உங்கள் அன்புக்குரியவரின் குரல் போலவே ஒலிக்கிறது, பேசுவது உண்மையில் அவர்தானா?

உங்கள் அன்புக்குரியவரின் குரல் போலவே ஒலிக்கிறது, பேசுவது உண்மையில் அவர்தானா?

படம்: செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் எஸ். வெங்கடேஷ்வர்லு நாயுடு

22 Oct 2026 - 6:00 am

3 mins read

உங்கள் தொலைபேசி ஒலிக்கிறது.

மறுமுனையில் பேசுபவரின் குரல் உங்கள் பிள்ளை, வாழ்க்கைத்துணை, பெற்றோர் அல்லது நெருங்கிய நண்பரின் குரல் போலவே இருக்கிறது.

“அவசரமாக ஒரு பிரச்சினை. உடனே கொஞ்சம் பணம் அனுப்ப முடியுமா?”

அந்தக் குரல் உங்களுக்கு மிகவும் பரிச்சயமானது.

ஆனால், இப்போது நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி ஒன்று உள்ளது.

பேசுவது உண்மையில் அவர்தானா?

செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பம் பல வியக்கத்தக்க புதிய திறன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மனிதர்களின் பேச்சு, படங்கள், காணொளிகள் ஆகியவற்றை மிகவும் இயல்பாக உருவாக்கக்கூடிய தொழில்நுட்பங்களும் அவற்றில் அடங்கும்.

செயற்கை நுண்ணறிவால் பல நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால், மற்ற தொழில்நுட்பங்களைப் போலவே இதையும் தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

கேட்கும் குரலையெல்லாம் நம்ப முடியாத காலம்

ஒருவரின் குரலைப் போலவே ஒலிக்கும் பேச்சைச் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்க முடியும். அதேபோல், வன்போலித் (Deepfake) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவர் உண்மையில் சொல்லாத அல்லது செய்யாத ஒன்றை அவர் சொன்னது போலவோ செய்தது போலவோ காட்டும் படங்களையும் காணொளிகளையும் உருவாக்கலாம்.

இது, நம்மில் பலர் வாழ்நாள் முழுவதும் நம்பிவந்த ஓர் அடிப்படையான எண்ணத்தையே மாற்றுகிறது.

நமக்குப் பரிச்சயமான குரலைக் கேட்டவுடன், பேசுவது நமக்குத் தெரிந்த நபர்தான் என்று இயல்பாகவே நம்புகிறோம்.

ஆனால், செயற்கை நுண்ணறிவு யுகத்தில் ஒருவரின் குரலை அடையாளம் காண்பது மட்டுமே அவர் உண்மையில் பேசுகிறார் என்பதை உறுதிப்படுத்தப் போதுமானதாக இருக்காது.

குறிப்பாக, பணம் அல்லது முக்கியமான தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு எதிர்பாராத கோரிக்கை வந்தால் கூடுதல் கவனம் அவசியம்.

மீண்டும் அழைத்துச் சரிபாருங்கள்

உங்கள் குடும்ப உறுப்பினர் என்று கூறிக்கொண்டு, அறிமுகமில்லாத தொலைபேசி எண்ணிலிருந்து ஒருவர் அழைத்து அவசரமாகப் பணம் கேட்பதாக வைத்துக்கொள்வோம்.

உடனடியாகப் பணத்தை அனுப்பாதீர்கள்.

அந்த உரையாடலை முடித்துவிட்டு, உங்கள் தொலைபேசியில் ஏற்கெனவே சேமித்து வைத்துள்ள குடும்ப உறுப்பினரின் எண்ணுக்கு நீங்களே அழையுங்கள்.

அவரிடம் ஓர் எளிய கேள்வியைக் கேளுங்கள்.

“சற்று முன்பு நீங்கள்தான் என்னை அழைத்தீர்களா? எனக்குச் செய்தி அனுப்பினீர்களா?”

இவ்வாறு தனியாகத் தொடர்புகொண்டு சரிபார்ப்பதன் மூலம், ஆள்மாறாட்ட மோசடி முயற்சியை விரைவாகக் கண்டறிய முடியும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு மட்டுமே தெரிந்த ஓர் எளிய கேள்வி அல்லது ரகசியச் சொற்றொடரை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ளலாம். வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில், பேசுபவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த இது உதவும்.

ஆனால், அந்த ரகசியத் தகவல் உங்கள் வங்கிக் கணக்கின் தனிநபர் அடையாள எண் (PIN), கடவுச்சொல், தேசிய அடையாள அட்டை எண் (NRIC) அல்லது வேறு எந்த முக்கியமான தனிப்பட்ட தகவலாகவும் இருக்கக்கூடாது.

உங்கள் கண்களையும் காதுகளையும் மட்டும் நம்பாதீர்கள்

இந்தப் பாதுகாப்புப் பாடம், செயற்கை நுண்ணறிவு மூலம் குரலைப் போலியாக உருவாக்கும் மோசடிகளுக்கு மட்டுமன்று.

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் மேலும் இயல்பாக மாறிவரும் நிலையில், இணையத்தில் நாம் காணும், கேட்கும் தகவல்களை அணுகும் விதத்திலும் புதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

ஒருவரின் குரலைக் கேட்பதால் மட்டும் பேசுவது அவர்தான் என்பதை உறுதிப்படுத்த முடியாது.

ஒருவர் காணொளியில் தோன்றுவதால் மட்டும் அந்தக் காணொளி உண்மையானது என்பதையும் உறுதிப்படுத்த முடியாது.

இதற்காக இணையத்தில் நாம் பார்க்கும் அனைத்தையும் சந்தேகத்துடன் அணுக வேண்டும் என்றில்லை.

மாறாக, பணம், கடவுச்சொற்கள், தனிப்பட்ட தகவல்கள் அல்லது அவசரமாகச் செயல்பட வேண்டிய கோரிக்கைகள் தொடர்பாக வழக்கத்திற்கு மாறான ஏதாவது நிகழ்ந்தால், நடவடிக்கை எடுக்குமுன் வேறொரு தொடர்பு வழியாக அதைச் சரிபார்க்க வேண்டும்.

தொழில்நுட்பம் எவ்வளவு மாறினாலும், இந்த எளிய பழக்கம் நம்மைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்த வார மின்னிலக்கப் பாதுகாப்புக் குறிப்பு

உங்கள் அன்புக்குரியவர் எதிர்பாராத விதமாகப் பணம் கேட்டால், நீங்கள் ஏற்கெனவே அறிந்துள்ள அவரது தொலைபேசி எண்ணுக்கு மீண்டும் அழைத்துச் சரிபாருங்கள்.

செயற்கை நுண்ணறிவால் ஒருவரின் குரலைப் போலியாக உருவாக்க முடியும். ஆனால், அதைச் சரிபார்ப்பது உங்கள் கையில்தான் உள்ளது.

கட்டுரையாளர்: எஸ். வெங்கடேஷ்வர்லு நாயுடு, உதவி இயக்குநர், தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புச் செயலாக்கத் துறை, தேசியக் கல்விக் கழகம்.
குறிப்புச் சொற்கள்
தொலைபேசிசெயற்கை நுண்ணறிவுஏஐ