருந்த நினைத்தாலும் சமுதாயம் அவரை முழுமனதாக ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிதன்று. முன்னாள் சிறைக் கைதிகளின் புனர்வாழ்வுக்குக் கைகொடுக்கும் ‘சிஃபோபி’ (C4P) என்ற மனநல சிகிச்சை நிலையம், இதை நன்றாக அறிந்துள்ளது.
50 வயது மதிக்கத்தக்க அமீன் (உண்மைப் பெயரல்ல), ஒரு கட்டத்தில் குண்டர் கும்பல் நடவடிக்கைகளாலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்டார். ஆயினும், அவர் இப்போது தமது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக உருமாற்றியதுடன் தொண்டூழியம் ஆற்றுவதிலும் மனநிறைவு காண்கிறார்.
“அமீன் போன்றோர் புள்ளிவிவரங்களோ வழக்கு ஆய்வுகளோ அல்லர். கடுமையான வாழ்க்கைச் சூழலுடன் போராட வேண்டிய அமீனுக்கு, தக்க நேரத்தில் செய்யப்படும் உதவி அவரது வாழ்நாள் முழுவதும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று ‘சிஃபோபி’ அமைப்பின் உருமாற்ற நீதிக்கான தலைமை ஆலோசகர் கோபால் மஹே தெரிவித்தார்.
தனித்தனியே நடத்தப்படும் ஆலோசனைகளின் மூலம் முன்னாள் குற்றவாளிகளை ஆராயும் திரு கோபால், அவர்களது கடந்தகால அனுபவங்களையும் தற்போதைய தேவைகளையும் கண்டறிவார்.
2003ல் நிறுவப்பட்ட ‘சிஃபோபி’, சமூகத்தில் நலிவுற்றோருக்கு குறிப்பாக சட்டத்தை மீறுவோருக்கான மனநல ஆலோசனையை நல்கி வருகிறது. நொந்து, நொறுங்கி உடையும் தருணங்களில் இத்தகைய ஆலோசனைகள் சிறந்த தாக்கத்தையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தும் என்பது இந்த அமைப்பின் கொள்கை.
இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது முதல், பல்வேறு தொடர்புடைய அமைப்புகளுடனான பங்களிப்பு மூலம் கிட்டத்தட்ட 1,000 பேருக்குச் சேவையாற்றியுள்ளது.
2011ல் ‘சிஃபோபி’, சிங்கப்பூர் சிறைத்துறையுடன் இணைந்து ‘வாழ்வைப் புதுப்பிக்கும் திட்டம்’ (Rebuilding Lives Program) என்ற ஒன்றைத் தொடங்கியது. தீய பழக்கத்திற்கு அடிமையாதல், கடுமையான மனக்காயங்கள், பிரச்சினைக்குரிய போக்குகள் ஆகியவற்றைக் கையாள்வதற்கு ஆதாரம் அடிப்படையில் அமைக்கப்பட்ட சிகிச்சைமுறைகளைப் பயன்படுத்தி வருகிறது இந்தத் திட்டம்.
2022ல் நீதிமன்றத்துடன் பங்காளித்துவத்தில் இணைந்த ‘சிஃபோபி’, பொறுப்பேற்பு, திருத்தம் மற்றும் உருமாற்றத்திற்கான ‘பேக்ட்’ (PACT) என்ற திட்டத்தைத் தொடங்கியது. தண்டனையை எதிர்நோக்கும் குற்றவாளிகளுக்கான மனநல ஆதரவைத் தர முற்படுகிறது.
“சிறையின் சுவர்களைத் தாண்டி அவர்களைச் சமுதாயத்துடன் சுமுகமாக ஒருங்கிணைக்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளோம். மற்றவர்களுக்கு உதவுவது மட்டுமன்றி எப்படி நாம் கொண்டுள்ள விழுமியங்களை நடைமுறையில் காண்பிப்பது என்பதிலும் நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்றார் திரு கோபால்.